காந்தி ஜெயந்தி
காந்தி ஜெயந்தி
சுந்தரேசனின் குடிப்பழக்கம் ஆரம்பமானதே , அவனுடைய அருமை மனைவி இறந்த பிறகுதான் . காலை வேளையில் அலுவுலக வேலையில் தன்னை மறந்து மூழ்கி விட்டாலும், இரவின் தனிமையின் வாட்டுதலில் , இந்த பழக்கத்திற்கு அடிமையானான்.
சுந்தரேசனுக்கு பத்து வயதில் அருமையாக ஒரு மகன் இருந்தான் . பெயர் மகேஷ் . படிப்பில் மகா சூட்டிகை . மகனின் பரமாரிப்பில் , சுந்தரேசன் ஒரு குறையும் வைக்கவில்லை . மகனிடம் எப்பொழுதும் அன்பாக இருப்பான்.
தன்னுடைய குடிப் பழக்கம் , மகனுக்கு தெரிந்து விடக் கூடாது என்று , அவன் தூங்கிய பிறகு , தன்னுடைய அறையின் தனிமையில் மட்டுமே மது அருந்தும் பழக்கத்தை வைத்திருந்தான் .ஆனாலும் , சில நாட்கள், போதை அதிகமாகி , துயரத்தில் உரக்க அரற்றுவான் . இதனாலேயே, காலனியில் உள்ள மற்ற குடித்தினக்காரர்கள் அவனிடமிருந்து விலகியே இருந்தனர்.
அன்று அக்டோபர் 2-ம் தேதி. மகேஷின் பள்ளியில் அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவிதை , நாடகம் மற்றும் பேச்சுப் போட்டி என்று பல நிகழ்ச்சிகள் இருக்கும். மகேஷ் , அன்று நடக்கும் நாடகத்தில் தான் முக்கிய பகுதியில் பங்கேற்று நடிக்கப் போவதாகவும், சுந்தரேசன் அதை பார்ப்பதற்கு கட்டாயம் வரவேண்டும் என்று கடந்த 10 நாட்களாகவே , தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் , சுந்தரேசன், அன்று அலுவலகத்தை விட்டு கிளம்பும் பொழுது மிகவும் நேரம் ஆகிவிட்டது . அவன் , பள்ளி அரங்கில் நுழையும் பொழுது விழா முடியும் தருவாயில் இருந்தது. இருட்டில் கடைசி வரிசையில் அமர்ந்து , மேடையை நோக்கினான்.
விழாவின் பிரதம விருந்தினரான ஒரு முதியவர் பேசிக் கொண்டிருந்தார்,
".......இந்த விழாவின் மூலம் காந்தியடிகளின் கொள்கைகளை இந்த பிஞ்சு உள்ளங்கள் அறிவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திய பள்ளி ஆசிரியர்களை நான் மெச்சுகிறேன். மற்றும் காந்தியடிகளின் 'குடி குடியைக் கெடுக்கும்' என்ற கொள்கையை நாடகத்தின் மூலம் அருமையாக எடுத்துக் காட்டிய சிறுவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் . குறிப்பாக , குடியினால் கெட்டுப் போய் பிறகு திருந்தி வருகிற குடும்பத் தலைவனாக நடித்த செல்வன் மகேஷுக்கு 'இன்றைய தலை சிறந்த மாணவன் ' பரிசை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் "
பலத்த கைத் தட்டல்களுக்கு நடுவில் மகேஷ் மேடையேறி பரிசை பெற்ற பொழுது, சுந்தரேசனின் மனம் பூரித்து போய் அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.
அப்பொழுது முன் வரிசையில் இருவர் பேசிக் கொள்வது சுந்தரேசன் காதுகளுக்கு எட்டியது ,
"சும்மா சொல்லக் கூடாது , சார் . அந்த பையன் பரிசுக்கு தகுதியானவன்தான் . இந்த சின்ன வயசில் என்ன அருமையான நடிப்பு சார். அவன் நடிப்பதை பார்த்த எவர் மனசும் இளகிவிடும் ."
" சரிதான் , சார். உங்களுக்கு தெரியாது . இவன் அப்பன் ஒரு குடிகாரன். அப்பன் குடித்து விட்டு வீட்டிலே போடும் ஆட்டத்தைப் பார்த்து பையன் பழகியிருப்பான் . நாடகத்தில் அப்பனைப் போலவே நடித்திருப்பான். அவனும் பெரியவன் ஆன பிறகு நிஜமாகவே குடித்து விட்டு ஆட்டமும் போடலாம் . இவனுக்கெல்லாம் காந்தி ஜெயந்தி ஒன்றுதான் குறைச்சல் ."
சுந்தரேசனுக்கு இதைக் கேட்டு மனதில் 'சுரீர் ' என்றது . அரங்கின் இருட்டிலேயே வெளியில் வந்த பொழுது , அவன் ஒரு முடிவுக்கு வந்தான் . குடிப் பழக்கத்தை விட்டு, புது வாழ்க்கை தொடங்க தனக்குள்ளேயே சபதம் செய்து கொண்டான். மகனுக்கு இன்று பள்ளியில் கிடைத்த பரிசை விட, இதுதான் பெரிய பரிசாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டான் . பிறகு , மகேஷ் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
இவ்வாறு காந்தியடிகளின் பிறந்த நாளன்று குடியினால் கெடவிருந்த ஒரு குடும்பம் சரியான வழியில் செல்ல ஆரம்ப அடிகள் எடுத்து வைத்து , அந்த மகான் கனவுகளில் ஒரு துளி நினைவானது.
----------------------------------நிறைவு பெற்றது--------------------------------------