DEENADAYALAN N

Abstract

4.5  

DEENADAYALAN N

Abstract

ஞாயம்தானா? - ஒன்பது

ஞாயம்தானா? - ஒன்பது

3 mins
24.1K


ஞாயம்தானா? - ஒன்பது

 

இது ஞாயம்தானா?(safe work) 


அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


கடந்த இரண்டு மாதங்களாக, வீட்டில், நீர் மாசு நீக்கி எந்திரம், சலவைப் பொறி போன்றவை பழுதாகி இருந்தன. சில மின் குழல் விளக்குகள் தங்கள் கடைசி மூச்சை நிறுத்தியிருந்தன. சில நீர்க் குழாய்கள் நோய் வாய்ப்பட்டு எழ முடியாமல் படுத்துக் கிடந்தன. கழிவறையின் மரக்கதவு ஒன்று நீரில் ஊறி ‘பிச்சிக்கவா பிடுங்கிக்கவா’ என்று பல்லிளித்துத் தொங்கிக் கொண்டிருந்தன. ‘கொரோனா’ அருளிய நான்கு ஊரடங்குகளின் கைங்கரியத்தால், எல்லாப் பழுதுகளுமே ‘உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ’ என்று எக்காளமிட்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன.


இந்த தருணத்தில்தான், இனிமேல் – வேக்சின் கண்டு பிடிக்கும் வரை – கொரானாவோடு ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கைதான் என்னும் நிலை உருவாகி இருக்கிறது. பழுது நீக்க ‘ஆள்இல்’லை என்று இவ்வளவு நாள் சும்மா இருந்த ‘இல்ஆள்’ (இல்லாள்) இப்போது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


புதிதாய் வீட்டிற்குள் வரும் நபர்களின் கொரானா மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கும்? இவ்வளவு நாள் வீட்டுக்குள் பராமரிக்கப் பட்டு வந்த பாதுகப்பான உட்சூழல் கலைக்கப் பட்டு விடுமா? இன்னும் ஓரிரு மாதங்களுக்கு இப்படியே சமாளித்தால் – ஏதேனும் மருந்து மாயம் கண்டுபிடிக்கப்பட்டு – இந்த கொரோனா எதிரியை வெட்டிச் சாய்த்து சவப்பெட்டியில் நெட்டித் தள்ளிவிடும் நிலை வந்து விடுமா? – என்று மனதில் பல கேள்விகள் எழுந்தன.


அதே சமயம் எவ்வளவு பேர் நெடு நாள் வேலையின்றி மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். மக்கள் எல்லோரும் களம் இறங்கி இயல்பைத் திருப்ப முயலாவிட்டால், பலரது வாழ்வில் பொருளாதாரம் சிதைந்து பொசுக்கென அமுக்கி விடுமோ என்ற உணர்வு ஒருபுறம் மனதை அழுத்தியது.


அழைக்கப்படும் தொழிலாள அன்பரை/நண்பரை ‘கொரானா தடுப்புக் கவசங்களை முழுமையாக அணிந்து வரச்சொல்ல வேண்டும். கருவிகள் மற்றும் பைகள் ஆகியவற்றை, முழுமையாக, தொற்றுநீக்கி திரவத்தால் குளிப்பாட்டி எடுத்து வர சொல்ல வேண்டும். இவைகளை ஐயந்திரிபற கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்திரவாகவும், கெஞ்சியும், கூத்தாடியும், வேண்டியும் வரவழைத்து வேலை வாங்க வேண்டும்.


