Dr.PadminiPhD Kumar

Action

4  

Dr.PadminiPhD Kumar

Action

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 16 கிரகப்பிரவேசம்

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 16 கிரகப்பிரவேசம்

4 mins
349


                      

 சென்னை நகரில் பிறந்து வளர்ந்தவன் வீராச்சாமி; அவனது மனைவி சகுந்தலா; இரண்டு ஆண் குழந்தைகள் ராமு-சோமு; அழகான குடும்பம். வீராசாமி பெயரில் மட்டும் வீரம் இல்லை, உண்மையிலேயே அவன் மிகவும் தைரியசாலி. அவன் மனைவி சகுந்தலாவும் அப்படியே.நடுத்தர வர்க்க குடும்பம் என்பதால் வருவாயும் செலவும் சரிக்குச் சரியாக இருக்கும். அப்பா செய்த ரியல் எஸ்டேட் வேலையையே அவனும் கற்றுக்கொண்டான்.


             தொழிலில் இறங்கிய பின் தான் வீராசாமிக்கு புரிந்தது ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்திற்கு என ஒரு வீடு கட்டி ஜாம் ஜாம் என கிரகப்பிரவேசம் வைத்து அதில் குடியேற வேண்டும் என்ற கனவோடு தான் வாழ்கின்றான் என்பது. அவன் மனதிலும் கிரகப்பிரவேச கனவு துளிர்விட்டு வேரூன்றி விருட்சமாக வளர்வதை உணர்ந்தான். சென்னையில் அவன் தன் பெற்றோர்களுடன் ஆரம்பத்தில் ஜன சந்தடி மிக்க திருவல்லிக்கேணியில் ஒண்டுக் குடித்தன வீட்டில் வளர்ந்தவன். அவன் சம்பாதிக்க ஆரம்பித்ததில் பெற்றோர் பூரிப்புடன் தனிவீடு அமர்த்தினர்.


    வாடகை வீடானாலும் ஜன சந்தடி மிக்க பகுதியானதால் ரவுடிகள் உலவும் ஏரியாவாக இருந்தது.பெற்றோர் கலக்கத்துடன் காலம் தள்ளினர்.எப்படியோ பெற்றோரும் வீராசாமியும் வீட்டின் ஒரே பெண்ணான வசந்திக்கு திருமணம் முடித்து அவளை மும்பைக்கு கணவருடன் அனுப்பிய பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


        வீராசாமிக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் ஆயிற்று. தன் மன ஆசையை நிறைவேற்ற இதுவே தக்க காலம் என வீராசாமி முடிவெடுத்தான். சென்னை தலைநகரில் சொந்த வீடு என்பது பலருக்கும் எட்டாக் கனிதான். எனவே வீராசாமி புறநகர் பகுதியான மறைமலை நகரில் ரயில்வே லைனை ஒட்டிய இடமாக கிடைத்ததும் மலிவு விலையில் முதலில் மனையை வாங்கினான். பின் தன் சேமிப்பை எல்லாம் சேர்த்து கணக்குப்போட்டு வங்கியில் லோனுக்கு கை பணத்தை எல்லாம் கட்டி ஏற்பாடு செய்தான்.இதோ இப்போது வீடும் ஆயிற்று.


      அவன் மனை வாங்கிய பொழுது அந்த இடம் பொட்டல் காடாக இருந்தது. ரயில்கள் ஓடும் சத்தம் மட்டும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கும். இவன் வீடுகட்ட ஆரம்பித்ததும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரும் வீடு கட்ட ஆரம்பித்தார்கள். எனவே ஓரளவிற்கு ஆள் நடமாட்டம் இருந்தது.ஆனால் இரவில் தெரு விளக்குகளும் அதிகம் போடப்படாததால் ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். கிரகப்பிரவேசத்திற்கு மும்பையிலிருந்து அக்கா வசந்தி அத்தான் குழந்தைகளுடன் குடும்பமாக அவசியம் வரவேண்டும் என அழைப்பு விடுத்து அழைப்பிதழ் அனுப்பினான்.ஆனால் கொரோனாவால் மும்பையை விட்டு வெளியேற முடியாமல் அக்கா குடும்பத்தினர் வரவில்லை.

      மிக எளிமையாகவே கிரகப்பிரவேசம் நடந்தது.புது வீட்டிற்கும் வந்தாயிற்று. வந்தபின்தான் வினையே ஆரம்பித்தது.வந்த சில நாட்களில் வீராசாமி வேலைக்குப் போக ஆரம்பித்தான்.


