Dr.PadminiPhD Kumar

Romance

3.3  

Dr.PadminiPhD Kumar

Romance

நெஞ்சக் கதவுகள்

நெஞ்சக் கதவுகள்

3 mins
254


             

                       மிருதுளா பெயருக்கேற்றார் போல் மென்மையான குணம் கொண்டவள். பெற்றோருக்கு ஒரே செல்லப்பெண். கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே நல்ல வரனாக தேடி வந்ததால் பெற்றோர் மிருதுளாவின் திருமணத்தை மிக விமரிசையாக நடத்தினார். மணமகன் மிதுன்சக்கரவர்த்தியும் மிகவும் அடக்கமான பையன். மாப்பிள்ளை என்ற கெத்து இல்லாமல் மிகவும் அன்பாக அனைவரிடமும் பழகுவதை பார்த்ததும் தன் கணவன் மேல் அளவில்லாத காதல் வயப்பட்டாள் மனைவி மிருதுளா. படிக்கும் காலத்தில் காதல் கத்திரிக்காய் என யாரும் பிதற்றினால் கோபப்படுவாள். அவளுக்கு அப்போதெல்லாம் காதலில் நம்பிக்கை கிடையாது. ஆனால் திருமணத்திற்குப் பின் அவள் தன் காதல் உணர்வுகளை கண்ணுக்கினிய கணவனிடம் எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தவித்தாள்.


             தனிக்குடித்தனம் வந்தாயிற்று. இருவரின் பெற்றோர்களும் சென்னையில் இருக்க, மிதுனுக்கு வேலை பெங்களூரில் என்றானதால் தனிக்குடித்தனம் பெங்களூரில். அடுக்குமாடி குடியிருப்பில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என எல்லா வசதிகளுடன் கூடிய ஆடம்பர வீட்டு வாழ்க்கை. வீட்டு வேலைகளையெல்லாம் செய்ய ஒரு பெண்ணும், சமையலை கவனிக்க ஒரு பெண்ணும் வருவதால் மிருதுளாவிற்கு தனிக்குடித்தன வாழ்க்கை ஜாலியாகவே இருந்தது.


          ஒரு மாதம் போனது. தனிக் குடித்தனம் வைக்க வந்த அம்மா- அப்பா, மாமனார்- மாமியார் சென்னை திரும்பிச் சென்றதும் வீடு வெறிச்சோடி தோன்றியது. காலை 9 மணிக்கெல்லாம் ஆபீஸ் சென்று விடும் மிதுன் வீடு திரும்ப மாலை 6 மணி ஆகிவிடும். அதுவரை தனியே வீட்டிற்குள் நடமாடிய மிருதுளாவிற்கு தன் மன உணர்வுகளை கணவனிடம் வெளிப்படுத்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என ஏங்கத் தொடங்கினாள். மிதுனும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை என்பதால் அவனை மிகவும் பொத்தி பொத்தியே வளர்த்தனர். தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று தன் கல்லூரிப் படிப்பை முடித்தான். காதல் கத்திரிக்காய் விவகாரம் எல்லாம் அவனுக்கும் பிடிக்காது. இந்த விஷயத்தில் தன் மனைவி மிருதுளாவும் ஒத்துப் போவதை அறிந்த போது அவன் மிக மகிழ்ந்தான். தனது மனைவியிடம் மிகுந்த அன்பைப் பொழிந்தான். ஆனாலும் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே இருவரும் உணர்ந்த போதும் அதை வெளிக்காட்டாமல் வாழ்ந்தனர்.