இவ்வாறு மன ஓட்டம் இருந்த பொழுது திடீரென காலை சுமார் பதினோரு மணிக்கு அழைப்பு மணி அழைத்தது. அபார்ட்மெண்ட் என்பதால் வீட்டிற்கு விருந்தினர் என்று ஒருவர் வந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. குடியிருப்போர் தவிர மற்ற அனைவரின் பரிவர்த்தனைகளும் அபார்ட்மெண்ட்டின் பெரிய நுழைவுக் கதவோடு நின்று விட்டிருந்தது. எனவே ‘வீட்டுக் கதவின் அந்தப் பக்கத்தில் யார்?’ என்ற ஒரு வித குழப்பத்தோடு கதைவைத் திறந்தால் அங்கே…


இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வழக்கமாக யு பி எஸ் சோதனைக்கு வருபவர் நின்றிருந்தார். வாய்க் கவசம் இருந்தது. ஆனால் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.


‘இப்போது வேண்டாமே..’ என்று நான் தயங்கிய போது, ‘எங்கே போனாலும் இப்படியே சொல்கிறார்கள் சார்.. ஐந்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன்’ எனறு சொல்லி, என் ஒப்புதலுக்கு காத்திராமல் யு பி எஸ் நோக்கி நகர்ந்து அதை திறக்க ஆரம்பித்து விட்டார்.


முதலில் சோப் திரவத்தில் கைகளைக் கழுவிக் கொண்டு அவர் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

 

அதன் பின் இடையில் நானாகவே வற்புறுத்தி, சேனிடைசரைக் கொடுத்து கைகளை சுத்தப் படுத்திக் கொள்ள சொன்னேன். செய்தார். பழைய துணி கேட்டார். கொடுத்தேன். சுமார் பத்து நிமிடங்களில் தன் பணிகளை முடித்தார். புறப்படும்போது(!) கைகளைக் கழுவ வேண்டும் என்றார். குளியலறை வாஷ் பேசினைக் காண்பித்தேன். அங்கிருந்த திரவ சோப்பை எடுத்து கைகளைக் கழுவிக் கொண்டார். அவருக்கான பணத்தைக் கொடுத்தேன். விடை பெற்று சென்று விட்டார்.

                         

கொரோனாவின் தற்போதைய சூழலில், வீட்டிற்குள், எதிர் பாராத வெளி நபர் ஒருவரின் வரவு, அவர் ஆற்றிய பணி, அவர் நடமாடிய இடங்கள் எல்லாம் ஒரு கனவு போல் இருந்தது.


அவர் சென்றவுடன் யு பி எஸ் (வெளிப்பக்கம்), குளியறை வாஷ் பேசின், திரை சீலை, கதவு கைப்பிடி, அழைப்பு மணி என்று அனைத்தும் சோப்பு திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.ஒன்று புரிந்தது. வீட்டு உபகரணங்களின் பழுது நீக்கும் ஒரு பணிக்காக, வீட்டிலிருந்து அழைப்பவர்களுக்கும் சரி - அந்த வேலைக்காக வரும் பணியாட்களுக்கும் சரி - இது ஒரு புது அனுபவம்தான். சில குளறுபடிகள் ஏற்படத்தான் செய்யும். ஓரிரு முறை அனுபவத்திற்கு பிறகுதான் ஒரு செயல்முறை அமையும். எப்படி இருந்தாலும் இருதரப்பும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு (முகக் கவசம் – கையுறை அணிதல், தகுந்த திரவங்களால் கைகளை சுத்தம் செய்து கொள்ளல், முடிந்த வரை விலகி இருந்து பணி செய்தல்) அம்சங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் இருத்தல் அவசியம்.


அடுத்த வேலைக்கு ஆட்களை அழைக்கலாமா? – யோசனை.


‘ஓரிரு நாட்கள் போகட்டும்.. பணியாளர்கள் கொஞ்சம் அனுபவம் பெறட்டும்’ என்றும் தோன்றியது.


(ஆனால் எல்லோருமே இப்படி நினைத்தால் அவர்கள் எப்படி அனுபவம் பெறமுடியும்?)


உடன் அழைக்கலாம் என்று மனிதம் சொல்கிறது. ஓரிரு நாட்கள் போகட்டும் என்று பாதுகாப்பு உணர்வு சொல்கிறது? – என்ன செய்யலாம்?

Rate this content
Log in

Similar tamil story from Abstract