பெண்ணிற்கு பெண்ணே எதிரி
பெண்ணிற்கு பெண்ணே எதிரி


என் மனதில் தினமும் தோன்றும் கேள்விகள் எனக்குள் கொண்டுவரும் மாற்றங்கள் ஏன் என்னை தன்னிலை மறக்கச் செய்கின்றன? பைத்தியம் போல என்னை பிதற்ற வைத்திடும் நாட்கள் வீட்டின் அமைதியினையும் தெரிந்தே அழிக்கின்றதே! மறக்க வேண்டியவற்றை கட்டாயமாக மறக்க வேண்டும். நம்மை என்றும் அலைக்கழிக்கும் நினைவுகளின் தாக்கத்தினில் நம்முடைய இயல்பு நிலை மாறாமல் வாழ்வதே ஒரு வரமாகும்.
நான் மறக்க நினைக்கும் சம்பவம் ஆண்டுகள் முப்பதினைக் கடந்திருந்தாலும் இன்றும் எனக்குள் அழிக்க முடியாத வலியினை தூண்டியே கண்களில் நீரினை வரவைக்கின்றது. என்னைக் காயப்படுத்திய நிகழ்வுகளை பதிவு செய்வதே என்னுடைய மனதிற்கு நிம்மதியினை நிச்சயம் தரும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சில வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் இருந்தன. மிக சிறிய அளவில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டன. மற்ற நிகழ்ச்சிகள் யாவும் இந்தியில் மட்டுமே ஒளிப்பரப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் தமிழ் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பாகும். அந்நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாடல்களை பார்ப்பார்கள்.
பொதுவாக சந்தியாவிற்கு அந்த பாடல் நிகழ்ச்சியினை பார்க்க விருப்பம் இல்லாததால், வானொலியில் நிகழ்ச்சிகளை கேட்டபடி அந்த மாலை நேரப் பொழுதினை செலவிடுவாள். அவளுடைய தீவினைப் பலனாக அன்று அது நடந்தது. அவளது கணவனின் தங்கை அவளை அன்று அப்பாடல் நிகழ்ச்சியினைப் பார்க்க அழைத்த
ாள். திரைப் பாடல்களைப் பார்க்க அவ்வளவாக மனதில்லை என்றாலும் சென்றாள். கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகள் மட்டுமே அப்பொழுது பயன்பாட்டில் இருந்தது.
வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் திரைப்படப் பாடல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. வரவேற்பறையின் விளக்கு எரியவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் வெளிச்சம் மட்டுமே அறையில் நிறைந்திருந்தது. அறையினுள் நுழைந்தவள் தரையில் அமர்ந்தாள். நிகழ்ச்சியின் இடைவேளையில் அவளது கணவரின் தம்பி சந்தியாவை அங்கிருந்த சோபாவில் அமரச் சொன்னான். தயக்கத்துடன் சோபாவில் அமர்ந்து நிகழ்ச்சியினைப் பார்த்தவள், நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனடியாக அந்த அறையினை விட்டு வெளியேறினாள். சாதரண நிகழ்வான அது அவளது வாழ்வில் மனதினை பாதிக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
“இனியும் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்” முதலில் எதைப்பற்றிப் அவளது கணவர் பேசுகிறார் என்று சந்தியாவிற்கு புரியவில்லை. புரிந்த பிறகு அவளது மனது வலித்தது. என்ன தான் படித்திருந்தாலும் ஒரு சாதரண நிகழ்வு குடும்பத்தில் திரித்து பேசப்படும் போது ஒரு பெண்ணின் உணர்வுகளை எந்த அளவு காயப்படுத்தும் என்பதை யாரும் நினைப்பதில்லை. மனதின் ஆழத்தில் உள்ள பொறாமை உணர்வுகளே அதற்கு காரணம் என்று புரிந்த நொடியில் சந்தியா உணர்ந்தாள் பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்று.