முதியோர் இல்லம்
முதியோர் இல்லம்


"உங்க பிள்ளையாண்டனை இன்று செங்கல்பட்டு முதியோர் இல்லத்தில் பார்த்தேன் .ஏதோ அட்மிஷன் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் .என்ன விஷயம் உங்களை அங்கு கொண்டு விடப் போகிறானா ?"
பக்கத்து வீட்டுக்காரர் கேட்ட இந்தக் கேள்விக்கு ,பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றனர் பட்டாபிராமன் தம்பதியினர்.
இரவு வீடு திரும்பிய அவர்களின் மகன் , இதை பற்றி ஒன்றும் பேசவில்லை .
சாப்பிடும் சமயம் அவர்கள் பேச முற்பட்ட பொழுதும் , அவன் காதில் போட்டு கொள்ளாமல் ஏதோ ஆபீசில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான் .
படுக்கப் போகும் பொழுது
"நாளைக்கு சீக்கிரம் குளித்து விட்டு ரெடியாக இருங்கள். செங்கல்பட்டு வரைக்கும் போக வேண்டும்.வழியில் டிபன் சாப்பிட்டுக் கொள்ளலாம் " என்று சொன்னான் .
செங்கல்பட்டுக்கு எதற்கு போகவேண்டும் என்று கேட்டதற்கு "எல்லாம் நல்ல விஷயம் தான் " என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான் .
அன்று இரவு பட்டாபிராமன் தம்பதியினர் தூங்கவேயில்லை .
அதிகாலை பெட்டியில் துணிமணிகளுடன் அவர்கள், வாசல் அறையில் கனத்த மனதுடன் உட்கார்ந்து இருந்தனர்.
.
"ரெடியா?" என்று கேட்டுக்கொண்டே வந்த அவர்கள் பிள்ளையாண்டான் பெட்டிகளைப் பார்த்து,
"இது எதற்கு?" என்றான்
"இல்லையப்பா , எங்களால் இந்த தள்ளாத வயதில் ஒரு உபயோகமும் இல்லை. உனக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை . நீ பார்த்து இருக்கும் முதியோர் இல்லத்திலேயே நாங்கள் சந்தோசமாக இருந்து கொள்கிறோம்." என்றனர் பட்டாபிராமன் தம்பதியினர்.
"அடப் பாவமே! நான் இருக்கும் போது நீங்கள் எதற்கு முதியோர் இல்லத்திற்குப் போக வேண்டும்.நீங்கள் ரொம்ப நாட்களாக என்னைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா ? உங்களக்கு பிறகு என்னுடைய வயதான காலத்தில் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று . அதுதான் உங்களை செங்கல்பட்டில் இருக்கும் இந்த முதியோர் இல்லத்திற்கு கூட்டி போய், அங்கு வயதானவர்களை பார்த்து கொள்வதற்கு எவ்வளவு வசதிகள் இருக்கிறது என்று உங்களக்கு காட்டி .,உங்கள் கவலையைப் போக்க விரும்பினேன் . போங்கள் , பெட்டிகளை வைத்துவிட்டு கிளம்புங்கள் ," என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ,கண்ணன் ,பட்டாபிராமன் தம்பதியினரின் 50 வயதான கட்டை பிரமச்சாரியான ஒரே பிள்ளையாண்டான்.
----------------------------------நிறைவு பெற்றது--------------------------------------