இசையெனும்...
இசையெனும்...
இத்தனை வருஷம் சென்னையில் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடக்கும் எந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில்லை. இந்த வருடம் அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
மகாகவி பாரதியாரின்
"திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது"
என்ற பாடலின் வரிகளைப் போல் இசை வெள்ளம் சென்னையின் மயிலாப்பூரில் எல்லா திசையிலும் பரவி மக்களின் வாழ்வில் பாசிட்டிவ் அலைகளை கொண்டு வருகிறது என்று சொன்னால் மிகையில்லை. ஆனாலும் அந்த பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கிறது.
சென்னை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா பவனத்தில் நடந்த கர்நாடக இசைக் கருவிகளின் ஒலி வெள்ளத்தினில் திக்கு முக்காடி போனேன். வீணை இசை கச்சேரிக்கு தான் எனக்கு அழைப்பு கிடைத்திருந்தாலும் நான் அங்கே சீக்கிரமாகவே சென்று விட்டேன். அங்கே அப்போது நடந்து கொண்டிருந்த தாள வாத்திய கச்சேரியினை முதல் முறையாக இரசிக்கும் அனுபவம் கிடைத்தது. மிருந்தாங்கம், கடம் ஆகியவை ஒன்றாக ஒலிக்கும் நேரடி அனுபவத்தினை முதல் முறையாக பெற்றேன்.
கடந்த சில வாரம்களாகவே என் மனம் தேவையற்ற குழப்பங்களுடன் நிறைந்திருந்தது. அதிர்ந்து ஒலித்த மிருதங்கத்தின் ஒலியில் என் மனம் லேசானது. என்னை அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகி என் கன்னங்களை நனைத்தது. கண்களை மூடி நான் இசையில் லயித்த போது ஏனோ சிவனின் நடன அசைவுகள் என் அகக்கண்ணில் உணரமுடிந்தது. மறக்க முடியாத ஒரு இசை அனுபவம் அது.
அடுத்தாக என் மென்மையான உணர்வுகளைத் தழுவி சென்ற வீணை இசை கச்சேரி. மெல்லியதாக என் மனதினை வருடி இன்னும் வாழ்வினில் நான் இரசிக்க வேண்டியவை எத்தனையோ என்று எனக்குள் உணர்த்தியது. காதுகளை வருடிய கவிதை வரிகளைப் போல வீணை இசை எனக்குள் இறங்கியது.
முப்பது வருடங்களுக்கு மேலாக நான் சென்னையில் வசித்தாலும் இதுவே முதல் முறை. அந்த அரிய சந்தர்ப்பத்தினை அளித்த என் மாமாவின் மகளுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த சிறிய வயதில் வீணை வாசிப்பதில் தலை சிறந்த அவருடைய மகளுக்கு என்றும் இறைவனின் ஆசிகள் உரித்தாகட்டும். இது நிச்சயமாக அந்த சரஸ்வதியின் அருள் கடாச்சமே. மேலும் மேலும் சிறந்திட வேண்டி வாழ்த்துகிறேன்.
