நினைத்தாலே கசக்கும்!
நினைத்தாலே கசக்கும்!


விட்ட பழக்கங்கள் என்றால் ஒன்றிரண்டு தேருவது கூட கடினம். ஆனால் விட நினைத்த பழக்கங்கள் என்றால் நிச்சயமாக ஒரு பெரிய பட்டியலே போடலாம். ‘இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும்’ என்று பெரும்பாலும் நடுத்தர வயதில்தான் தோன்ற ஆரம்பிக்கிறது.
ஆட்டுப் பாலோ, மாட்டுப் பாலோ. பால் அருந்தும் பழக்கம் சரியா? என்னதான் இருந்தாலும் பால் என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடைப்பட்ட விஷயம். அதில் நாம் எப்படி பயனடைந்து கொள்ள முடியும். பாலை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் நடைமுறையில் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.
நமக்குத் தெரிந்த ஒருவர், நம்மிடையே இல்லாத சமயத்தில், அவரைப் பற்றி மற்றவர்களிடம் புறம் பேசும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று பல வருடங்களாக முயற்சிக்கிறேன். குறைந்த பட்சம் அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களையாவது பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால்.. ஊஹூம்.. சில சூழல்களில் என்னையும் அறியாமல் இந்த தவறை இன்னும் செய்கிறேன். இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
அவ்வப்போது ரத்ததானம் செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் ஒரு முறை நானும் மனைவியும் ரத்த தானம் செய்த போது மனைவி மயக்கமடைந்து அவருக்கு முதலுதவி தேவைப் பட்டது. அது முதல் மனதில் ஒரு பயம். பயத்தையே ஒரு காரணமாக வைத்துக் கொள்ளும் வழக்கம் எனக்குள் ஊறி விட்டது. அந்த வழக்கத்தை விட்டொழிக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மனைவியால் தயாரிக்கப் படும் ஒரு உணவு எப்பொழுது தயாரிக்கப்பட்டாலும் அதே சுவையுடன் மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என் பழக்கம். எல்லாம் ஒரு கணக்குதானே. கணக்குப் படி செய்தால் இது எளிது (என்பது என் எண்ணம்.) ஆனால், பொருள்களின் தரம், தண்ணீர், எண்ணை, அளவு, மனைவியின் மனோநிலை எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டது. எனவே சுவை எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதான். என்றாலும் இந்த எதிர்பார்க்கும் பழக்கத்தை இன்னும் அறவே விட வில்லை.