முயற்சியை முன்னெடுப்போம்
முயற்சியை முன்னெடுப்போம்


அன்றாடம் மாலை வேளையில், அந்த பூங்காவிற்கு வந்து விடுவார் இளங்கோ. இளங்கோ வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சில நாட்கள் தான் ஆகின்றது. மாலை வேளையில் காலாற நடந்து விட்டு, சற்று நேரம், பூங்காவில் போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து விட்டு செல்வது அவரது வழக்கம்.
அன்றும் வழக்கம் போல், அமர்ந்திருந்த இளங்கோவின் கால்களில் ஏதோ ஈரமாக தட்டுப்பட, எடுத்துப் பார்த்தார். காகிதத்தால் ஆன ராக்கெட். விளையாடி விட்டு போட்டுச் சென்ற சிறாரோ அல்லது, தன் இளம் பிராயத்து நினைவுகளில், தனக்கு மகிழ்வளித்த இது போன்ற விளையாட்டுகளை அசை போட்ட இளைஞரோ, முதியவரோ, யாரோ செய்து, விட்டுச் சென்றிருந்த ராக்கெட், இரவிலும், காலையிலும் விழுந்த பனித்துளிகளின் ஈரத்தில் நனைந்து, நலிந்து இருந்தது.
இளங்கோ, தான் கையோடு கொண்டு வந்திருந்த செய்தித் தாளினை எடுத்தார். அதில், ஒரு பக்கத்தினை கிழித்து, மடித்து ராக்கெட் செய்து பறக்க விட்டார். இப்படி இரண்டு மூன்று ராக்கெட்டுகள் சுற்றி பறக்கவும், அதைக் கண்ட சிறுவர்கள், ஆர்வத்துடன் அதை பிடிக்க முயற்சித்தனர். அது வரை கைபேசிகளில் மூழ்கியிருந்தபடி பொழுதைக் கழித்த குழந்தைகள், ராக்கெட்டை கண்டதும், கைபேசிகளில் இருந்து விடுதலையாகி, சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தனர். இளங்கோ தான் ராக்கெட் செய்து விடுகிறார் என்று தெரிந்ததும், ஓடி வந்து, அவரை சுற்றிக் கொண்டனர்.
"தாத்தா ! எனக்கும் ராக்கெட் செஞ்சு தரீங்களா? " என்று ஒரு சிறுவன் கேட்க, "அதுக்கென்ன, செஞ்சு தரேன். எப்படி செய்யுறதுன்னு சொல்லியும் தரேன்" என்று இளங்கோ அவர்கள் சொல்லவும், குழந்தைகளுக்கெல்லாம் உற்சாகம். ராக்கெட், கப்பல், கத்திக் கப்பல், மலர் தோரணம், பட்டம் என்று பலவகையான பொருட்களை செய்து காண்பித்து, கற்றும் கொடுத்தார். குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
அன்றாடம் இது தொடர்ந்தது. குழந்தைகளுக்கு அன்றாடம் செய்து கொடுத்து, அவர்கள் ஓடியாடி விளையாடி மகிழ்வதை கண்டு தானும் மகிழ்ந்தார் இளங்கோ. இது அவருக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் மகிழ்ச்சியை தரவில்லை. இத்தனை காலம், கைபேசிகள், வரைப்பட்டிகைகளின் அடிமையாய் இருந்த தம் கிள்ளைகள், இன்று உடலினை உறுதி செய்யும் வகையில் ஓடியாடி விளையாடுவதைக் கண்ட பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
இளங்கோ அவர்களுடன், இன்னும் சில பெற்றோரும் சேர்ந்து, பிள்ளைகளுக்கு விளையாட்டு சொல்லித் தந்து, உடன் விளையாட, விளையாடி முடிந்து கிளம்புகையில், பூங்காவினை சுத்தம் செய்யவும் சிறுவர்களை நெறிப்படுத்த, விளையாட்டுடன், சிறிது உடல் உழைப்பும், அனைவருக்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது.