முன் பின் அறியா முகங்கள்!
முன் பின் அறியா முகங்கள்!


நமக்குத் தெரியாத யாருடனாவது நாம் ஒரு நாள் இருந்திருக்கிறோமா..! ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கருத்தாக்கம் இதுதானா?
ஒரு கோயிலில் கடவுள் தரிசனத்திற்காக காத்திருந்த போது முன் பின் தெரியாத ஒருவருடன் சில மணி நேரம் சொல் செயல் எண்ணப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. பெயர், தொழில், குடும்பம் என எல்லாவற்றையும் பரிமாறிக் கொண்டோம். ஆனால் கோயில் கதவு திறந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் கூட்டத்தில் கரைந்து போனோம். அத்தோடு பரிமாறிக் கொண்ட விஷயங்களும் காற்றில் கரைந்து போய் விட்டன
பணி புரிந்து கொண்டிருந்த சமயம். மும்பையில் ஒரு பணி முடித்து விட்டு, தொடர்வண்டியில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். முதல் வகுப்புப் பெட்டி. ராணுவ வீரர் ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது. விடுமுறையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் ஏன் ராணுவப்பணிக்கு வந்தார், அவரது பணிகள், அவருடைய குடும்பம், குடும்பத்தை விட்டு இருப்பது, பொழுது போக்குகள், குடும்பத்தினருடன் கடிதத் தொடர்பில் ஏற்படும் மகிழ்ச்சிகள் (செல் போன்கள் இல்லாத சமயம் அது) என அன்று மாலை அவர் அரக்கோணத்தில் இறங்கும் வரை பேசினார். ஒரு ராணுவ வீரருடன் பயணித்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
பல வருடங்களுக்கு முன் ஒரு முறை சென்னையிலிருந்து பேருந்து மூலம் கோவை வந்து கொண்டிருந்தேன். பகல் நேரம். ஜன்னலோர இருக்கை. வழியில் ஒரு பேருந்து நிலையம். கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். வயதான பெண்மணி ஒருவர் அவர் கன்னத்தை தடவித் தடவி, கலங்கிய கண்களுடன் பேருந்தில் ஏற்றி வழியனுப்பினார். அந்த வாலிபருக்கு சுமார் முப்பது வயது இருக்கலாம். என் அருகில் அமர்ந்தார்.
‘டிக்கட்’ – இத்யாதி சடங்குகள் முடிந்த பிறகு மெதுவாக அவரிடம் அந்த வயதான பெண்மணி பற்றி கேட்டேன். ‘அவங்க என் அம்மா சார்..’ என ஆரம்பித்தார். அவர் சொன்ன விஷயங்களால் மனசு ஒரு புது உலகத்தில் நுழைந்தது போல் ஆகிப் போனது.
அவர் சொன்னதின் சாராம்சம் இது. ‘அவர் ஒரு கைதி.. பரோலில் பத்து நாட்கள் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்.. நேராக சிறைக்கு சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும்.. அவர் செய்த குற்றம்.. குற்றம் புரிந்ததற்கான காரணம்.. அதற்கு அவர் பெற்ற தண்டனை.. பரோலில் அவர் வந்தது.. அவர் பார்த்த உறவினர்கள்.. தாயாரின் சோகம்.. அவர் விடுதலை எப்போது.. அதன் பிறகு அவர் ஊருக்கு சென்று ஒரு உறவுக்கார பெண்ணை மணக்கவிருப்பது.. ‘ என்று பல விஷயங்களை சொன்னார்.
இறங்கும் போது அவர் வைத்திருந்த பையிலிருந்து இரண்டு வாழைப் பழங்களை எடுத்து என் கையில் கொடுத்தார். வீட்டிற்கு சென்றும் நீண்ட நேரம் என் மனம் கணத்துக் கொண்டிருந்தது.