அமைதியான வாழ்க்கை வாழ
அமைதியான வாழ்க்கை வாழ
இன்றைய கால கட்டத்தில் நம்முடைய வாழ்க்கை நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. விடியும் ஒவ்வொரு நாளும் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தொடங்குவதால் அதனுடன் மன அழுத்தமும் படபடப்பும் சேர்ந்து கொள்கிறது. மிக சிலரே இந்த பாதிப்பிலிருந்து விலகி இருக்கின்றனர்.
வசதியான வாழ்க்கை எல்லாவிதத்திலும் சுகத்தினை விட சோர்வினைத்தான் அதிகம் கொண்டு வந்துள்ளது. நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளே அதிகமாக இருந்தது. ஒரு நாளின் முடிவினில் வேலை செய்த களைப்பினால் சீக்கிரமாகவே தூங்க சென்றனர். அதிகாலையில் சிக்கீரமாக எழுந்து தங்களுடைய வேலைகளை துவங்கினர். அதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது.
உடல் ஆரோக்கியத்தினை பாதிக்கும் எந்தவிதமான மறைமுக பாதிப்பும் அவர்களுக்கு இல்லை. சுத்தமான காற்று, சத்தான ஆரோக்கியமான உணவு மற்றும் பழக்க வழக்கங்களால் அவர்களது வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருந்தது.
ஏன் மன அழுத்தம்
உங்கள் வீட்டின் சின்னஞ்சிறு குழந்தையை கேளுங்கள். அது கூட சொல்லும் நான் stressல் இருக்கிறேன் என்று. தற்காலத்தின் பாடமுறைகள் அதிகமாக மூளைக்குத்தான் வேலையினைக் கொடுக்கிறது. உடல் வலிமையினை தரும் ஆரோக்கியமான பயிற்சி முறைகள் உடலை மட்டுமல்ல உள்ளத்தினையும் பண்படுத்த வேண்டும்.
ஆரம்ப பள்ளியிலிருந்து தரப்படும் முறையான உடல் கல்வி பயிற்சிகள் அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது அன்றாட வாழ்வினில் சந்திக்கும் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டிய மன உறுதியினை அளிக்க வேண்டும். வெறும் ஏட்டு படிப்பு மட்டும் முக்கியம் என்று எண்ணும் போது தான் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன. மன அழுத்தம் ஒரே நாளில் வருவதில்லை. அது சிறிய அளவில் துவங்கி நாளடைவில் பெரிதாக தெரிகின்றது.
மன அழுத்தத்தின் முதல் அறிகுறிகள்
அடிக்கடி தலைவலி: தினமும் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் சாரா தலைவலி என்று ஒரு வாரமாக சொல்லிக் கொண்டிருந்தாள். மருத்துவரிடம் சென்ற போது எல்லாம் சரியாக இருப்பதாகவே சொன்னார். வீட்டில் அவளது தந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் சூடான விவாதங்களே காரணம் என்று அறிந்த போது அவளது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் விவாதிப்பதை தவிர்த்தவுடன் அவளது தலைவலியும் மறைந்து போனது.
கவனம் செலுத்துவதில் சிரமம்: பள்ளியில் பாடங்களை கவனிப்பதில் ரவிக்கு சிரமம் ஏற்பட்டபோது அவனுடைய பள்ளியின் ஆலோசகர் காரணத்தினை கண்டுபிடித்தார். நீண்ட நேரம் தொலைக்காட்சியில் அல்லது கைபேசியில் செலவிடுவதே என்று கூறியதுடன் அவனது பெற்றோர்களுக்கு எவ்வாறு அதைக் கையாளுவது என்றும் சொல்லிக் கொடுத்தார்.
வயிற்றில் அசௌகரியம்: கீதாவின் வீட்டின் அருகில் எப்போது சண்டை சச்சரவு நடக்கும். வாரத்தின் இறுதியில் அவளது தந்தை மது அருந்தி தேவையில்லாத வார்த்தைகளை பேசும் போது அவள் வாயடைத்து போய் இருப்பாள். உணர்வுகளை தன்னுள் பூட்டிக்கொண்டதால் அவளது வயிற்றினை அது பாதித்தது.
சீரான தூக்கமின்மை: சீரான ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டாலும் அது மன அழுத்தத்தினை ஏற்படுத்தும். காலையில் புத்துணர்வுடன் வேலைக்கு அல்லது பள்ளிக்கும் செல்லவேண்டும் என்றால் அமைதியான தூக்கம் அவசியம். குடும்ப செலவினை சமாளிக்க தேவையான பணம் இல்லாதது சீதாவிற்கு மன அழுத்தத்தினை தந்தது. நடு இரவினில் தூக்கம் களைந்து அவள் அடிக்கடி எழுவது அவளது காலை நேர வேலைகளை பாதித்தது. இதனால் குழந்தைகளிடம் சாந்தமாக அவளால் பேச முடியவில்லை.
பதட்டமான மன நிலை: எப்போதும் பதட்டமான மனநிலையில் இருக்கும் பார்வதிக்கு அதற்கான காரணம் முதலில் தெரியவில்லை. எந்தவொரு நம்பிக்கையினையும் அவளுக்கு கொடுக்க யாரும் அவளது குடும்பத்தில் இல்லை. சுற்றம் சூழ அவள் வாழ்ந்தாலும் அவளது நிலைமையினை புரிந்து கொள்ள யாரும் இல்லை. அவளது கவனத்தினை தைப்பதிலும் பூத்தையல் போடுவதிலும் செலுத்த ஆரம்பித்த பின்பு அவளது மனம் அமைதி அடைந்தது.
