ரோஜா....ரோஜா....
ரோஜா....ரோஜா....


அப்பப்பா! என்ன அசதி ! எத்தனை நாள், எத்தனை ஊர் சுத்தி வந்திருப்போம் ? என்றது, மலர்க்கொத்து கடையில், காதலர் தினத்திற்காக ப்ரத்யேகமாக வந்திருந்த ரோஜா பூங்கொத்தில் நடுநாயகமாய் இருந்த ஒரு சிவப்பு ரோஜா.
"காதலை சொல்ல சிவப்பு ரோஜா தான் கொடுக்கணும் அப்படின்னு சொன்ன புண்ணியவான் யாரோ ? நம்மளையும் பலவிதமான முயற்சிகள் செஞ்சு, இயற்கை மற்றும் செயற்கை முறையில், இரசாயனங்கள் சேர்த்து, குளிர்ப்பதனம் செஞ்சு, நம்மளோட இயற்கை தன்மை மாறாம இருக்க, எத்தனை எத்தனை போராட்டங்கள்?" இது மற்றோர் ரோஜா.
ஆமாம். இத்தனையும், நம்ம மேல பட்டதுக்கு பிறகு, நாம பாடம் பண்ணப்பட்ட பிணத்தைப் போலத்தான். நம்மோட இயற்கையான மணம், குணம், நிறம் எல்லாம் குறையக் குறைய, வியாபாரிகளுக்கு இலாபம் குறையுது. இதனால, செயற்கையான நிறம், மணம் எல்லாம் ஏற்றப்பட்டு, நாம் உயிரற்ற பதுமைகளைப் போல ஆகிப் போயிடறோம்.
மரணித்த நம்மோட மடியில தான், ஒவ்வொரு இளைஞனும், இளம் பெண்ணும், தங்களது காதல் மலர்வதா நினைச்சு, நமக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்காங்க.
"பூ மலர்கிற நொடியை எப்படி யாராலும் அறிந்து கொள்ள முடிவதில்லையோ, அதே போல், உன் மேல் நான் கொண்ட காதல், என்னுள் மலர்ந்த நொடியினை நானும் அறியவில்லை. என் மனமெங்கும் மலரின் வாசனையைப் போல நீ நிறைந்து விட்டாய்" இதை சொல்லத்தான் காதலர்களுக்குள் பூ கொடுக்குற வழக்கம் வந்ததோ என்னவோ.
"காதலுக்கான நிறமா சிவப்பை உருவகப்படுத்தி, ரோஜா, இதயம், பொம்மைகள் எல்லாமே சிவப்பு நிறத்தில் கடைகளை நிரப்பிடுறாங்க. காதலுக்கு நிறபேதம் எல்லாம் கிடையாது. ஆத்மார்த்தமான காதலுடன் கொடுக்கப்படும் எந்தப் பரிசானாலும், அது காதல் பரிசு தான். இதை உணர்ந்து, மனிதர்கள் மனம் மாறும் வரை, ஆண்டுதோறும், நம் இனம், இரசாயனங்களில் குளிப்பாட்டப்பட்டு, பாடம் செய்த பதுமைகளாய், காதலர் தினத்தில் அணிவகுப்பது தொடரத்தான் செய்யும்" , பெருமூச்செறிந்து நின்றன ரோஜா பதுமைகள்.