Dr.PadminiPhD Kumar

Romance

4  

Dr.PadminiPhD Kumar

Romance

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 12 அழாதே பெண்ணே அழாதே

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 12 அழாதே பெண்ணே அழாதே

3 mins
400



அழாதே பெண்ணே அழாதே

          மனித மனம் மிக சக்திவாய்ந்தது. நவரச மிக்க உணர்வுகளால் நம் வாழ்க்கையை நடத்திச் செல்வதே இந்த மனம் தான். நவரச உணர்வுகளில் காதல் என்பது இயல்பானது. ஆனால் நடுத்தர குடும்பங்களில் ஒருபெண் மற்றொரு பெண்ணின் இயல்பாக அரும்பிய காதல் உணர்வுகளை நசுக்குவது நாம் நம் கண்கூடாக யதார்த்த வாழ்க்கையில் பார்க்கும் நிகழ்வுதான் இது.

                  கண்மணிக்கு கல்யாணம். பார்வதி அம்மாவின் செல்ல மகள் கண்மணி. தனது ஒரே தங்கை கண்மணியின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் அவளது அண்ணன் கார்த்திக். கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்பதால் கை நிறைய சம்பளம் வாங்கும் ஆண் அழகன் தான் கார்த்திக். பார்வதி அம்மாள் தன் மகள் கண்மணியின் திருமணத்திற்கு பின் தன் மகனின் திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற வேண்டும் என எண்ணியிருந்தார். நடுத்தர குடும்பத்து தாயல்லவா அவள்!

          கண்மணிக்கு திருமண அலங்காரத்திற்காக அவர்களின் தூரத்து உறவுப் பெண் மல்லிகாவை ஏற்பாடு செய்தார்கள். மல்லிகா குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்புக் போன்ற கனவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு வயதான தாய் தந்தையை காப்பாற்ற கைத்தொழில் கடவுள் என்ற உண்மையை உணர்ந்து காலத்திற்கேற்ற பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து தக்க சான்றிதழ்களுடன் தன்னம்பிக்கையுடன் ப்யூடி சென்டர் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தாள்.

          அழகுக்கு அழகு சேர்ப்பது ஒப்பற்ற கலை அல்லவா! கண்மணியின் அழகுக்கு அழகு சேர்ப்பதில் மல்லிகா தனது திறமைகள் அனைத்தையும் உபயோகித்தாள். கண்மணியை பூரண பிரைடல் மேக்கப்பில் பார்த்த கார்த்திக்கும், பார்வதி அம்மாளும் மல்லிகாவை வாய்க்கு வாய் பாராட்டினார்கள். திருமண விழா மருதாணி விழா, நிச்சயதார்த்தம், ரிசப்ஷன், சம்மந்தி விருந்து என ஐந்து நாட்கள் நடந்தன. ஊர் பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். பார்வதி அம்மாளும் அவர் கணவரும் அனைவரையும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். மல்லிகாவும் உறவுக்காரப் பெண் என்பதால் ஐந்து நாட்களும் திருமண வைபவத்தில் கலந்து கொண்டாள்.

            கார்த்திக்கும் வந்தவர்கள் அனைவரையும் அன்புடன் கவனித்தான்.இத்திருமண வைபவத்தின் போது சில பெரியவர்கள் உறவில் கார்த்திக்கும் மல்லிகாவும் முறைப்பையன்,முறைப்பெண் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். மல்லிகாவும் மணப்பெண்ணை அலங்கரிப்பதில் முழுமூச்சாக இருந்தாலும் அவளும் பெண்தானே; அவள் மனம் கார்த்திக்கை நினைக்க ஆரம்பித்தது.

            திருமணம் முடிந்து மணப்பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி ஆயிற்று. உறவினர்களையும் வழி அனுப்பியாயிற்று. வீட்டில் பார்வதி அம்மாள் மட்டும் தனித்து இருந்தார். கார்த்திக்கிற்கு வெளிநாட்டில் வேலை அவன் ஆசைப்படியே அமைந்துவிட்டது. உடன் புறப்படவேண்டும். அம்மாவும் அப்பாவும் அவனுடன் புறப்பட ஏற்பாடாயிற்று.

        விவரம் அறிந்தாள் மல்லிகா. தன் மன உணர்வுகள் அவர்களுக்கு புரிந்திருக்கும் தானே? கேள்வியை மனதிலேயே கேட்பதில் பயனில்லை என்பதால் மாலையில் தன் வேலைகளை சென்டரில் தனக்கு உதவும் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு பார்வதி அம்மாளுக்கு பிடித்த மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு அவர்கள் வீடு நோக்கி சென்றாள்.

         வீடு ஏறக்குறைய காலியாக இருந்தது. அங்கேயும் இங்கேயும் சிலஅட்டைப் பெட்டிகள். பார்வையை புரிந்துகொண்ட பார்வதி அம்மாள் சொல்லத் தொடங்கினார், “ஆமாம்…. எல்லாம் பேக் செய்து கார்கோவில் அனுப்பி ஆயிற்று. இன்னும் இரண்டு தினங்கள் தானே இருக்கிறது பிளைட்டுக்கு”. மல்லிகாவால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலவில்லை.ப்யூடிஷியன் என்றால் கலை உணர்வு மிக்க கலைஞர்கள் தானே! அவர்களுக்கும் மனம் உண்டு; உணர்வுகள் உண்டு தானே! மல்லிகா மெதுவாக,” நீங்கள் செல்லும் ஊர்………?”என பேச்சை ஆரம்பித்தாள்.

         பார்வதி அம்மாள் உடனே,”எனக்கு எங்கம்மா அதெல்லாம் புரியுது;அப்பாவும் பிள்ளையும் தான் பேசிக் கொள்வார்கள்; என்னை இங்கே வா என்றால் வருவேன்; உட்கார் என்றால் உட்காருவேன்.”என்று சொன்னதும், மல்லிகாவின் மனம் உடைந்தது; கண்கள் கலங்கின.பார்வதி அம்மாளே தொடர்ந்து,”உன்னை உட்கார வைத்து பேசக்கூட நேரமில்லை. உனக்கு காபி கலந்து கொடுக்கக் கூட முடியாமல் இருக்கிறேன்.” என சொல்லிப் ‘போகிறாயா’ என்பது போன்ற ஒரு பார்வையை மல்லிகா மீது வீசினார். மல்லிகாவின் சுயமரியாதை விழித்துக்கொண்டது.எழுந்து, “அப்ப நான் வரேன் மாமி, எதற்கும் ஊர் போய்ச் சேர்ந்ததும் எனக்கு லெட்டர் போடுவீர்கள் அல்லவா…..” என சொல்லிக்கொண்டே தன் கைப்பையிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுக்க முயலும் போது அவள் கைகளை பற்றிக்கொண்டு,” அதற்கெல்லாம் எங்களுக்கு எப்போது ஒழியுமோ…. நீ சிரமப்பட வேண்டாம். அம்மா அப்பாவை கேட்டதாகச் சொல்.” என்று சொல்லி வாசல் கதவை திறந்து வைத்தார் பார்வதி அம்மாள்.

        கேட்டின் வெளியே வந்து தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது தான் கவனித்தாள் மல்லிகா தன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை. அப்போது தூரத்தில் ஒரு ஒலிபெருக்கியில்,” பெண்ணே தான் பெண்ணுக்கு எதிரியாக மாறுவார்கள். எனவே பெண்ணே நீ அழக்கூடாது. நீ அழுதால் இவ்வுலகம் தாங்காது.அழாதே பெண்ணே அழாதே” என்று முழங்கிக் கொண்டே இருந்தார்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Romance