DEENADAYALAN N

Abstract

5.0  

DEENADAYALAN N

Abstract

ஞாயம்தானா? - மூன்று

ஞாயம்தானா? - மூன்று

2 mins
34.8K





அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சென்ற ‘ஞாயம்தானா?’ பதிவில் ஒரு மணப் பெண்ணின் எதிர்பார்ப்பை பார்த்தோம். அதற்கான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


இப்போது இன்னொரு பதிவைப் பார்க்கப் போகிறோம். படித்து விட்டு பதிவிடுங்கள் – எது ஞாயம் என்று!



ஒரு பேருந்தில் இரண்டு பேருந்துக்கான ஜனங்கள் அடைந்திருந்தனர். தவிர்க்க முடியாத காரணத்தால் நானும் அந்தப் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. எப்படியோ அடித்துப் பிடித்து ஏறி விட்டேன். கூட்டத்தின் நடுவில் கசக்கிப் பிழியப் பட்டு துவண்டு கிடந்தேன்.


எனக்கு சற்று முன்னால் சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையுடன் நின்று தவித்துக் கொண்டிருந்தார்.. அவர் அருகில் இருந்த இருக்கையில் இன்னொரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி அமர்ந்திருந்தார்.


‘ஏம்மா… அந்த அம்மா குழந்தையெ வெச்சிகிட்டு தவிச்சிகிட்டு நிக்குது. கொஞ்சம் அந்தக் குழந்தையெ வாங்கிக்கங்களேன்..’ என்றார் அருகில் இருந்த ஒரு நடுத்தர வயது மனிதர்.


ஆனால் அமர்ந்திருந்த அந்த அம்மா அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை!


இன்னொருவர் சற்று உரத்த குரலில் அந்த அம்மாவை அழைத்து, ‘ ஏம்மா.. இந்தக் கூட்டத்துலே உங்களெ இடமா குடுக்க சொல்றாங்க? அந்தக் குழந்தையெ வாங்கி வெச்சிக்கிலாம் அல்ல?’


அதற்கும் அந்த அம்மா அசையவில்லை!

மூன்றாமவர் சற்று கோபத்துடன் ‘ஏம்மா.. உன்னெதான்.. அந்தம்மா எவ்வளவு நேரமா குழந்தைய வெச்சிகிட்டு நிக்குது.. அந்தக் குழந்தையைத்தான் கொஞ்ச நேரம் வாங்கி வெச்சிக்கக் கூடாதா..?’ என்று கத்தினார்


ஊஹும்..


‘கல் நெஞ்சுக்காரி!’ ‘ராங்கிக்காரி!’ என வசைகள் புறப்பட்டன.


கடைசியில் கூட்டத்தின் அழுத்தமான வார்த்தைகளை தாங்க முடியாமல் அந்த அம்மா இருக்கையை விட்டு எழுந்து ஒதுங்கிக் கொண்டார். குழந்தையோடு இருந்த பெண் அமர்ந்து கொண்டார்.


சுமார் பத்து நிமிடம் கழித்து என் நிறுத்தம் வந்தது. நான் தட்டுத் தடுமாறி வழி பிதுக்கி விழி பிதுங்கி இறங்கினேன்.


திரும்பிப் பார்த்தால், அந்த அம்மாவும் என் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டிருந்தார்.


எனக்கு இரண்டடி பின்னால் அந்த அம்மா வந்து கொண்டிருந்தார்!


நான் சற்று தயங்கி நின்று ‘அம்மா.. தப்பா நினைச்சுக்காதீங்க. பஸ்ஸுலே அந்த கூட்டத்துலே அவ்வளவு பேர் சொல்லியும் - அந்த அம்மாகிட்ட இருந்து நீங்க குழந்தையெ வாங்கிக்கலே. ஆனா கடைசிலே எழுந்திருச்சி உங்க இருக்கையையே குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரொம்ப சிரமப் பட்டீங்க.. ஏன்னு தெரிஞ்சிக்கலாமா..?’


அந்த அம்மா தயக்கத்துடன் ஆரம்பித்தார்:

‘என்னத்தை சொல்ல தம்பி? நாலஞ்சி மாசத்துக்கு முன்னாலே இதே மாதிரிதான். பஸ்ஸுலே கூட்டம்னு சொல்லி குழந்தையை ஒரு அம்மா எங்கிட்ட குடுத்துச்சு. நானும் வாங்கி வெச்சிகிட்டேன்.. குழந்தையை திருப்பி வாங்கும் போது அந்தப் பெண் ‘ஐயையோ.. என் குழந்தையின் தங்க வளையல காணோம்’னு அலறுது.


எனக்கு பகீர்னு ஆகிடுச்சி. ஒரே அல்லோலகல்லோலம் ஆயிருச்சி. பஸ்ஸ காவல் நிலையத்திற்கு கொண்டு போங்கன்னாங்க. எனக்கு ரொம்ப பயமாயிருச்சி. என்னமோ கடவுள் புண்ணியம். அந்தம்மா திடீர்னு ‘இதோ வளையல் என்னோட புடவைலேயே மாட்டிகிட்டிருக்கு.’ ன்னு சொன்ன பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. அந்த அனுபவம் என் மனசுலே பதிஞ்சிடுச்சி. அதுக்கப்புறமும் எப்பிடி தம்பி குழந்தையெ வாங்கி வெச்சிக்க முடியும்?’


அந்த அம்மாவின் பரிதாப நிலை எனக்குப் புரிந்தது.


இது பற்றி உங்கள் கருத்தை பதிவிடுங்கள்!


அடுத்த ஞாயம் ஓரிரு நாளில்!



Rate this content
Log in

Similar tamil story from Abstract