விடியற்காலையில் கண்ட கனவு
விடியற்காலையில் கண்ட கனவு
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அம்மா அந்தக்கால மனுஷி!......என்ன சொல்லிப் புரிய வைப்பதென்றே மதி மாறனுக்குத் தெரியவில்லை!
பல்லி சொல்லும் பலன், கனவுகளின் பலன் என்று இந்தக்காலத்தில் பஞ்சாங்கத்தைப் பார்த்து நம்பும் மனுஷி!
“செவ்வாய் கிரகத்திற்கே மனுஷன் குடியேறும் காலம் வந்து கொண்டே இருக்கிறது!...இப்ப போய் நீ ஏம்மா இப்படி இருக்கே?...”
“ இல்லையடா!...மதி...நான் சொன்னாக் கேளு....தயவு செய்து சென்னையில் நடக்கும் இந்த கட்சி மாநாட்டிற்கு நீ போகாதேடா!...”
“ நீ வேற என் மானத்தை வாங்காதே!....இதை வெளியே சொன்னா என் மானமே போயிடும்!...பகுத்தறிவு பாசறையின் மாவட்டச் செயலாளர் நான்!...உம் பேச்சைக் கேட்டு நான் மாநில மாநாட்டிற்கு வரலைனு வெளியே சொன்னா...சென்னை மாநாட்டிற்கு வரும் எல்லா மாவட்ட நண்பர்களும் பேசிப் பேசி சிரிக்கும் நிலை உருவாகி விடும்! .”
“எனக்கு விஞ்ஞானமெல்லாம் தெரியதடா!... நாங்க ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களுக்கு மரியாதை கொடுப்போம்!... நான் விடியற்காலையிலே கண்ட பல கனவுகள் பலித்திருக்கு! ..அது...ஏன்...எப்படினு எல்லாம் எனக்குத் விளக்கத் தெரியாது!...நீ சென்னைக்குப்
பஸ்ஸில் போவது போலவும், அந்தப் பஸ் விபத்திலே சிக்கி நீ அடிபட்டுத் துடிப்பது போலும் எனக்கு நேற்று விடியற்காலை கனவு வந்தது!....எனக்குப் பயமா இருக்குடா!...சொன்னாக் கேளு!....”
மதிமாறன் வாய் விட்டு சிரித்து விட்டு, “நான் சென்னையிலிருந்து வந்தவுடன் முதல் வேலையா...நம்ம வீட்டில் கிடக்கிற பஞ்சாங்கம்..வார வாரம் வருகிற இந்த சோதிடப் புத்தகங்ளை எல்லாம் எடுத்து தீ வைக்கப் போறேன்...அப்பத் தான் உனக்குப் புத்தி வரும்!....”என்று கோபமாகச் சத்தம் போட்டான் மதிமாறன். பாவம்! கிழவி அதன் பின் அடங்கி விட்டாள்!
மறு நாள் காலை ஒன்பது மணியிருக்கும். மதி மாறன் வீட்டுப் போன் அலறியது. மதி மாறனின் மகன் அன்புச் செழியன் போய் போனை எடுத்து விசாரித்தான்.
“ பாட்டி!...” என்று அலறினான் பத்து வயசுப் பேரன்.
“ என்னடா?....” என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்கு ஓடி வந்தாள் கிழவி.
“ பாட்டி!...அப்பா போன பஸ் விபத்திலே சிக்கி, அப்பாவை செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம்!..உடனே புறப்பட்டு வரச் சொல்லறாங்க!...”