நினைவில் நல்லது வேண்டும்!
நினைவில் நல்லது வேண்டும்!




தூங்கும்போது வருவதல்ல கனவு – உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு!
கனவு என்னும் உணர்வுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் – சொல்லால், செயலால், எண்ணத்தால், கருத்தால், நடத்தையால் – வாழ்வாங்கு வாழ்ந்து - நம் சிந்தை கவர்ந்த பெருமதிப்புமிகு ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்கள்.
கனவு என்பது உறக்கத்தின்பாற் பட்டதன்று – அது உள்ளத்தின்பாற் பட்டது. ‘கனவு’ என்பது கனவைக் குறிப்பதன்று. இங்கே ‘கனவு’ என்றால் இலக்கு அல்லது குறிக்கோள்! மனிதப்பிறவி, பிறப்பு முதல் இறப்பு வரை ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கும்! இன்னும் சொல்லப் போனால் குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை,
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே கனவு! பின் நல்ல படிப்பு, சிறந்த வேலை, நல்ல துணை என கனவுகள் தொடரும். இதைத் தவிர அரசியல், சினிமா என்று சிறப்புக் கனவுகளும் கிளை விட்டுப் பரவும்.
எல்லா கீழ் நடுத்தர வகுப்பு இளைஞர்களைப் போலவே எனக்கும் ‘ஒரு நல்லவேலை’ என்பதே - என் எதிர் காலம் குறித்த என்னுடைய முக்கிய கனவாக இருந்தது,! பி.காம். படிப்பில் சேர்வதற்கு முயன்று, அது தோல்வி அடைந்து பின் மன ஈடுபாடு இன்றி பி.எஸ்.சி கணிதம் சேர்ந்தேன். ஓரிரு மாதங்களில் சுதாரித்துக் கொண்டு, பி.எஸ்.சி.யில் தேர்வுப் பாடமாக அமைந்திருந்த கணினிப் பாடத்தில் ஆர்வம் செலுத்தி பட்டப் படிப்பை முடித்தேன். முதல் வாய்ப்பாக அமைந்த இரண்டு வேலை வாய்ப்புகளில் மதிப்பு மிகு திரு ஜி.டி.நாயுடு அவர்களின் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தேன்.
இப்படி ‘நல்லவேலை’ என்கிற கனவின் ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்தது மதிப்பு மிகு ஜி.டி.நாயுடு நிறுவன வேலை. கணினி என்பது சரியான களம் காணாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த துவக்க நாட்களில், ஒரு மென்பொருள் எழுதுவோனாக அமைந்த அந்த வேலையே என் பணி சரித்திரப் பக்கங்களின் பிள்ளையார் சுழியாக அமைந்தது!
அதன்பிறகு இந்த வேலையில் பெற்ற அனுபவத்தின் பயனாக மதிப்பு மிகு மத்திய அரசு வேலையில் கணினிக் களத்திலேயே ஒரு நல்ல வேலைக்கு தேர்வு செய்யப்பட்டேன்.
இங்கு பணிக்கு அமர்ந்த ஓரிரு மாதங்கள் கழித்து, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் எழுத்துத் தேர்வு எழுதி, அதை மறந்தே போய்விட்ட நிலையில், ஒரு தேசீய வங்கியில் வேலை வாய்ப்பு வந்தது. மீண்டும் லேசாக மனப் போராட்டம் (பேங்க்க்கு வேலைடா..!!) துவங்கினாலும், ஒரு சீராய்வுக்குப் பின், அதை தலை மீது தட்டி வெளியேற்றி விட்டு, மன சாந்தியோடு என் கணினிக்கள வேலையில் என்னை நிலை நிறுத்திக் கொண்டேன்(settled).
நல்லவேளை! “நல்லவேலை” என்கிற என் கனவு ஒரு நல்லவேலை கிடைத்து இப்படி நல்லபடியாக முடிந்தது.
இதுவே என் கனவு மெய்ப்பட்ட தருணம்!