DEENADAYALAN N

Abstract

5.0  

DEENADAYALAN N

Abstract

ஞாயம்தானா? - இரண்டு

ஞாயம்தானா? - இரண்டு

2 mins
35K

அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சென்ற ‘ஞாயம்தானா?’ பதிவில் ரேஷன் கடையில் ஒரு மூதாட்டி பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த இரண்டாவது பதிவில் வயதானவர்களின் வாழ்நிலை நிகழ்வுகள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ‘இது ஞாயம்தானா?’ என்று சொல்லுங்கள்.


“ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆகி விட்டால் நாம் உண்டு நம் வேலை உண்டுன்னு இருக்கணும். பற்று பாசத்தை விட்டொழிச்சிரணும். தாமரையிலைத் தண்ணீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கணும்! இதுவே ஞானத்தை அடையும் வழி!” – அறுபது வயதை கடந்த என் நண்பருக்கு எண்பது வயதைக் கடந்த அவரது அண்ணன் சொன்ன அறிவுரை இது!


பிறந்தது முதல் அம்மா, அப்பா, உடன் பிறந்தோர் மேல் பாசம்! பதினைந்து வயது முதல் நண்பர்களின் நட்பு சேர்ந்து கொள்கிறது. முப்பது வயது முதல் மனைவி, குழந்தைள் மேல் அன்பு, ஆசை, பாசம் தொடர்கிறது. அறுபது வயது முதல்.. பேரன் பேத்திகள் நம் உயிராகி விடுகின்றனர். வயதான காலத்தில் இவற்றை விட்டு விடுவது அவசியமா.. சாத்தியமா..?


ஒரு முறை, ஆசையாய், மீன் குழம்பு வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டிருக்கிறார் நண்பர். அது ஒத்துக் கொள்ளாமல், வாந்தி, பேதி என்று வீட்டை நாறடித்து விட்டார். ‘இப்படி அந்த கண்றாவியை சாப்பிட்டு, மற்றவர்களைக் கஷ்டப் படுத்த வேண்டுமா?’ என்று அவர் மனைவி மிகவும் கோபித்துக் கொண்டு விட்டாள். மனைவியின் அன்பு வெட்டுப்பட்டு விட்டது என்று துடித்தார் நண்பர்!


ஒரு முறை, மகன், மருமகள், பேரன், பேத்தி, மனைவியுடன் டூர் போயிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு பாதியிலேயே திரும்ப வேண்டியதாயிற்று. அனைவருக்குமே அவர் மேல் கோபம். ‘இனி மேல் இந்த மாதிரி டூர் போகும் சமயங்களில், நீங்கள் உங்கள் தம்பி வீட்டுக்குப் போய் தங்கி விடுங்கள். இல்லையென்றால் சிரமம்!’ என்று சொல்லி இருக்கிறான் அவரது மகன். அத்தோடு பாசம் வெட்டுப்பட்டு விட்டதாக துவண்டு போனார் நண்பர்.


உயிருக்கு உயிராய் பார்த்து, விளையாடி, முதுகிலும் கழுத்திலும் சுமந்து ஆசை ஆசையாய் இருந்த பேத்தி, இரட்டை சடை போட்டு பள்ளி சென்ற ஒரு நாளில், ஏதோ ஒரு கருத்தை அவர் சொன்ன போது ‘வயசான காலத்துலே இந்த தாத்தாவை சும்மா இருக்க சொல்லும்மா..’ என்று பேத்தி சொன்ன போது நண்பரின் உயிரே வெட்டுப்பட்டது.


இத்தகைய நிகழ்வுகள் தொடர தொடர, மற்றவர்களை விட்டு விலக முயற்சிக்கும் அவல நிலைக்கு அவரை ஆளாக்காமல், மற்றவர்கள் தாங்களாகவே அவரை விட்டு விலகி சென்றது அவருக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப் பிரசாதமாக நான் கருதினேன்! ஆனால் அவரோ மற்றவர்கள் அவரை புறக்கணிப்பதாக வருத்தப்பட்டார்.


ஒரு வயதானவரிடம் மற்றவர்கள் இப்படி நடந்து கொள்வது எதார்த்தமான ‘ஞாயம்தானோ’ என்று தோன்றும் அதே வேளையில் – ‘இது ஞாயம்தானா?’ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.


நீங்கள் சொல்லுங்கள்! உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் இது ஞாயம்தானா?


அடுத்த பதிவு ஓரிரு நாளில்!

Rate this content
Log in

Similar tamil story from Abstract