சேரா இரு மனங்கள்
சேரா இரு மனங்கள்
“சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்களிடத்தில் அன்பு வேணும் “
ஒரு பள்ளியின் வகுப்பறையில் பாரதியாரின் பாப்பாப் பாட்டு பாடலை ஆசிரியை தாரா சொல்ல சொல்ல மாணவர்கள் திரும்பி அதை சொல்லினர்.
தாரா அந்த பாடலின் அர்த்தத்தை விளக்கி விட்டு மாணவர்களிடம் கேள்வி கேட்டார்.
அப்பொழுது ஒரு மாணவன்,மேம் ஏன் இந்த பாடலில் பாப்பா என உள்ளது அப்பொழுது இந்த பாடல் சிறு குழந்தைகள் மற்றும் சிறு வயது பசங்களுக்கு மட்டுமா? என கேட்டான்.
தாரா கேள்வியை நன்றாக கவனித்து அவனிடம் “சிறு வயதில் இருந்தே அனைவரும் சாதி எனும் கருத்தை விடுத்து மனிதம் மற்றும் உயிர்கள் இடத்தில் அன்புடன் இருக்க வேண்டும் என பாரதியார் எண்ணியுள்ளார்” என கூற அந்த மாணவன் புரிந்தது மேம் என அமர்ந்தான்.
அடுத்த நாள் பள்ளி ஆசிரியைகள் அறையில் ஒரு ஆசிரியை தாரா மேம் இடத்தை பார்த்து விட்டு தாரா மேம் வரலையா? என கேட்க இன்னொரு ஆசிரியை தாரா மேமிற்கு இன்று பெண் பார்க்க வருகிறார்கள் அவங்க லீவ் என கூறினார்.
தாரா மேம் வீட்டில்,
சார்,உங்க பொண்ணு எங்க வீட்டு மருமகளா வர நாங்க குடுத்து வச்சிருக்கனும் ,சீர் அல்லது பொண்ணுக்கு நீங்க எதாவது செய்ய விரும்புறீங்களா? என் மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.
தாரா தனது அறையில் கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்தாள்.
அவளுடைய கண்ணாடியில் அவளுடைய காதலன் அவளுக்காக வாங்கி தந்த சாவிக்கொத்து மற்றும் அவன் வாங்கி தந்த பொட்டுகள் ஒட்டப்பட்டு இருந்தது.
தாரா அதை பார்த்து கண் கலங்கிய படி நின்று தன்னையே கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்தாள்.
இரண்டு வாரத்திற்கு முன்,
அம்மாடி தாரா இங்க வா என தாராவின் அப்பா அங்கு வந்தார்.
தாரா அங்கு வந்து சொல்லுங்க அப்பா என்றாள்.
இந்தாமா இந்த பையன் போட்டோ பாரு,நல்ல பையன்,நம்ம பைய தான்,நீ பிடிச்சிருக்கு அப்படினு சொன்னா அவங்க உன்னை பொண்ணு பார்க்க வருவாங்க,உன் கல்யாணம் மட்டும் முடிஞ்சா எங்க கடமை முடிஞ்ச மாதிரி என கூறினார்.
தாரா உடனே அப்பா என அந்த வார்த்தையை இழுத்தாள்.
டிவி பார்த்துக்கொண்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்த அவள் அம்மா அப்படியே அவளையும் அவளது அப்பாவையும் பார்த்தார்.
நான் ஒரு பையனை என தாரா சொல்லி முடிக்க அவள் அம்மா எழுந்து வந்து என்னடி சொன்ன? என அவளை அறைந்தார்.
தாரா அப்படியே சுவற்றுடன் முகத்தை சாய்த்து கொண்டு நிற்க அந்த சுவற்றில் ஒரு ஓரத்தில் இருந்த காட்சி பெட்டியில் அவள் டிகிரி வாங்கும் படம் இருந்தது.
அவளது அப்பா எழுந்து போய் பெண்ணிற்கும்,அம்மாவிற்கும் நடுவில் போய் நின்று இருவரையும் விலக்கி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
தாரா தன் அறையின் உள்ளே சென்று அமர்ந்தாள்.
இரண்டு நாட்கள் தாராவின் அப்பா அவளிடம் பேசவில்லை.
மூன்றாவது நாள்,தாரா அவள் அப்பாவிடம் சென்று “எதாவது பேசுங்க அப்பா,நீங்கள் என் கிட்ட பேசாம இருக்காதீங்க” என கெஞ்சினாள்.
“அம்மா,நீ லவ் பண்றது சரி,பையன் நம்ம என தடுமாறி பையனா?” என கேட்டு விட்டு தாராவின் முகத்தை பார்த்தார்.
இல்லை அப்பா என கூறினாள் தாரா.
அப்ப நீ அந்த பையன் கிட்ட கல்யாண விஷயம் பத்தி பேசிட்ட,வீட்ல நீ சொல்ல தயங்கி இருக்க புரியாது என கூறினார்.
இங்க பாரு மா,நானே இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டாலும் நம்ம ஆளுங்கள பகைச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது,அவங்க நம்மளை எல்லா விஷயத்திலும் ஒதுக்குவாங்க அப்பறம் உன்னையும்,நீ காதலிக்கிற பையைனையும் எதாவது செஞ்சிருவாங்க என கூறி தாராவை பார்த்தார்.
தாரா தன் காதலனை பார்த்த நொடி முதல் கடைசியாக கல்யாணம் பற்றி இருவரும் பேசியது வரை நினைத்து பார்த்து அழ ஆரம்பித்தாள்.
அவள் அப்பா அவளை அங்கு தனியே விட்டு விட்டு எழுந்து சென்றார்.
தாரா தன் காதலனை பார்த்து இருவரும் பிரிந்து விடுவோம் அது தான் இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது என கூற அவளுடைய காதலன் “என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்குறேன்” என கூற இல்லை என கூறி தாரா அவனை பார்த்து பொழுது தன் முகத்தை இறுக வைத்து கொண்டு நம்ம காதல் அவ்வளவுதான் என கூற அவளுடைய காதலன் கண் கலங்க எதுவும் பேசாமல் அவளை ஒரு தடவை பார்த்து விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.
இவ்வளவு நேரம் தாரா மனதில் அடக்கி வைத்திருந்த சோகம் அவளது காதலன் அங்கு இருந்து சென்ற உடன் அவள் முகத்திற்கு வந்தது.
தற்பொழுது,
தாராவின் நிச்சயம் முடிந்தது.
அதே நேரத்தில்,தாராவின் காதலன் ஒரு கவிதை எழுதி கொண்டிருந்தான்,
“மனங்கள் ஒன்றோடு ஒன்று விரும்பி,
சேர்வதே காதல்,
அந்த காதல் சாதி,மதம்,பணம் பற்றி,
கேட்டு தெரிந்துகொண்டு வருவதில்லை,
காதல் வந்த பின் அதைப்பற்றி கேட்டால்,
அது காதலே இல்லை,
மனங்களுக்கு மதிப்பளிக்காமல்,
சாதி,மதம்,பணம் கொண்டு,
நடக்கும் திருமணத்தில்,
திரு இருக்காலம்,
அதில் மனங்கள் சேர்வதில்லை”
என கவிதையை கண்ணீருடன் எழுதி முடித்தான்.
“நாகரிகமாக வாழும் மனித குலத்தில் சாதி,மதம்,மொழி,இனம், பணம் முதலியவற்றை வைத்து உருவாகும் வேறுபாடுகளை அகற்றி அன்பை பரப்புவோம்”.
“சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்களிடத்தில் அன்பு வேணும் “
பாரதியார்.
