பயமா! எனக்கா!
பயமா! எனக்கா!


“பயமா... எனக்கா… ஹஹ்ஹஹ்ஹா... “ அப்பிடீன்னு ரஜினி மாதிரி பஞ்ச் டைலாக் எல்லாம் என்னால பேச முடியாதுங்க. அது நடைமுறைக்கு ஒத்து வராது.
தெனாலி கமல் மாதிரி என்னோட பயங்களை ஒரு பட்டியலே போடலாம். ‘யாமிருக்க பயமேன்’னு என் முருகன் குடுக்கற தைரியத்தை வெச்சிகிட்டுதான் ஏதோ பொழப்பு ஓடிகிட்டிருக்கு.
சரி என்னோட பட்டியல்ல முட்டி மோதி முதல்லே நுழையற பயம் - வெளிப்படையா சொல்றங்க - ராத்திரிலே வீட்டுலே தனியா தூங்கறதுதாங்க! (ஹூம்..ஹூம்.. உங்களுக்கும் அதேதானா! தெரியுமே!). என் கூட ஒரு ஆள் இருந்தா, சுடுகாட்டுக்கு நடு நிசி இரண்டு மணிக்கு கூட போயி அங்க இருக்கற புளிய மரத்துலே ஆயிரம் ஆனிகள் கூட அடிச்சிட்டு வந்துருவேன். ஆனா தனியா..?
அடுத்தது என் மனைவியோட சமையல்ல குறை சொல்றதுன்னா கொஞ்சம் பயம்தாங்க. அதன் பின் விளைவுகள் ரொம்ப கடுமையா இருக்கும். (ஹூம்..ஹூம்.. உங்களுக்கும் அதேதானா! தெரியுமே!)
என் நினைவுக்கு வரும் இன்னொரு பயம் பள்ளிப் பருவத்து ‘க்ராமர் கச்சேரி’. என் ஆங்கில ஆசிரியர் புஷ்பராஜ் அவர்கள் ‘க்ராமர் கச்சேரி’ நடத்துவார். அதாவது ஆங்கில இலக்கணம் (active-passive, direct-indirect, degrees of comparison, subject, predicate, object, noun, gerund..!) ஒரு அத்தியாயம் நடத்தி முடித்து அடுத்த நாள் கேள்வி கேட்பார். எல்லோரும் நின்றபடி ஒரு கை முட்டியை நீட்டிக் கொண்டு நிற்க வேண்டும். அவர் பிரம்பை நீட்டிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் அருகில் வந்து கேள்வி கேட்பார். சரியாகச் சொன்னால் அடுத்த ஆளுக்கு போய் விடுவார். தவறாகச் சொன்னால் ஒரே அடிதான்.. முட்டி பழுத்து விடும். ஆனால் அந்த மகானின் அந்த ‘க்ராமர் கச்சேரி’ வைத்தியத்தால்தான் நான் இன்று ஆங்கிலத்தில் புத்தகமும் கதைகளும் எழுதும் அளவிற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறேன்! அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!
கல்லூரி நாட்களில் ‘அரியர்ஸ்’ வைத்து விடக்கூடாது என்கிற பயம் இருக்கும். எனவே தேர்வுக்கு செல்லும் முன், முடிந்த வரை பாடங்களை நன்றாக படித்து விட்டுதான் செல்வேன்.
பின் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிற பயம் இருந்தது. அதுவும் வாழ்க்கையில் நன்றாகவே அமைந்தது.
இன்னும், நல்ல மனைவி அமைய வேண்டும், குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டும், அவர்களுக்கு நல்ல படிப்பும், வேலையும், வாழ்க்கையும் அமைய வேண்டும் என பல பயங்களையும் வெற்றிகரமாக கடந்து இன்று மன நிறைவுடன் இருக்கிறேன்.
நம் திருவள்ளுவர் கூட ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். அதனால் பயம் என்பது வாழ்க்கையை பண்படுத்தும் ஒரு முக்கியமான அம்சம்தான்.
நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போது எனக்கு இருக்கிற ஒரே பயம் என் மனைவி இல்லாத நிலை வந்தால் என்னால் தனித்து வாழ முடியாது என்பதுதான். இத்தனை பயங்களையும் என்னை தாண்ட வைத்த இறைவன் இதற்கு ஒரு வழி செய்யாமலா போய் விடுவான்!