Delphiya Nancy

Drama

4  

Delphiya Nancy

Drama

தேர்தல் பணி ஒரு போராட்டம்

தேர்தல் பணி ஒரு போராட்டம்

3 mins
623


 ஒருநாள் கதாநாயகர்களான மக்களின் நாள் வந்தது, தேர்தல் நாளைச் சொன்னேன். பிரச்சார சத்தம் ஓய்ந்து தெருக்கள் அமைதியாக இருந்தது.


    மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் பயிற்சி வகுப்பு, தேர்தலுக்கு முந்தைய நாள் டப்பிங் பட பாணியில் தேர்தல் நடைமுறை குறித்த விளக்கப்படம் அனைத்தையும் முடித்துவிட்டு, ஒருவழியாக தேர்தல் பணிக்காக பணியமர்த்தப்பட்ட பள்ளியை கூகுளில் தேடி கண்டுபிடித்து விட்டாள் அந்த ஆசிரியர் தேன்மொழி.


    முந்தைய நாளே அங்கு சென்று முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதால் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கு சென்று, பணிக்கு வந்த பிற ஆசிரியர்களிடம் அறிமுகமாகிவிட்டு, முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள்.


     வேலை முடிந்ததும் , தரையில் போர்வை விரித்து வராத தூக்கத்திற்கு வரவேற்புரை வாசித்தார். மற்ற ஆசிரியர்கள் தன் முந்தைய தேர்தல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்க அதை கேட்டுக்கொண்டே சற்று நேரம் உறங்கினாள்.


கொசுக்கள் விருந்துண்ண ஆரம்பிக்க அவளின் தூக்கம் கலைந்தது அப்போது மணி 2, அதற்கு மேல் யாரும் தூங்கவில்லை. யாரேனும் பார்த்தால் பைத்தியம் என தோன்ற வைக்கும் அளவு கொசுக்களை அடிக்க அங்கும் இங்கும் கையசைத்துக் கொண்டிருந்தனர்.


   ஒருவழியாக பொழுது விடிந்துவிட்டது, பள்ளி கழிவறையில் சென்று காக்கை குளியல் போட்டுவிட்டு உடை மாற்ற சிரமபட்டு நிற்க, மழை வேறு தன் பங்கிற்கு அதன் வேலையைக் காட்டியது.


 தேர்தல் நேரம் துவங்கியது, மழையில் பாதி நனைந்தவர்களாக ஒருவர் ஒருவராக வந்து வாக்களிக்க துவங்கினர். பிரசீடிங் ஆபிசர் மணிக்கு ஒருமுறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தெரிவித்து கொண்டிருந்தார்.


     போலிங் ஆபிசர் 1 எத்தனை ஆண், எத்தனை பெண் என்று குறித்துக் கொண்டிருந்தார். நம்ம தேன்மொழி தான் போலிங் ஆபிசர் 2 அவருக்குதான் அதிக வேலை, வாக்காளரின் அடையாள அட்டையை வாங்கி ,அவர்தானா என சரிபார்த்துவிட்டு , அடையாள அட்டையின் எண்ணை பதிவேட்டில் எழுத வேண்டும். பின் பதிவேட்டில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு , இடது ஆள்காட்டி விரலில் மை வைத்துவிட்டு

பூத் சிலிப் கொடுத்து அனுப்ப வேண்டும்.


போலிங் ஆபிசர் 3 இ.வி்.எம் மெசினை இயக்கும் பொறுப்பு இவருக்கு, ஒவ்வொரு வாக்காளர் வாக்களிக்கும் முன்னும் பட்டனை ஆன் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் வாக்குகள் பதிவாகும்.


   இவர்களின் எதிரே வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் அந்த ரெண்டாவதா இருக்க மேடம்கிட்டதான் லேட் ஆகுதுன்னு சொல்ல, பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்த தேன்மொழி எரிப்பது போல் அவரை பார்த்து "உங்க வேலைய நீங்க பாருங்க, எங்க வேலைய நாங்க பாக்குறோம், கையெழுத்து வாங்காம, மை வைக்காம அனுப்பட்டா"-னு கேட்டாள். அவர் அதன்பின் எதுவும் பேசவில்லை.


     காலையில் யாரும் சாப்பிடவில்லை, இடையே

டீ மட்டும்தான். மதியம் ஒருவர் ஒருவராக பிரசீடிங் ஆபிசரை ரீப்பிலேஸ் பன்ன சொல்லிட்டு சாப்பிட போனாங்க.


அடுத்து தேன்மொழியை போக சொல்ல, ஏஜென்ட திட்டிட்டு அவர் வாங்கி கொடுக்குறத சாப்பிட்றதான்னு எனக்கு வேண்டாம்னு சொல்லிவிட்டு, அவள் வைத்திருந்த பிஸ்கட், சிப்ஸ் ஐ சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தாள்.