         இந்நிலையில் கொல்கத்தாவில் வேலை பார்க்கும் மிதுனின் அத்தை பையனுக்கு அங்கேயே திருமண ஏற்பாடு ஆயிற்று. கல்யாணம், ரிசப்ஷன், விருந்து என இவர்கள் இருவரையும் குறைந்தது 3 நாட்களாவது கல்கத்தாவில் தங்கி திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மிதுனின் அத்தையும் மாமாவும் திட்டவட்டமாகச் சொல்லிச் சென்றனர். டிக்கட் போட்டாயிற்று. விமானத்தில் போகவர முடிவெடுத்து இருந்ததால் பெங்களூருக்கு மூன்று நாட்களில் திரும்ப முடிவு செய்தனர். ஆனால் புறப்படும் நாளன்று மிருதுளாவிற்கு லேசான காய்ச்சல். வீட்டு விலக்கு ஆனதால் கல்கத்தா வர மறுத்துவிட்டாள். மிதுனுக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனால் அத்தை வீட்டு கல்யாணம் என்பதால் தான் போய்த் தான் ஆக வேண்டும் என்பதால் கிளம்பினான்.


                    முதல் நாள் மிருதுளா தன் ஆசைப்படி சினிமா பார்ப்பது, தனக்கு பிடித்த முகம்மது ரஃபி பாடல்கள் கேட்பது, செடிகளை பராமரிப்பது என பொழுதைப் போக்கினாள். இரண்டாம் நாள் கணவன் கல்யாண வீட்டில் எல்லோரிடமும் என்ன சொல்லி சமாளிக்கிறாரோ எனத் தோன்றியதால் அந்த நினைவில் வீட்டிற்குள் வலம் வந்தாள். மூன்றாம் நாள் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் குளித்து மிதுனுக்குப் பிடித்த புடவையை அணிந்து கொண்டாள். தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். மதியம் 2 மணிக்கு ஏர்போர்ட் வந்து விமானத்தில் ஏறினால் மாலை 5 மணிக்கு பெங்களூர் ஏர்போர்ட் வந்து இறங்கி விடுவான்; எப்படியும் மாலை ஆறு மணிக்குள் வீடு வந்து சேர்ந்து விடுவான் என்று மிருதுளாவுக்கு தெரியும். எனவே தயாராக இருந்தாள்.

    

மாலை மணி ஆறு ஏர்போர்ட்டில் இருந்து அப்பார்ட்மெண்ட் கேட் வந்து இறங்கியதும் மடமடவென தன் வீட்டை நோக்கி வந்தான் மிதுன் சக்கரவர்த்தி.வாசல் திறந்தே இருந்தது. சூட்கேசை ஹாலில் வைத்துவிட்டு சுற்றுமுற்றும் மிருதுளாவைத் தேடினான். அவளைக் காணவில்லை. சமையலறையில் இருக்கலாம் என்ற எண்ணத்தில் சமையலறை சென்று பார்க்க அங்கேயும் இல்லை. இதனால் அவன் மனம் அவளுக்கு என்ன ஆயிற்று என எண்ண ஆரம்பித்தது.


மெதுவாக பால்கனி பக்கம், பூஜை அறை, படுக்கை அறை என ஒவ்வொரு இடமாகத் தேட ஆரம்பித்தான். அவனுக்குப் புரியவில்லை. அத்துடன் அந்தக் கணத்தில்தான் அவனுள் மிருதுளாவை தான் எவ்வளவு தூரம் மிஸ் பண்ணுகிறோம் என எண்ண ஆரம்பித்தான். மீண்டும் ஹாலில் வந்து நின்று,”மிருது, ஐ மிஸ் யூ டா” எனச் சொன்னதும் தான்…. தாமதமின்றி இதுவரை கதவுக்குப் பின்னால் நின்று ஒளிந்து நின்று அவன் தவிப்பைக் கவனித்த மிருதுளாவின் நெஞ்சக் கதவும் திறந்துகொள்ள,” அத்தான்!” என சொல்லிக் கொண்டே ஓடிவந்து அவனை அணைத்தாள். அன்றுதான் அவர்களின் இரு மனமும் ஒன்றாக கலந்து இருவரும் ஈருயிர் ஓருயிராயினர்.



Rate this content
Log in

Similar tamil story from Romance