ஞாயமா அம்மா?
ஞாயமா அம்மா?
கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! – மூன்று
ஞாயமா அம்மா?
(கோவை என். தீனதயாளன்)
ஹை விவு, அவி, ரிஷி, ரத்திகா, அபி மற்றும் மை டியர் குட்டீஸ்!
கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?
‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!
முகமது மிகவும் சோகமாக இருந்தான். எப்போது விளையாட அழைத்தாலும் ஓடி வந்து விடுவான். ஆனால் இப்போதெல்லாம் அவ்வளவு ஆர்வமாக வருவதில்லை.
‘இப்போ எல்லாம் முகமது சரியாவே விளையாட மாட்டேங்கிறாம்மா‘ என்று வைஷு தன் அம்மாவிடம் புகார் கூறிக் கொண்டிருந்தான்.
வைஷுவின் அம்மா முகமதுவை கூப்பிட்டு விசாரித்துப் பார்த்தாள். ‘ஒன்னுமில்லே ஆன்டி’ என்று சொல்லி விட்டு மீண்டும் வீட்டுக்குள் ஓடி விட்டான்.
வைஷுவின் அம்மா முகமதுவின் அம்மாவை சந்தித்து விசாரித்தாள். முகமதுவின் அம்மா கவலையுடன் ‘ஆமா வைஷம்மா.. அவனுக்கு தங்கச்சிப் பாப்பா வந்ததுலே இருந்து இப்பிடி ஆயிட்டான். ரொம்ப கோவமும் படறான்..’ என்று வருத்தத்துடன் சொன்னாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த வைஷு அடுத்த முறை முகமதுவை சந்தித்த போது கேட்டான்: ‘டேய்.. முகமது.. நீ ரொம்பா கோவப்படறையாமா.. உங்கம்மா சொல்றாங்கடா.’
‘ஆமாடா.. எனக்கு கோவமா வருதுடா..’
‘எதுக்குடா..’
‘என் தங்கச்சி பாப்பா மேலே கோவம் கோவமா வருதுடா’
‘ஏண்டா.. உனக்கு உன் தங்கச்சி பாப்பாவைப் பிடிக்கலையா..’
‘ஆமாடா வைஷு.. பாப்பா வந்ததுலே இருந்தே எங்கம்மா என்னை கொஞ்சறதில்லே. எங்க அப்பாவும் அவ மேலதான் பிரியமா இருக்காரு. எல்லாரும் அவளைத்தான் செல்லம் கொஞ்சறாங்க. ‘பாப்பாக்கு அதை எடுத்துட்டு வா இதை எடுத்துட்டு வா’ன்னு எனக்கு நிறையா வேலை சொல்றாங்கடா.’ என்றான் முகமது.
‘மொதல்ல எல்லாம் அப்பாவோ அம்மாவோ தான் எனக்கு சாப்புட வெப்பாங்க.. ஆனா இப்போ பாப்பாவுக்குதான் அவங்க சாப்புட வெக்கிறாங்கடா.. எனக்கு ஒரு தட்டுலே போட்டுக் குடுத்துட்டு, ‘நீயே சாப்புட்டுக்கங்கறாங்கடா..’ என்று சோகமாக சொன்னான்.
‘நீ பேசாமே உன்னோட ‘பீப்பி’யை எடுத்து ஊதிகிட்டிருக்க வேண்டியதுதானே..’
‘’பீப்பி’யை எடுத்து ஊதினா ‘டேய் சத்தம் போடாதே.. பாப்பா தூங்குது’ ன்னு சொல்றாங்கடா..’
‘நீ அழுகலாமில்லே.. அப்பொ உன்னெ கொஞ்சுவாங்கதானே’ என்று வைஷு கேட்டான்.
'இல்லடா.. அழுதா ‘இனியெல்லாம் நீ சின்ன பாப்பா இல்லே.. பெரிய பையன் ஆயிட்டே.. அழுகவெல்லாம் கூடாது.. பாப்பாவெ நீதான் பத்திரமா பார்த்துக்கோணும்’ங்கறாங்கடா’
‘உங்க பாட்டி கூட உன்னை கொஞ்சறதில்லையாடா..!’
‘இல்லேடா பாட்டியும் பாப்பாவைத்தான் ரொம்ப கொஞ்சறாங்க’
இதைக் கேட்டு வைஷுவும் கொஞ்சம் மிரண்டு போனான். ‘டேய் எனக்கு பயம்மா இருக்குடா.. இன்னும் ஆறு மாசத்துலே எங்க வீட்டுலேயும் ஒரு பாப்பா வரும்னு எங்கம்மா சொல்லி இருக்காங்கடா.. நீ சொல்றதப் பார்த்தா என்னையும் எங்க அப்பா அம்மா கொஞ்ச மாட்டாங்களோன்னு பயமா இருக்குடா..’ என்றான் வைஷு.
