சொல்லுங்க தம்பி
சொல்லுங்க தம்பி
கனி சென்னையிலிருந்து சொந்த ஊரான திருச்சி வந்து பஸ் ஸ்டாண்டில் இறங்கி அவன் ஏரியாவிற்கு செல்லும் பேருந்தை தேடி பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
அவனது ஏரியாவிற்கு செல்லும் பேருந்து வந்தவுடன் அதில் ஏறிய கனி ப்ளூடூத் ஹெட்செட் மூலம் அவனது திருச்சி நண்பர்களிடம் பேசிக்கொண்டே பர்ஸில் டிக்கெட் வாங்க சில்லறை தேடிக் கொண்டிருந்தான்.
பேசி முடித்து விட்டு கனி அமர செல்ல அதற்குள் அவன் ஏரியாவே வந்து விட்டது.
பஸ்ஸில் இருந்து இறங்கிய கனி பைகளுடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அப்படி செல்லும் வழியில் அவன் கண்கள் தானாகவே அவன் சிறு வயதில் இருந்து முடி திருத்தும் கடையை பார்த்தது.
கனி கடைக்கு உள்ளே பார்க்க அவனுக்கு தெரிந்த ரவி அண்ணன் டீ குடித்து கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தார்.
கனி வீட்டிற்கு சென்று அன்று பெற்றோருடன் நேரத்தை செலவழித்தான்.
அடுத்த நாள் காலை, கனி முடி திருத்தி விட்டு வருவதாக கூறிவிட்டு கிளம்பினான்.
ரவி அண்ணன் கடைக்குள் சென்ற கனி அவர் முன் நின்றான்.
உட்காருங்க என சொல்லிவிட்டு திரும்பி முடி வெட்டும்போது போர்த்தும் துணியை எடுத்து விட்டு திரும்பிய ரவி கனியின் முகத்தை பார்த்து விட்டு கனி! வா பா என்றார்.
கனியை அமர சொல்லி எப்படி பா இருக்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? என கேட்டு விட்டு முடி திருத்த ஆரம்பித்தார் ரவி.
கனியிடம் இப்ப வேலைக்கு போறியா பா? என கேட்க, ஆமா அண்ணே சென்னையில் என கனி பதில் சொன்னான்.
சொல்லுங்க தம்பி எப்படி இப்ப முடி வெட்டனும்? என ரவி கேட்க, கனி எப்படி வெட்ட வேண்டும் என கூறினான்
முடி திருத்தி முடித்த பின்பு கனி கண்ணாடியில் அவனுக்கு திருத்தி இருந்த முடியை பார்த்து போது ஆச்சரியமடைந்தான், அவனுக்கு சிறுவயது முடி திருத்தும் ரவி அண்ணன் அவன் கேட்டபடி முடி திருத்தியதோடு மட்டுமல்லாமல் அவன் தலைக்கு எப்படி திருத்தினால் முடி சமமாக தெரியுமோ அதே போல் முடி திருத்தியிருந்தார்.
கனி அவரது கையில் முடி திருத்தியதிற்காக பணம் தந்துவிட்டு சரி அண்ணே என கிளம்பினான்.
ரவி கடையை விட்டு கனி வெளியே சென்று பின் அவனை ஒரு முறை பார்க்க வெளியே வந்தார்.
அப்பொழுது கனியை பார்த்த ரவிக்கு சிறு வயதில் முதல் முறை கனி அவன் அப்பாவுடன் கடைக்கு வந்த ஞாபகம் வர அதை நினைத்து பார்த்து விட்டு சிறு புன்னகையுடன் தனது வேலையை தொடர கடைக்கு உள்ளே சென்றார்.
