Delphiya Nancy

Drama

4  

Delphiya Nancy

Drama

தேர்தல் (ரண )களம்

தேர்தல் (ரண )களம்

3 mins
593


தேர்தல் என்றால் பலருக்கு கொண்டாட்டம் சிலருக்கு திண்டாட்டம்.


தேர்தல் பணிக்கு போற பீதியில கிறிஸ்துமஸ் வந்ததே தெரியல. அடுத்தநாள் எந்த ஊரு போவோமோனு டர்ருல ஆர்டர வாங்குனா, அங்க இருக்க பல பட்டியில இது ஒருபட்டி.


பஸ் புடுச்சு பள்ளிக்கு போயாச்சு, முதல்ல வரவேண்டிய பிரசீடிங் ஆபிசர காணோம், வச்சாங்யடா ஆப்புனு, அந்த ஏரியா இன்சார்ஜ்ட தகவல் சொல்லியாச்சு.


போன் பன்னும்போதெல்லாம் இந்தா அனுப்புறோம், இதோ அனுப்பிட்டோம்னு சொல்லி எட்டுமணி ஆச்சு அவங்க வர.


பிரசீடிங் ஆபிசர் வந்ததும்,

ஏற்கெனவே செக்பன்னி வச்ச எல்லாத்தையும் , திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிச்சு முடிக்க மணி11 ஆச்சு. இடையில் பிக்க முடியாத தோசைய எல்லாரும் சாப்பிடும் போது, நல்ல வேலை நமக்கு நம்ப தோழி கொடுத்த சப்பாத்தி இருக்கு தப்பிச்சோம்னு சாப்டு தூங்க 12 ஆச்சு.


அடக்கடி போற தொடர்வண்டி சத்தம் தொடர்ந்து தொல்லை கொடுக்க, கொசுக்களின் தாலாட்டில் சற்றே உறங்கினோம்.


காலைல சேவல எழுப்பி விட்டுட்டு காக்கை குளியல் போட்டுட்டு தேர்தலுக்கு ரெடியானோம்.

இம்முறை உடன் பணிக்கு வந்த ஆசிரியர்களும் நம்ப வேவ் லெண்த்ல இருக்க ,சிரித்த முகத்துடன் பணியாற்றினோம்.


எங்க ஊருக்கு வந்துட்டிங்க நல்லா கவனிச்சுப்பாங்க கவலை வேண்டாம்னு ஒருமனசன் சொன்னாரு. அப்பறம் தான் புரிஞ்சுச்சு அவங்க கவனிப்பு சிட்டி ரோபோ மாதிரி இருக்கும்னு.


பசி வயிற்றைக் கில்ல, உணவோட அருமை அப்பதான் தெரிஞ்சது. காலை ஊறுகா அளவு சட்னியோட இட்லி சாப்பிட்டோம், சட்னி சாம்பார் கடைலயே இல்லையாம். (கடல்லயே இல்லியாம்னு டோன்லபடிங்க) 

வாக்குச்சீட்ட மடிச்சு குடுத்து இப்படி ஓட்டு போடுங்கனு சொல்லி அனுப்ப, சிலிப்னு நினைச்சு பாக்கெட்ல வைச்ச ஆசாமிங்கல , தெய்வங்களாக அதுவும் ஓட்டுபோடுற சீட்டுதான்னு ஓட்டு போட அனுப்பினோம்.


பாக்கெட்ல வச்சாலும் வாங்கிரலாம், ஒரு பாட்டி பிளவுஸ் லாக்கர்ல சீட்ட வைக்க, நம்பல ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போலனு, அந்த சீட்டையும் பெட்டியில போட்டுரு தாயினு கெஞ்சி போட வச்சோம்.


போதை மனிதன் முன் பேதையானோம். இறந்தவங்க எல்லாம் உயிரோட இருக்காங்கனு நினைச்சு ஓட்டு போடுற ஆச்சரியசாமிங்க இன்னமும் இருக்காங்கனு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தம் தான்.



இடையே அருகில் உள்ள டீக்கடையில் டீ வாங்கினோம், தேர்தல் பணிக்கு வந்த சக ஊழியரின் உறவினர் அவர், முன் பின் தெரியாத எங்களுக்கும் சேர்த்து டீக்கு பணம் வாங்கல, எவ்வளவோ சொல்லியும், எங்க வீட்டுப்பிள்ளைங்கனா செய்யமாட்டேனானு அவர் பணம் வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு பெரிய நன்றி 🙏



பதினோரு மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட்டோம். சிலருக்கு கையெழுத்துப் போடும் வாய்ப்பு இதுபோன்ற தேர்தலில் மட்டுமே கிடைப்பதால் நிறுத்தி, நிதானமாக, ரசித்து கையெழுத்து போட்டனர். அதை நாங்கள் ரசித்துப் பார்த்தோம்.