ஏப்ரல் மாத லீவில் குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் என்ன ஏது என்று பார்க்க சகுந்தலா வாசலைத் திறந்தாள். வீட்டின் முன்னே தெரிந்த வெட்ட வெளியில் ஒருவன் அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு மனை தாண்டி குடியேறிய வீட்டினரின் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். குழந்தை கத்திக்கொண்டிருந்தது.அவன் குழந்தையின் வாயையும் பொத்திக் கொண்டு ஓட வேண்டி இருந்தது. சகுந்தலாவிற்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு தைரியம் வந்ததோ தெரியாது,”டேய்…. டேய்….. விடுடா குழந்தையை….. ஓடி வாருங்கள்…… குழந்தையை தூக்கிக் கொண்டு போகிறான். ஓடிவாங்க….. ஓடிவாங்க…..”என கத்திக்கொண்டே கிடைத்த கற்களை பொறுக்கி அவன் மீது வீசத் தொடங்கினாள்.


                     கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இரயில்வேலைனின் பக்கத்தில் ரோடு கரடுமுரடாக இருந்தது. திருடன் தடுமாற, குழந்தை கையில் இருந்து நழுவ, குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டான். சகுந்தலா ஓடிச் சென்று குழந்தையை தூக்கி அதன் பெற்றோர்களிடம் ஒப்படைத்தாள். அனைவரும் அவளைப் பாராட்டினார்கள்.

         ஆனால் சகுந்தலாவின் உடம்பு நடுக்கம் குறையாமல் மனமும் பயத்தால் உறைந்து போய் விட்டது. வீராசாமி வீட்டிற்கு வந்ததும் உடனே வீட்டை காலி செய்து ரவுடிகள் நிறைந்த ஏரியாவாக இருந்தாலும் பரவாயில்லை பழைய வீட்டிற்கு வாடகை வீடு ஆனாலும் பரவாயில்லை போய்விடலாம் என புலம்ப ஆரம்பித்தாள்.வீராசாமி மிகவும் கவலைப்பட ஆரம்பித்தான்.


       இதனிடையே கொரொனாவுடன் வாழப் பழகிய மக்கள் ஊர் விட்டு ஊர் போக அரசாங்கம் அனுமதி அளித்தது என்று மும்பையிலிருந்து அக்கா வசந்தியும் குடும்பத்தோடு ரயிலில் சென்னை வந்து இறங்கினார்கள். வீராசாமி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வரவேற்கப் போனான். அக்காவும் அத்தானும் இரயிலை விட்டு இறங்கிய பின் குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்து “ஹை” சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீராசாமி அருகில் லுங்கியும் பனியனும் கழுத்தில் கைக்குட்டையுமாக இரண்டு பேர் வந்து நின்று,” என்ன அண்ணாத்தே! எல்லாம் நல்லபடியா வந்து சேர்ந்தார்களா?”என விசாரிக்கவும் வீராசாமி அவர்களை கண் ஜாடை காட்டி அனுப்பவும், அக்கா அத்தான் இருவரும்,” என்ன இதெல்லாம் தம்பி? இவங்க எல்லாம் யாரு?” எனக் கேட்கவும்,” அதெல்லாம் ஒன்னும் இல்லை…. நீங்க வாங்க….”எனச் சொல்லி வீராசாமி லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு குழந்தைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்தான்.


        சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலில் மறைமலைநகர் வந்து சேர்ந்தனர். முன்பு பார்த்த ஆசாமிகள் இருவரும் ஆளுக்கொரு ரிக்ஷாவை பிடித்துக்கொண்டு ஸ்டேஷன் வாசலில் இவர்களுக்காக காத்திருந்தனர். லக்கேஜையும் குழந்தைகளையும் ஏற்றிவிட்டு வீராசாமியிடம்,” நீங்க முன்னாடி போங்க. நாங்க பின்னாலேயே வாரோம்” எனச் சொல்லி தங்கள் சைக்கிள்களை எடுக்கச் சென்றனர். அக்காவிற்கு அவர்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. இவர்கள் ஏன் இப்படி நம்பின்னால் வரவேண்டும் என்ற கேள்வி அவளை குடைய ஆரம்பித்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர்.


                         வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தும் லுங்கிஆசாமிகள் இருவரும்,” அண்ணாத்தே,யக்கா… போய்வாரோம்”என வீராசாமியிடமும் சகுந்தலாவிடமும் சொல்லிச் செல்லும்போது அக்கா வசந்தி சகுந்தலாவிடம்,         ” இவர்களைத் தெரியுமா?”எனக் கேட்டதும்,” இந்த ஏரியாக்காரர்கள் தான். அவ்வப்போது துணைக்கு வருவார்கள்” என சகுந்தலா கூறவும்,” துணை எதற்கு?” என அத்தான் கேட்கவும், “இரவில் இங்கே தெருவிளக்குகள் அதிகம் கிடையாது” என்று வீராசாமி கூற,” அப்படியா” என்று அக்காவும் அத்தானும் கூறிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.


