Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Comedy Drama

3.3  

துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Comedy Drama

மர்ம நோய்

மர்ம நோய்

4 mins
156




 வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்!    

 வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின் கிளை செயலாளரில் ஆரம்பித்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்திருக்கிறார். அதனால் கட்சி மேலிடத்திற்கு செல்ல பிள்ளையாக வலம் வந்தார்.

 அவரை கட்சியே வற்புறுத்தி எம்.எல்.ஏ. வுக்கு ஒரு முறை நிறுத்தியது. அந்த ஐந்து வருடப் பதவியில் அவர் நிறைய தெரிந்து கொண்டார். அதனால் அடுத்த முறை முதலிலே தனக்கு சீட் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். 

 ஆளும் கட்சி எம். எல். ஏ. வாக இரண்டு முறை இருந்த காலத்தில், அவருக்கு கட்சி மேலிடத்தில் இருக்கும் செல்வாக்கை அனைத்து துறை அதிகாரிகளும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

 யாருக்கு என்ன காரியம் எந்த இலாகாவில் ஆக வேண்டியிருத்தாலும் அவர் ஒரு போன் செய்தால் போதும். அந்த அதிகாரிகள் செய்து விடுவார்கள்!

 அதிகாரிகளும் தங்கள் டிரேன்ஸ்பர், பதவி உயர்வு, மகன், மகள் காலேஜ் அட்மிஷன் போன்ற காரியங்களுக்கு அவரை எளிதில் அணுக வசதியாக அது இருந்தது!

 அவரால் காரியம் சாதித்துக் கொண்ட கம்பெனி முதலாளிகள், வியாபாரிகள் எல்லோருமே அவ்வளவு மோசம் இல்லை! நன்றி உள்ளவர்களாகத் தான் இருந்தார்கள். தங்கள் காரியம் முடிந்த பிறகு அவர்களாகவே வந்து ஒரு சூட் கேஸ் ஒரு அன்பளிப்பு கொடுத்து விட்டுப் போவார்கள்!

 வேந்தனுக்குப் பல விஷயங்கள் புரிந்தன. ஒரு மாவட்டத்தில் உயர் பதவியில் இருந்தாலே இப்படி செல்வமும் செல்வாக்கும் உயரும் என்றால் ஒரு மந்திரியாக நாம் வந்து விட்டால் .........அவருக்கு அரசியல் நன்கு புரிந்தது!

 அடுத்த சட்டசபை தேர்தலிலும் அவர்கள் கட்சி தான் கணிசமான மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தது! தனக்கு கட்சியில் இருக்கும் செல்வாக்கைப் பயன் படுத்தி அமைச்சராகி விட்டார்!

 அவர் சொன்னது தான் சட்டம்! எந்த அதிகாரியும் மறுப்பு சொல்வதில்லை! அதிகாரிகள் காவல் துறை எல்லாம் அவர் சொன்னபடி கேட்டார்கள்!

  சொத்துக்கள் மாநிலம் முழுவதும் பல கோடிகள் பெருகிக் கொண்டே போனது! அதைப் பற்றி எதிர் கட்சிக்காரன் தான் பேசினானே தவிர,  பொது மக்கள் அதை பெரிசாகக் கண்டு கொள்ளவில்லை!

  கவுண்டமணி பாணியில் “இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா!...” என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு, கொது மக்கள் அவரவர் வேலைகளை பார்க்கப் போய் விட்டார்கள்! 

 அவர் பேச்சை எல்லோரும் கேட்டார்கள்! அவர் பெற்ற பையன்கள் தான் அவர் பேச்சை கேட்பதில்லை!.... பையன்கள் பெண்கள் விஷயத்திலும் ஒரு மாதிரி! .... வர வர ஆட்டம் அதிகரித்துக் கொண்டே போய் விட்டது. அவரால் கட்டுப் படுத்த முடிய வில்லை! காவல் துறையும் கண்டு கொள்ளவில்லை!

