மழைப்பொழிவு
மழைப்பொழிவு
காலை 08:30 மணி,
காலை டிவியில் ஓடிய செய்திகளை பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தார் சண்முகம்.
சண்முகத்தின் மகன் பரத் தலை சீவி கொண்டே நடந்து டிவி பக்கத்தில் வந்து நிற்க பின்னால் இருந்து வந்த அவன் அம்மா அவனை கூப்பிட்டு “ஏன் டா? ஒரே இடத்தில் நின்னு தலை சீவ மாட்டியா? வீடு முழுக்க உன் முடி கடக்குமா?” என திட்டி விட்டு சென்றார்.
பரத் மீண்டும் அங்கேயே நின்று டிவி பார்க்க அவன் அம்மா அடுப்படியில் இருந்து “ஏங்க அவன் இன்னும் அங்க டிவி பக்கத்துல தானே நிற்கிறான்” என கேட்க பரத் உடனே அங்கிருந்து நகர்ந்து சென்று பையில் புத்தகங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
சண்முகம் பரத்திடம், மழை வர மாதிரி இருக்கு குடை, ரெயின் கோட் எல்லாம் எடுத்து வச்சுக்கோ என கூறினார்.
பரத்தை பள்ளியில் விட்டுவிட்டு சண்முகம் அவருடைய கடைக்கு சென்றார்.
பரத்தின் அம்மா வீட்டு வாசலில் நின்று காய் வண்டி வருதா என பார்க்கும் பொழுது போஸ்ட் மாஸ்டர் ராணி அங்கு வந்தார்.
பரத்தின் அம்மா அவர்களிடம் ராணி நீ குடை வச்சுருக்கியா? இன்னைக்கு பெரிய மழை வரும் போல என கேட்க இல்லை அக்கா என ராணி கூற, பரத்தின் அம்மா வீட்டில் இருந்து குடையை எடுத்து வந்து ராணியின் கையில் வைத்து விட்டு சென்றார்.
மதியம் 12:35 மணி,
ராணி போஸ்ட் எல்லாம் குடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்ற நேரம் மழை பெய்ய ஆரம்பித்தது.
வீட்டில் மழை தண்ணீர் ஒழுகிய இடங்கள் அனைத்திலும் பாத்திரங்களை வைத்து விட்டு ராணி டீ போட சென்றார்.
சண்முகத்தின் கடை வெளியே காய்கறி,பழம் மற்றும் இலை கடை போட்டிருந்த அனைவரும் மழை அதிகமாக பெய்ய ஆரம்பிக்க கடையை பத்திரப்படுத்தவதில் கவனம் செலுத்தி சிலர் தாங்கள் நனைவதையும் மறந்தனர்.
மதியம் 02:10 மணி,
அங்கு பரத்தின் பள்ளியில் மழை ஆரம்பிக்க இன்டர்காமில் (பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பிற்கும் பள்ளி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அல்லது ஒரு இடத்தில் இருந்து தகவலை கொண்டு சேர்க்க பயன்படுத்தபடும் ஸ்பீக்கர் நெட்வொர்க், ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஸ்பீக்கர் இருக்கும்) “மாணவர்கள் எல்லாரும் படிகள் ஏறும் பொழுதும், நடக்கும் பொழுதும் பார்த்து நடக்க வேண்டும்” என ஆசிரியர் ஒருவர் அறிவித்தார்.
பரத்தின்
வகுப்பில் அன்று பி.டி வகுப்பு ரத்து ஆனது குறித்து நீண்ட விவாதம் மாணவர்கள் இடையே சென்று கொண்டிருந்தது.
மதியம் 03:40 மணி,
ஐடியில் வேலை பார்த்து கொண்டிருந்த சங்கர் ஆபிஸில் காபி குடித்து கொண்டே சன்னல் வழியாக பெய்த மழையை பார்த்து கொண்டிருந்தார்.
சங்கரின் மனதில் வீட்டிற்கு செல்வதற்குள் மழை பெரிதானால் என்ன செய்வது? ஆபிஸ் பையிற்கு ரெயின் கவர் போட்டு லெப்டாப்பை எப்படி பத்திரமாக எடுத்து செல்வது? பள்ளியில் இருந்து 04:30 மணிக்கு தன் பெண் ரேணுவை எப்படி அழைத்து வருவது? என பலவற்றை யோசித்து கொண்டிருந்தார்.
சண்முகம் அவர் கடையில் வாங்கிய கூல் டிரிங்க்ஸ் ஸ்டாக் அப்படியே இருப்பதை பார்த்து கொண்டே நின்றார்.
சிறிது நேரத்தில் கடைக்குள் வந்த மழை தண்ணீரை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
மாலை 04:15 மணி,
ஆபிஸ்ஸில் இருந்து கிளம்பிய சங்கர் வண்டியை எடுத்து கொண்டு செல்லும் போது “ஒரே வானத்தில் இருந்து பெய்யும் மழை எல்லாருக்கும் ஒரே போல் இருப்பதில்லை, கூரையுள்ள கடை வைத்திருப்பவர்களும் கஷ்டப்படுகிறார்கள், வெளியில் தரையில் கடை போட்டிருப்பவர்கள், வீடு இல்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால் மழை இங்கு தேவை தான், ஆனால் அது எல்லாரோட வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமாக தான் எதிரொலிக்கிறது, இந்த மழை போல் தான் நாம் எல்லாரும் வாழும் வாழ்க்கையும், பொதுவாக நம்ம வாழ்க்கை அப்படினு சொன்னாலும் எல்லாருக்கும் நாம் வாழ்கிற வாழ்க்கை ஒரே போல் இருப்பதில்லை” என நினைத்து கொண்டார்.
மாலை 04:40 மணி,
பரத்,ரேணு,சாம் மூவரும் பள்ளியின் உள்ளே பெற்றோருக்காக காத்து கொண்டிருந்தனர்.
அன்று மாலை பென் 10 பார்ப்பது பற்றி மூவரும் பேசி கொண்டிருக்க ராணி குடையுடன் அங்கு வந்து பள்ளியில் இருந்து சாம்மை அழைத்து வந்தார்.
பின்னர் சங்கர் பள்ளிக்கு வந்து ரேணுவை அழைத்து சென்றார்.
சண்முகம் வண்டியில் வந்து நிற்க வண்டியில் வந்து ஏறிய பரத் அவரிடம் “அப்பா, ரேணு முன்னாடி போறா, நாம போய் அவளுக்கு பை காட்டனும், கொஞ்சம் சைட்ல போங்க” என கூற சண்முகம் சிரித்து கொண்டே பேசாம வா இல்லைனா பஜ்ஜி வாங்கி தர மாட்டேன் என கூற பரத் சரி அப்பா என்றான்.