           புது வீடு வசந்திக்கும் அவள் கணவருக்கும் வீராசாமியின் வாழ்நாள் சாதனையாகத் தோன்றியது. அக்கா தம்பியை மிகப் பெருமையுடன் பார்த்தாள். சகுந்தலாவின் முகத்தில் பூரிப்பு தெரியாதது வசந்திக்கு புதிராக இருந்தது. இரவில் சாப்பிட்டு அனைவரும் படுக்க சென்றனர்.அப்போது வீட்டின் பின்பக்கத்திலும் கூரை மேலும் கற்கள் வந்து விழுவது போன்ற சப்தம் கேட்டதும் சகுந்தலா வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி அனைவரையும் படுக்கை அறைக்குள் வேகவேகமாக அனுப்பினாள்.


           மறுநாள் காலை அக்காவும் தம்பியும் தங்கள் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் நால்வரும் ஓடிப்பிடித்து கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிக்கொண்டிருந்தனர். தனிவீடு ; அதுவும் விசாலமான வீடு; விளையாட பெரிய முற்றம்;இப்படி புறநகர்ப் பகுதியில் வீடு அமைந்தது தம்பியின் அதிர்ஷ்டம்தான் என வசந்தி புகழ்ந்து கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் பொறுக்காமல் சகுந்தலா தன் மனதின் கவலையை வெளிப்படுத்தினாள். பிள்ளை பிடிக்க வந்த அவனைப் பற்றிக் கூறும் போது அவள் எவ்வளவு தூரம் பயந்துவிட்டாள் என்பது வசந்திக்குப் புரிந்தது.வசந்தியும் அவள் கணவரும் இப்போது சகுந்தலாவை மிகவும் வியப்புடன் நோக்கினர். அவர்கள் பார்வை புரியாமல் சகுந்தலா தன் பேச்சை நிறுத்தினாள்.


                      வீராசாமி அக்காவிடம்,”அக்கா, நீயே சொல். இதற்காக இந்த வீட்டை விட்டுப் போக வேண்டுமா? என் உழைப்பு முழுவதையும் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்கிறேன். என்னால் வேறு வாடகை வீடு பார்ப்பதற்கு கூட பைசா செலவு செய்ய பண்ண முடியாது. என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாள். நான் இங்கேதான் இருப்பேன்; நிம்மதியாக ,சந்தோஷமாக இருப்பேன்; எந்த நிலை வந்தாலும் இங்கேயே இருக்க என்னை தயார் படுத்திக் கொள்வேன். இதை இவளிடம் எடுத்து சொல்லுக்கா” என்றான்.


     வசந்தி சகுந்தலாவின் கைகளைப் பரிவோடு பற்றி,” சகுந்தலா, உன் திறமை உனக்குத் தெரியாது.எங்களுக்குப் புரிகிறது. நீ ஒரு காவல் தெய்வம் போல் அந்தக் குழந்தையை காப்பாற்றி இருக்கிறாய். அது எப்பேர்ப்பட்ட வீரச்செயல்! அந்த தைரியம் யாருக்கு வரும்! அப்படியிருக்க, நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் பலத்தை நீ புரிந்து கொள்.இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த இடம் வளர்ந்து விடும்.ஜன நடமாட்டம் அதிகரித்து விடும். எனவே வீராச்சாமியின் கனவை நனவாக்க உறுதி கொள்.எல்லாம் நல்லபடியாக நடக்கும். பயத்தை விடு” என்று சொன்னதும், வசந்தியின் கணவர் அவள் அருகில் பரிவோடு வந்து நின்று,” ஆம்…பஹன் ஜி!கவலைப் படாதீர்கள். இந்த வீடு உங்களுக்கு கிடைத்த வரம். நீங்கள் இருவரும் மிக சிறப்பாக வாழ்வீர்கள்.” என்று கூறியதும் சகுந்தலாவின் முகத்தில் ஒளி தோன்றியது; பயம் விலகியது.


         வீராசாமியை மனதில் மகிழ்வுடனும் கண்களில் காதலுடனும் சகுந்தலா பார்த்து,” பால் காய்ச்சி விட்டேன்.காப்பி போட உதவக்கூடாதா?”” என கேட்டுக் கொண்டு சமையலறைக்குள் நுழைய வீராசாமிக்கு அன்று தான் உண்மையிலேயே கிரகப்பிரவேசம் நடந்தது போன்ற உணர்வுடன் உற்சாகமாக அவளைப் பின்தொடர்ந்தான்.


Rate this content
Log in

Similar tamil story from Action