 ஏனோ இந்த ஒரு விஷயம் மட்டும் அவர்கள் தொகுதியில் வாழும் பொது மக்கள் கண்களை உறுத்தியது! வெளியில் சொல்லா விட்டாலும் அவர் குடும்பத்தையே வர வர அவர்கள் உள்ளுக்குள் வெறுக்கத் தொடங்கினார்கள்!

 அடுத்த சட்டசபைத் தேர்தலில் தான் அது அவருக்குத் தெரிந்தது! வழக்கம் போல் அவர் கட்சி தான் மெஜாரிட்டித் தொகுதிகளில் ஜெயித்தது. பல கோடிகளை அள்ளி இறைத்தும் வேந்தன் இருபதாயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்!

 அவர் தயவில் சீட் வாங்கியவர்கள் எல்லாம் மந்திரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தார்கள்! அவர் மனசு சுக்கு நூறாக உடைந்து விட்டது!

 எந்த நேரமும் தேர் திருவிழா நடக்கும் இடம் மாதிரி இருந்த அவர் வீடு இப்பொழுது எழவு விழுந்து நாலு நாள் ஆன வீடு மாதிரி ஆகி விட்டது!

 கடத்த இருபது வருஷமாக ராஜாவாக வலம் வந்த வேந்தன், சுருண்டு படுத்து விட்டார்! அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறினார்.

 புகழ் பெற்ற மருத்துவ மனையில் அவரைச் சேர்ந்திருந்தார்கள்! அவரை வந்து பார்க்காத ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் ஒருவர் கூட பாக்கி இல்லை! யாராலும் அவர் வியாதி என்னவென்று கண்டு பிடிக்க முடியவில்லை! அவர் வாய் திறந்து பேசியே பல நாட்கள் ஆகி விட்டன!

  வேந்தனின் மிகப் பெரிய விசுவாசி முத்தமிழரசு. வேந்தன் வீட்டு சமையல்கட்டுக்குப் போய் வேந்தனின் மனைவிடம் உரிமையோடு காப்பி வாங்கி சாப்பிடுபவர்.  வேந்தன் கட்சியின் கூட்டணி தான் டெல்லியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. முத்தமிழரசு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

 அவர் வேந்தனை நன்கு புரிந்து வைத்திருப்பவர். வேந்தனுக்காக எதையும் செய்யக் கூடியவர்.

 ஒரு வாரத்திற்கு முன்பே அவருக்கு போன் போட்டு வேந்தனின் மனைவி மல்லிகா விபரமாக வேந்தன் நிலைமையை எடுத்துச் சொன்னார்.

“அக்கா!..நீங்க கவலைப் படாதீங்க!... அவருக்கு என்ன நோய் என்று எனக்குத் தெரியும்!... அதற்கு மருந்து தான் இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்... சீக்கிரம் கிடைத்து விடும்! நான் அடுத்த வாரம் அங்கு வந்து அண்ணனுக்கு அந்த மருந்தைக் கொடுக்கிறேன்...ஒரே நாளில் அவர் பூரணமாகி விடுவார்! நீங்க நம்பிக்கையோடு இருங்க!...” என்று சொன்னார்.

அடுத்த நான்கே நாளில் முத்தமிழரசு டெல்லியிலிருந்து கோவைக்கு பறந்து வந்தார்.

  மருத்துவ மனை வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் மல்லிகா.

“ அக்கா!.... கவலைப் படாதீங்க!....நான் அண்ணனுக்கு ஏற்ற மருந்து கொண்டு வந்திருக்கிறேன்! ...கொடுத்தால் சீக்கிரம் குணமாகி விடும்!..” என்று சிரித்துக் கொண்டே மல்லிகாவுடன், முத்தமிழரசு வேந்தன் ரூமுக்கு விரைந்தார்!