‘ஆமாடா.. பாப்பா வந்தா நீ அவ்ளவுதான்.. திட்டுவாங்க.. கொஞ்ச மாட்டாங்க..’ என்றான் முகமது.
‘முகமது..’ என்று அவன் அம்மா அழைக்க சோகத்துடன் வீட்டுக்குள் ஓடினான் முகமது.
>
சரி! முகமதுவின் இந்தக் கவலை ஞாயம்தானா.. சரிதானா.. அவனோட அப்பா அம்மாவுக்கு இவன் மேலே ஆசை இல்லையா..? இப்பொ யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?
‘நானு’ என்று ரத்திகா முன் வந்தாள். இங்க இருக்கற குழந்தைகள்லையே ரத்திகாதான் கொஞ்சம் பெரியவள். அவளுக்கும் தம்பிப் பாப்பா எல்லாம் இருந்திருக்கான். அவள் கதையை சொல்ல ஆரம்பித்தாள்:
அன்றைக்கு இரவு முகமது வீட்டில் வெகு நேரம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வைஷுவின் அம்மா போன் செய்து முகமதுவின் அம்மாவை விவரம் கேட்டாள். சற்றே தொண்டைக் கமற, ‘முகமதுவிற்கு காய்ச்சலாக இருக்கிறது வைஷம்மா.. தர்மாமீட்டர் 101 டிகிரி காட்டுது.’ என்று விசும்பினாள்.
அடுத்த நாள் முகமதுவின் தங்கையை பாட்டியிடம் விட்டு விட்டு, அவன் அம்மாவும் அப்பாவும் முகமதுவை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.
ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்கள். அன்றிரவு அங்கேயே தங்க வேண்டும் என்றும் கூறி விட்டார்கள். அவன் அப்பா அம்மா இருவருமே அழுதார்கள். அம்மா சத்தமாகவே அழுதாள். அப்பா கண்ணை கண்ணைத் துடைத்துக் கொண்டு அழுதார். முகமதுவிற்கு அவ்வளவு காய்ச்சலிலும் அம்மாவும் அப்பாவும் தனக்காக அழுவதில் கொஞ்சம் சந்தோஷம் வந்தது.
அன்று இரவு மருத்துவமனையில் முகமதுவுடன் ‘நான் இருக்கிறேன்’ என்று அப்பா சொன்னார். ஆனால் அம்மாவோ ‘ஊஹும்.. என் தங்கத்தை விட்டு நான் வர மாட்டேன். நான் அவனை கண்ணும் கருத்துமா பார்த்துக்கறேன். நீங்க வீட்டிற்கு போய் தங்கச்சிப் பாப்பாவை பார்த்துக்கோங்க.’ என்று உறுதியாக சொல்லி விட்டாள்.
முகமதுக்கு எல்லையில்லா ஆனந்தமாய் இருந்தது. தன் அம்மா அப்பா பற்றி தான் தவறாக எண்ணிக் கொண்டிருந்த எண்ணமெல்லாம் தவிடுபொடி ஆகிப் போனது. இப்படி அம்மாவும் அப்பாவும் தன் மீது உயிருக்கு உயிராய் இருப்பது அவனுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தங்கை வந்து விட்டதால் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தன் மீது இருக்கும் அன்பும் ஆசையும் எள்ளளவும் குறையவில்லை என்பதை உணர்ந்தான்.
நள்ளிரவே காய்ச்சல் குறைந்து விட்டது. மிகுந்த வாஞ்சையுடன் தன் அம்மாவை அணைத்துக் கொண்டு முகமது சொன்னான்: ‘இனிமே தங்கச்சி பாப்பாவை நானே பார்த்துக்கறேம்மா..!’
இரண்டு மூன்று நாட்கள் தன்னை விட்டு தொலைந்து போயிருந்த தூக்கம் லேசாக எட்டிப் பார்க்க, மிகுந்த மன நிம்மதியுடன் வாஞ்சையுடன் மகனை அணைத்துக் கொண்டு கண்ணயர்ந்தாள் முகமதுவின் அம்மா!
‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று சம்மு கேட்க:
‘எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நம் மீது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் அன்பும் ஆசையும் பாசமும் மாறவே மாறாது!’ என ரிஷி முடித்து வைத்தான்.
குட்டீஸ்! இந்தக் கதையில் அம்மா அப்பாவின் என்றுமே மாறாத அன்பையும் ஆசையையும் பாசத்தையும் வேறு விதமாகவும் எடுத்துக் காட்டி முடிக்கலாம்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, முயன்று, வேறு முடிவுகளை எழுதி, அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?
அன்புடன்
கோவை என். தீனதயாளன்