தனியாக பேசுவது: அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் போது அவளை அறியாமல் பேசத் துவங்கினாள் லீலா. சமைத்துக்கொண்டே அவள் தனக்குத் தானே பேசுவது தினசரி நடவடிக்கையாக மாறிப்போனது. அவர்கள் வீட்டுக்கு தற்செயலாக வந்த அவளது தோழி அவளை ஒரு மனவியல் ஆலோசகரிடம் அழைத்து சென்றாள். அவள் குணமடைய நீண்ட நாளானது.
எதுவுமே பேசாமல் இருத்தல்: உடைக்க முடியாத மௌனத்தில் ஆழ்ந்து போகும் ஒருவரை சரி செய்வது மிகவும் கடினமான ஒன்று. மஞ்சு எதுவுமே கூறாமல் இருப்பது ஆரம்பத்தில் எந்த விதத்திலும் குடும்பத்தினை பாதிக்கவில்லை. ஆனால் முக்கியமான முடிவுகளை எடுக்கும் சமயத்தில் அவளது மௌனம் தேவையில்லாத அழுத்தமான சூழலை வீட்டிற்க்குள் உருவாக்கியது.
எதற்கு எடுத்தாலும் அழுவது: எப்போதும் கலகலப்பாக பேசுபவள் சித்ரா. ஆனால் அன்று பள்ளியிலிருந்து வந்தது முதல் எதுவுமே பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. அவளது அம்மா என்னவென்று கேட்டபிறகும் அவள் எதுவுமே சொல்லவில்லை. அவளது அக்கா அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கேட்டாள். எதுவும் கூறாமல் ஒரு பத்து நிமிடத்திற்கு சித்ரா அழுதாள்.
பிறகு மெதுவாக காரணத்தினை கூறினாள். பள்ளியில் நடந்தது மிகவும் சாதாரணமான சின்ன விஷயமாக இருந்தாலும் அது அவளை அதிகமாக பாதித்து இருந்தது. அவளை குற்றம் சொல்லாமல் அவ்வாறு நடந்தால் எவ்வாறு கையாளுவது என்று எடுத்து சொன்னவுடன் அவளது அழுகை நின்றது.
மன அழுத்தத்தினை எவ்வாறு சமாளிப்பது
நாம் பின்பற்றும் வாழ்கை முறைகளே தேவையில்லாத மன அழுத்தத்தினை போக்கக்கூடியது என்றால் உங்களால் நம்மமுடிகிறதா?
விடியலில் எழுந்திரு
விடியற்காலை பொழுது மனதிற்கு அதிகமான ஊக்கம் அளிக்கும் மருந்தினை கொண்டுள்ளது. தமிழர்களின் பழக்க வழக்கங்களில் முதன்மையானது அதிகாலை பொழுதில் எழுந்து வாசல் தெளித்து கோலமிடுவது. அதிகாலையில் ஆக்ஸிஜன் நிறைந்த காற்றினில் சுவாசிக்கும் போது அது நம் உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியினை நிச்சயமாக தரும்.
வாசலில் கோலமிடுவது ஒரு சாதாரண வேலையில்லை. கோலங்கள் நம் மனதின் பிரதிபலிப்புகள். ஒவ்வொரு கோலமும் ஒரு செய்தியினை உலகிற்கு சொல்கிறது. இன்றைய காலத்தில் எத்தனை பெண்கள் விடியலில் எழுந்து கோலமிடுகிறார்கள்.
தியானம் மற்றும் யோகா பயிற்சி
இன்றைய பள்ளிகளில் யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதனை நாம் வீட்டிலில் காலையில் தினமும் பயிற்சி செய்வது ஒரு நாளினை சிறந்த முறையில் துவங்கிட உதவும். தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து மனதினை அமைதிப்படுத்த உதவுகிறது.
உடற்பயிற்சி
தினமும் காலையில் அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்வது மனதினை வலிமைப்படுத்தவும் மன அழுத்தத்தினை குறைக்கவும் உதவும். முப்பது நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும் உங்களது உடல் நிலை பொறுத்து செய்ய வேண்டும்.
தினசரி நடைபயிற்சி
தினமும் 40 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்வது நம்முடைய உடலை மட்டுமல்ல நம்முடைய மனத்தினையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
இயற்கை சூழல்
தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, பசுமையான மரங்கள் மற்றும் செடிகள் உள்ள இடங்களில் உங்களது காலை மற்றும் மாலை நேரத்தினை செலவிடுவது மனதிற்கு அமைதியினை அளித்து மன அழுத்தம் நேராமல் காத்துக்கொள்ள முடியும். அருகில் உள்ள தோட்டங்களில் உங்களது நேரத்தினை செலவிடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியினை தரும்.
பொழுதுபோக்கு
உங்களுடைய ஒய்வு நேரத்தினை உங்களுடைய மனதிற்கு பிடித்த செயல்களில் செலவிடும் போது மனம் அமைதியடையும். புத்தகங்கள் படிப்பது, ஓவியம் வரைவது அல்லது தைப்பது சிறந்த பழக்கங்கள் ஆகும். கைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதினை தவிர்ப்பது நல்லது.
உணவே மருந்து
நம்முடைய அன்றாட உணவினில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருப்பது நம்முடைய மன நலத்திற்கும் மிகவும் அவசியம்.
ஆழ்ந்த தூக்கம்
அமைதியான ஆழ்ந்த தூக்கம் நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று. நாம் தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.
முதலில் மன அழுத்தம் ஒரு சிறிய பிரச்சினையாகத்தான் துவங்கும். அதனைக் கண்டுபிடித்து தேவையானவற்றை செய்வது மிகவும் அவசியம். மன அழுத்தத்திற்கான அனைத்துக் காரணங்களையும் உடனடியாக அகற்றுவது இயலாவிட்டாலும், அவற்றை சமாளிக்கும் முறைகளை கையாளுவது சிறந்த தீர்வாகும்.