மணி அடிச்சா சோறுனு பழகுன எங்களுக்கு, தேர்தல் பரபரப்பில் மணி 2 ஆனதே தெரியல.

போலிஸ்னா தப்பான கண்ணோட்டம் இருக்க நம்ப ஊர்ல அத உடைக்கிறது போல வந்தாங்க எங்க பூத் காவலர் பானுமதி.


யாரும் சாப்பாடு வாங்க போனாங்கலானு அவங்க கேட்க, இல்லைனு நாங்க சொல்ல ,அவங்களே எங்க ஏழு பேருக்கும் மதிய உணவு வாங்கிக் கொடுத்தாங்க. அதற்கு பணம் கொடுத்தும், வாங்க மறுத்துவிட்டார். எங்க ஊருக்கு வந்துருக்கிங்க இத கூட செய்ய மாட்டோமானு சொல்லிட்டாங்க.


  இரண்டு நாட்கள் தெரியாத ஊரில் பணியாற்ற நாங்க இவ்வளவு கஷ்டப் படுறோம். காவல்துறை நண்பர்கள் தினமும் வெவ்வேறு புதிய இடத்தில் வேலை பார்க்க எவ்வளவு மன,உடல் உறுதி வேண்டும்! . பானுமதி சகோதரி அவர்களுக்கும் அவர் கூட பணியாற்றிய மற்ற காவலர் நண்பர்களுக்கும் ஒரு பெரிய சல்யூட். 



தேர்தல் நேரம் முடிந்தது, பெட்டிக்கு சீல் வைத்துவிட்டு அனைத்து கோப்புகளையும் எழுதி கவரில் போட்டுவிட்டு, இலவு காத்த கிளி போல் பெட்டியை காத்து அமர்ந்தோம்.


தேர்தல் நேரம் முடிந்ததும் கழிவறைக்கு பூட்டு போடுறாங்க, அடேய் நேரம் பார்த்து பூட்ட வேண்டிய இடமா அது? என்னத்த சொல்ல?

பெட்டி எடுத்தா சீக்கிரம் போலாம்னு, நம்ப போலிஸ் மேடம் சொன்னாங்க, நீங்கலாம் ஒரு போஸீசா மேடம்? பெட்டிய எடுத்தா துரத்தி பிடிக்க வேண்டிய நீங்களே பெட்டி எடுக்கலனு வருத்தப் படுறிங்கனு கலாய்க, அனைவரும் சிரித்தனர்.


எங்க பூத்ல பெட்டி எடுத்துட்டாங்க, உங்க பூத்ல? அப்படினு யாராச்சும் போன் பன்னி கேட்டா, நம்ப சீக்கிரம் போக முடியலயேங்குற வருத்தத்த விட, அவங்க சீக்கிரம் போறாங்களேனு தான் பெரிய 😟 கவலையே.


இரவுநேர பயணத்துல தெரிஞ்சவங்க கூட இருந்தா நல்லா இருக்கும்ல அதனால் வந்த கவலைதான் அது.


ஒருவழியா பெட்டிய தூக்கிட்டாங்க, போலாம்னு ரெடியா இருந்தோம், திடீர்னு வீல் சேர காணோம் வெயிட் பன்னுங்கனு சொல்லிட்டாங்க. இது என்னடா புதுசா இருக்கு நம்ப எப்ப அத வாங்குனோம்னு முழிக்க, நல்ல வேலையா கிளர்க் ஐயா அத எடுத்து பத்திரமாக வச்சுருந்தார்.



விட்டா போதும்டா சாமினு ஒருவழியா கிளம்பி, உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் அமலோற்பவ மேரி, ராஜசேகர் ஆகியோரின் துணையுடன் பயணம் செய்து, நடு இரவில் வீடு வந்து சேர்ந்தேன்.


பல ரணகளங்கள் இருந்தாலும், தெரியாத சில மனிதர்களின் நட்பும், நல்ல உள்ளங்களின் சந்திப்பும் இனிமையான நினைவுகளாய் தொடரும்.


இரண்டாம் கட்ட தேர்தல் எங்கள் ஊரில் நடந்தபோது, தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்களை சந்தித்து ,என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லி அவர்களின் சிறு சிறு தேவைகளை நிறைவேற்றினேன், மனநிறைவாய் இருந்தது.

     

                           நன்றி....



Rate this content
Log in

Similar tamil story from Drama