Sridhar Venkatasubramanian

Inspirational Drama Comedy

4.3  

Sridhar Venkatasubramanian

Inspirational Drama Comedy

பிரயாணம்

பிரயாணம்

2 mins
776 

1999-ல் மேற்கு வங்கத்தில் உள்ள ஹௌரா ஜில்லாவில் ஒரு.சிறு. கிராமத்தில் ஒரு வங்கியின் கிளையில், நான் மானேஜர் பொறுப்பில் இருந்தேன். கல்கத்தாவிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் ,அந்த கிராமத்திலேயே நானும் உதவி மானேஜர் பானர்ஜியும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் மட்டுமே , கல்கத்தாவிற்கு வந்து குடும்பத்தினரோடு தங்குவோம் .


வழக்கம் போல ஒரு சனிக்கிழமை மதியம் ,வங்கி வேலை முடிந்த பிறகு, நாங்கள் கல்கத்தா வந்து கொண்டிருந்தோம். அதிர்ஷ்டவசமாக அன்று ஒரு காலியான சொகுசு விரைவு பேருந்து எங்களுக்கு கிடைத்தது. ஜன்னல் வழியாக வீசிய குளிர்ந்த காற்றிலும் ,பேருந்தில் நிலவிய நிசப்தத்திலும் நாங்கள் சற்றே கண்ணயர்ந்தோம் .


2-மணி நேர பயணத்திற்குப் பிறகு கோலாகாட் என்ற ஊரில் பஸ் நின்ற பொழுது, நான் கண் முழித்தேன் .பானர்ஜியோ அயர்ந்த உறக்கத்தில் இருந்தான்.


அப்பொழுது கணவன்,மனைவி,ஒரு 5-6 வயது குழந்தையும் கொண்ட ஒரு பெங்காலி குடும்பம்,பெட்டி,படுக்கையுடன் பஸ்ஸில் ஏறினர். 15-நிமிட நிறுத்தத்திற்கு பிறகு பஸ் அங்கிருந்து கிளம்பியது.


பஸ் கிளம்பிய பிறகு நான் திரும்பவும் கண்ணயர முயற்சித்தேன் .ஆனால் பஸ்ஸில் முன்பு நிலவிய நிசப்தம் போய்விட்டது . கோலகாட்டில் ஏறிய அந்த அம்மாள் தன் கணவனுடன் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தாள் .இறைவன் அவளுக்கு குரள்வளையில் 1000-வாட் ஸ்பீக்கர் பொருத்தியிருக்க வேண்டும். அவள் பேசியது,பஸ் செல்லும் இரைச்சலுக்கு மேல்,கணீரென்று காதிற்குள் நுழைந்து மூளையில் உள்ள எல்லா செல்களையும் எழுப்பிவிட்டது.


அந்த அம்மாள் பேசியதிலிருந்து ,அவர்கள் 2-வாரம் பம்பாய் டூர் போகிறார்கள் என்று தெரிந்தது. மேலும் அவள் தன் புகுந்த வீட்டு மனிதர்கள் மண்டையை உருட்டிக் கொண்டிருந்ததும் தெளிவாக கேட்டது. 20-வருட தாம்பத்தியத்தில் ,தன்னுடைய சாமர்த்தியத்தினால் தான் யாரும் அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியவில்லை என்றும்,தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தாள் .நடுநடுவே அந்த அம்மாள் தன்னுடைய குழந்தையையும் அதட்டிக் கொண்டே வந்தாள்.


இவ்வளையும் கேட்டுக் கொண்டிருந்த அவள் கணவனோ 'ஊம்' கொட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் பேசவில்லை.


பஸ்ஸில் இப்பொழுது எல்லோருமே அந்த அம்மாள் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தனர். பானர்ஜியோ ,தூக்கம் கெட்டுப் போன கோபத்தில் அந்த அம்மாளிடம் சண்டை போட இருக்கையிலிருந்து எழப் போனான் .ஏதாவது ரசாபாசமாகி விடுமோ என்று நான் அவனை அடக்கி உட்கார வைத்தேன்.


2-மணி நேரம் கழித்து ஹௌரா ரயில் ஸ்டேஷனில் பஸ் வந்து நின்ற பொழுது ,அந்த குடும்பம் இறங்கியது. பிறகு பஸ் கல்கத்தா நகருக்குள் நுழைந்தது.


பானர்ஜி ,இன்னும் தணியாத கோபத்தில் ,அந்த அம்மாளை திட்டியபடியே வந்தான். நான் மட்டும் தடுக்காமல் இருந்தால் அந்த அம்மாளின் குரல் வளையை நெறித்திருப்பேன் என்றான் .


அவனை ஆசுவாசம் செய்தபடியே நான் சொன்னேன்," நாம் அனுபவித்ததோ 2-மணி நேர வேதனை.அந்த குடும்பம் போகும் பம்பாய் ரயிலில் ,2-நாள் அவர்களின் சக பிராயணிகளின் கதியை நினைத்து பார் ."


அப்பொழுது என் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் ." தம்பி! உன் நண்பனோ 2-மணி வேதனை பொறுக்க முடியாமல் சண்டை போட கிளம்பினான். நீயோ ,எவர்களோ 2-நாள் படப் போகும் வேதனையை எண்ணி கொடூரமாக சந்தோஷப் படுகிறாய் .அனால் நீங்கள், ஒரு நிமிஷமாவது , அவள் கணவன் நித்தியம் படும் வேதனையை நினைத்து பார்த்தீர்களா?. அந்த மனிதன் காட்டிய பொறுமைக்காகவாது நீங்கள் சற்று நேரம் மௌனமாக இருங்கள்."


அதன் பிறகு நானும் பானர்ஜியும் ,இறங்கும் வரை மௌனமாகவே இருந்தோம்.


----------------------------------நிறைவு பெற்றது--------------------------------------Rate this content
Log in

Similar tamil story from Inspirational