 அப்பொழுது தான் ரூமிலிருந்து வெளிப்பட்ட ஒரு நர்ஸ் “ டாக்டர்கள் ஐயாவை பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்!” என்று சொன்னாள்.

 “அக்கா!...எல்லோரையும் வெளியில் வரச் சொல்லுங்க.... நான் போய் அவருக்கு கொண்டு வந்த மருந்தைக் கொடுக்க வேண்டும்!..”

 நர்ஸ் உள்ளே போய் சொல்ல டாக்டர்கள் எல்லாம் வெளியில் உடனே வந்து விட்டார்கள்!

 அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்த முத்தமிழரசு கதவை தாழ் போட்டுக் கொண்டார்.

 வேந்தன் கட்டில் அருகே போய் உட்காந்து கொண்டு அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு “அண்ணா!... அண்ணா!” என்றார்.

 மெதுவாக கண்ணை திறந்து பார்த்தார் வேந்தன்.

 “ அண்ணே!... இனி நீங்க கவலையை விடுங்க!... சீக்கிரம் எழுந்து தயாராகுங்க அண்ணே!..”

 “ முத்தமிழ்!..நீ என்னப்பா சொல்கிறே?..” என்று மெதுவாக கேட்டார் வேந்தன்.

 “ நேற்றுத் தான் பிரதமர் சம்மதம் கொடுத்தார்..அடுத்த வாரம் மந்திரி சபை விஸ்தரிக்கப் போகிறார்..... கூட்டணி கட்சிகளுக்கு சில மந்திரிகள் கொடுக்கிறார்.  அதில் நம் கட்சி சார்பாக உங்களை இணை அமைச்சராக நியமிக்க ஒத்துக் கொண்டார்.... மத்திய பிரதேச சட்ட சபையிலிருந்து உங்களை ராஜ்ய சபா எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கவும் சொல்லி விட்டார்..அடுத்த வாரம் அநேகமாக நீங்கள் பதவி ஏற்க வேண்டியிருக்கும்!...”

“ அப்படியா!...” என்று உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டார் வேந்தன். அவர் சோர்வாக இருந்தாலும் முகத்தில் பழைய களை வந்து விட்டது!

 “ ஏய்!... மல்லிகா! ... என்னை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து தள்ளி விட்டு அங்கு என்னடி பண்ணிக் கொண்டிருக்கிறாய்?.....” என்று திடீரென்று சத்தம் போட்டார்.

 வெளியில் காத்திருந்த டாக்டர்கள் முதல் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ரூமிற்குள் ஓடி வந்து விட்டார்கள்!

 அவர்கள் வந்து பார்க்கும் பொழுது வேந்தன் எழுந்து நின்று கொண்டிருந்தார்.

 “ அக்கா!... இருபது வருஷங்கள் நல்ல பதவிகளில் இருந்து பழக்கப் பட்ட எந்த அரசியல் தலைவர்களாலும் ஒரு நாள் கூட பதவி இல்லாமல் சும்மா இருக்க முடியாது!....அப்படிப்பட்ட சூழ்நிலை வரும் பொழுது அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டு, இது போல் மோசமான நிலைக்குப் போய் கொண்டே தான் இருக்கும்! இது பெரிய அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே வரும் நோய்! இந்த நோயை எந்த டாக்டராலும் குணப் படுத்த முடியாது!... அதனால் தான் நான் அவருக்கு டெல்லியிலிருந்து ஸ்பெஷலா மருந்து வாங்கி வந்து கொடுத்திட்டேன்.. இரண்டு நாளில் சரியாகி விடுவார்.. அக்கா நீங்க அவரை வீட்டுக்கு கூட்டிப் போங்க! ...அவருக்கு நிறைய வேலை இருக்கு!” என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே முத்தமிழரசு புறப்பட்டுப் போனார்.

  எல்லோரும் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார்கள்!






Rate this content
Log in

More tamil story from துடுப்பதி ரகுநாதன் கோயமுத்தூர்

Similar tamil story from Comedy