DEENADAYALAN N

Abstract

4.9  

DEENADAYALAN N

Abstract

புலரும் வரை மலரும் நினைவுகள்!

புலரும் வரை மலரும் நினைவுகள்!

2 mins
316


கிராமத்து திருவிழா அனுபவங்களை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவன் அல்லன் நான். நகர வாழ்க்கையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளே எங்களுக்கு விழாக்கள்.


‘ஏரோப்ளேன்’ எனும் ஒரு பட்டாசு வகை! இருபுறமும் அடைக்கப்பட்ட மெல்லிய உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு சின்னஞ்சிறு உருளை. திரியை கொளுத்தியவுடன் ‘வைங்ங்ங்..’ என்று இருபது அடி உயரம் பறந்து சென்று மீண்டும் கீழே வந்து விழுகிறது. நான் அதை கையில் எடுக்கிறேன். உலோகச்சூடு என் கையை பதம் பார்க்க நான் துடித்துப் போகிறேன். இதுவே எனக்கு விவரம் தெரிந்த என் முதல் தீபாவளி நினைவு!


தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் முன்பே நானும் (வயது பத்து) என் சகோதரி மகன்கள் இரண்டு பேரும் ஒரே உண்டியலில் காசு சேர்ப்போம். யார் எவ்வளவு போடுகிறார்கள் என்பதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைப்போம். தீபாவளிக்கு முதல் நாள் இரவு உண்டியலை உடைத்து எண்ணிப் பார்ப்போம். ஆளுக்கு பத்து அல்லது பன்னிரண்டு ரூபாய் சேர்ந்திருக்கும். ஆஹா.. அந்த ஆனந்தம் இன்று நம் சொந்தப் பணம் ஆயிரக் கணக்கில் எண்ணும் போது கூட ஏற்படுவதில்லை.


வீட்டிலிருந்து கடை வீதி இரண்டு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அங்கு தீபாவளிக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பட்டாசுக் கடைகள் திறந்து விடுவார்கள். நாங்கள் மூவரும் இரவு ஏழு மணிக்கு கிளம்புவோம். கடை வீதியில் இருபது பட்டாசு கடைகளாவது இருக்கும். ஒவ்வொரு கடையிலும், பகட்டு விளக்குகளின் வெளிச்சத்தில் - லட்சுமி வெடி, குருவி வெடி, கம்பி மத்தாப்பு பெட்டிகள், சிவப்பு பச்சை மத்தாப்பு பெட்டிகள், கோபுர பட்டாஸ்கள் (flower pots), சங்கு சக்கரங்கள், ‘கேப்’புகள், துப்பாக்கிகள் என - பட்டாசுப் பொட்டலங்கள் ஜொலிக்கும். ஒவ்வொரு கடையிலும் நின்று ஒவ்வொரு பட்டாசு வகைகளையும் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே.. மன்னிக்கவும். இந்த தலைமுறையின் பேரிழப்பு அது.


ஒரு தீபாவளிக்கு ‘பேண்ட்’ எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறேன். (இல்லை என்றால் ‘நாடா’ வைத்த அரை ட்ராயர் தான்). இன்னொரு தீபாவளிக்கு ‘பொம்மை’ சட்டை வேண்டும் என்று அழுதிருக்கிறேன். மற்றொரு தீபாவளிக்கு ‘டெர்லின்’ சட்டை எடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறேன்.


தீபாவளி அன்று இரவு தூங்கவே மாட்டேன் என்று சபதம் செய்து கொண்டு இரவு ஒரு மணிக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தூங்கி விடுவது வாடிக்கையான ஒன்று,


நான் தான் முதலில் குளிப்பேன் என்று இரவு மூன்று மணிக்கெல்லாம் எழுந்து என் அண்ணன் மற்றும் அக்கா மகன்களுடன் சண்டையிடுவேன்..


பெரியவர்கள் கொடுக்கும் தீபாவளிக் காசை ‘மொத்தம் எவ்வளவு’ என்று அரை மணிக்கு ஒரு முறை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். இதுவரை யார் யார் கொடுத்திருக்கிறார்கள் – இன்னும் யார் யார் கொடுக்க வேண்டும் என்று எங்கள் மூவருக்குள்ளும் அரை மணிக்கு ஒரு முறை ஒரு பொருளாதார மாநாடு நடக்கும்.


தெருப் பெருக்கும் விளக்குமார் குச்சியின் ஒரு பக்கத்தில் ஊசிப் பட்டாசு அல்லது ஓலைப் பட்டாசை செருகி வைத்து, குச்சியின் மறுபக்கத்தை கையில் பிடித்துக் கொண்டு, ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்ட பட்டாஸ் வத்தியின் தீ ‘கங்கி’ல் திரியைக் காட்டி, அது வெடிக்கும் போது அந்தக் குச்சி அடையும் மெல்லிய அதிர்ச்சியை அனுபவித்திருக்கிறேன். 


துப்பாக்கி இருந்தாலும், ஒவ்வொரு ‘கேப்’ (கொள்ளுப்) பட்டாசுகளை தரையில் சிதற விட்டு, சுத்தியலை வைத்து ‘டொக்.. டொக்..’ என்று தட்டி அது வெடிக்கும் போது ஆனந்தம் அடைந்திருக்கிறேன்.


பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தைப் பொறுத்த வரையில் நான் மனைவி, குழந்தைகளோடு கல்பாக்கத்தில் பணி புரிந்த காலத்திய என் அனுபவங்களே மகிழ்ச்சியானது. ஒவ்வொரு பொங்கலுக்கும் கோவையிலிருந்து என் உறவினர்கள் – அண்ணன்மார் மாமன் மச்சான் மற்றும் ஒரு சில குடும்ப நண்பர்கள் என ஏழெட்டு பேர் - வருடந்தோறும் கல்பாக்கம் வந்து விடுவார்கள். ஒருநாள் பேச்சுப் போட்டி, ஒரு நாள் கவியரங்கம், ஒரு நாள் பட்டி மன்றம் என தமிழ் அங்கே இலக்கிய ஆறாய் ஓடும்.


அது பற்றி இன்னொரு சமயத்தில்...


Rate this content
Log in

Similar tamil story from Abstract