   எல்லோரும் வாக்களித்து முடித்ததும், இ.வி்.எம் மெஷின் சீல் , பட்டியல் சரிபார்ப்பு முடித்து, மெஷின் எடுக்க வரும் அதிகாரிக்காக காத்திருந்தனர்.


இடைவெளியின்றி சரியான உணவின்றி வேலை செய்து அனைவரும் கிரங்கிப்போய் இருந்தனர். அதிகாரி வர 12.45 AM ஆகிவிட்டது. மெஷின் எடுத்துவிட்டு செல்லும்போது 1.30 AM அதற்குப்பின் அனைவரும் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். பாதுகாப்பு போலிஸ் எல்லாம் பெட்டியை எடுக்கும்வரை மட்டுமே.


    தேன்மொழி அங்கிருந்த மற்ற இரு பெண் ஆசிரியர்களுன் சேர்ந்து நடக்க துவங்கினாள், மெயின் ரோடுக்கு போக ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். கும் இருட்டு , குரைக்கும் நாய்கள்-னு பேய்படம் பாத்தமாதிரியே இருந்துச்சு.


மெயின் ரோட்டுல போய் ஆட்டோ புடிச்சு போனாங்க, ஆட்டோ திடீர்னு திசைமாற ஒரு பதட்டத்துடனே இருந்தனர் . பெட்ரோல் பங்க்ல ஆட்டோ நிற்க அப்பாடான்னு இருந்துச்சு, பின் மத்திய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாங்க.


   அந்த நேரத்துல மழை பெய்து கொண்டிருந்தது எனவே வண்டியில கூப்பிட வரேன்னு சொன்ன தேன்மொழியோட அண்ணன வரவேண்டாம்- னு சொல்லிவிட்டாள். சென்னை செல்லும் பேருந்தில் ஏறி டோல் பிளாசா போய்ட்டா அங்க வந்து அண்ணன் கூப்புட்டுக்குவாங்கன்னு பேருந்தில் ஏறினாள்.

 

   பேருந்து சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் கேட்டாள், அந்த கன்டெக்டர் திடீர்னு " பஸ்ல ஏன் ஏறுன இந்த நேரத்துல எப்புடி அங்க இறக்கிவிட்றது? எதாச்சும்னா எவன் பதில் சொல்றது?" பஸ் அங்க நிக்காதுன்னு கத்தினான். ஏற்கனவே இவ்வளவு சங்கடங்களைத் தாண்டி வந்த தேன்மொழி அவனிடம் எதுவும் பேசாமல் அவள் அண்ணனுக்கு போன் செய்து நடந்ததைக் கூறி முன்பே அங்கு நிற்கச் சொன்னாள்.


        அதன்பின் அவன் பேச ஆரம்பிக்கும் முன் எலக்சன் டுயூட்டி போனா இவ்வளோ நேரம்தான் ஆகும் , உனக்கென்ன அக்கற 24 மணி நேரமும் ஆட்கள் நடமாடும் இடம்தான் டோல் பிளாசா, நான் டிரைவர்கிட்ட கேட்டுட்டுதான் ஏறினேன்னு சொன்னாள்.


அனைத்துப் பேருந்தும் அங்கு நின்றுதான் செல்லும் என்பதால் அவள் கன்டெக்டரின் விசிலை எதிர்பார்க்காமல் இறங்கி தன் சகோதரர்களுடன் வீடு சென்றாள்.


நாள் முழுவதும் உண்ணாமல் இருந்ததால் 2.30 மணி என்றும் பாராமல் பசியில் வேக வேகமாக சாப்பிட்டாள்.


   தெரியாத ஊரில், எந்த வசதியும் பாதுகாப்பும் இல்லாத இடத்தில் இரண்டுநாள் சென்றது, ஒரு யுகம் கடந்தது போல உணர்ந்தாள். இனி இந்த தேர்தல் பணிக்கே செல்லக்கூடாது என நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றாள். என்றாலும் கடமை அழைத்தால் போய்தான் ஆக வேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும்.


   வெளியிலிருந்துப் பார்ப்பவர்களுக்கு எளிமையாக தெரியும் அனைத்தும், அனுபவித்து பார்த்தால் அதன் கடினம் புரியும். அதான் சம்பளம் வாங்குறல்ல அப்பறம் என்ன? னு கேக்குற யாராலையும் இந்த வேலைய செய்யமுடியாது.


புரிந்து கொள்ளவில்லை என்றாலும் வீண் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தாதீர்கள்.



Rate this content
Log in

Similar tamil story from Drama