மொட்டைமாடியில் ஓர் உரையாடல்
மொட்டைமாடியில் ஓர் உரையாடல்
மாலை 6:30 க்கு தான் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால் 6 மணிக்கு படியேறினேன். எனக்கு முன்பாக ஓர் அம்மா தன் மகனுடன் வந்து நடைபயிற்சி செய்துகொண்டிருந்தாள்.மகனுக்கு 4 வயது. அவன் ஒரு பந்தை கைகளால் தட்டிக்கொண்டும், காலால் உதைத்துக்கொண்டும் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் அம்மா 8 வரைந்ததைப் பார்த்த நான் "நானும் வரைய நினைத்திருந்தேன். "என்றேன். அவள் உடனே, "நீங்களும் இதில நடங்க "என்றாள்.நானும் நடக்க ஆரம்பித்தேன். முதலில் எப்பவும் சுற்றியுள்ள வெளி உலகைக் காண்பது என் வழக்கம்.
அதற்காக சுற்றுச்சுவரை ஒட்டி நடக்க ஆரம்பித்தேன். Terrace ன் நடுவே இருந்த இரண்டடி உயர சிமெண்ட் திண்டின் மீது பையன் ஏறி உட்கார்ந்தான். "பாட்டி! அங்க பார். Sun மலைக்குப் பின்னால மறையுது. " அவன் பக்கத்தில நின்று நானும் sunset அழகை ரசிக்க ஆரம்பித்தேன்."மலைக்குப்பின்னால தான் அதோட வீடு இருக்கு தெரியுமா? " கொரோனா நம்மை prehistoric age க்கே அழைத்துக் கொண்டு போய்விட்டதோ என என் மனம் நினைக்க ,அவன்
மேலும் "அவங்க அம்மா கூப்பிட்டாங்க. அதான் போயிடுச்சு. இருட்டாக போகுதில்ல"."அப்படியா" நானும் சொல்ல என் நம்பிக்கையில்லாத வார்த்தை அவனை உசுப்பி விட்டது என எண்ணினேன். உடனே அவன், "வீடு அங்கே இல்லை "என்றான். நானும் "காலைல மறுபடியும் எப்படி வருவான்? "என்றேன். உடனே அவன் கிழக்குப்பக்கம் கை காட்டி "அங்கிருந்து வருவான் "என்றான்."அதெப்படி? "என்றேன் நான். அவன் தன் பிஞ்சுக்கையை நீட்டி மேற்கிலிருந்து கிழக்காக அரைவட்டம் சுற்றி "அவன் இப்படி ஊரைச் சுற்றி " கிழக்கே தூரத்திலுள்ள ஒரு வீட்டைக் காட்டி"பாட்டி, அங்கே ஒரு சின்ன வீடு தெரியுதுல்ல. அங்க போவான். " நான் உடனே சிரித்துக்கொண்டு, "சரியான ஊர் சுற்றியோ! " என்றேன்.
சாய்க்கு (அந்த ப
ையன் பெயர் சாய்) அவன் friend ஐ விட்டுக்கொடுக்க மனமில்லை. " பாட்டி உன் தலைக்கு மேலே நல்லா நிமிர்ந்து பார். நிலா தெரியுதுல்ல. "என்றான். "அட, ஆமாம். அதற்குள் நிலாவும் தெரியுதே "என்றேன். "இந்த சன் என்ன செய்வான் தெரியுமா! "கிழக்காக கையை நீட்டி, "இங்க இருந்து space ல ரொம்ப தூரத்திலுள்ள இந்த நிலாவை ஜம்ப் பண்ணி அந்த பக்கமாக ரொம்ப speed ஆ சுற்றி வருவான் தெரியும்ல. "என்றான்.
ஸ்பேஸ் என்ற வார்த்தையால் நான் அவனுக்கு சில விஷயங்களை விளக்க எண்ணி அவன் கீழே போட்ட பந்தை கையில் எடுத்தேன். உடனே அவன் " பாஃலைத் தொடாதே பாட்டி "என்றான். நான் பந்தை அவன் கையில் கொடுத்து "வீட்டிற்குப் போனதும் சோப் போட்டு கழுவி விடு "என்றேன். பின்னர் கீழே கிடந்த வேறொரு பந்தை எடுக்கப் போனேன். "அதையும் தொடாதே பாட்டி, இதையே எடு "என தன் கையிலிருந்ததைக் கொடுத்தான். பந்தைக் காட்டி "நானும் நீயும் இங்க இருப்பதாக வைத்துக்கொள் "என்றதும், அவன், "பாட்டி அது planet " .என்றான். அப்போது மேலும் இரண்டு பெண்கள் தத்தம் குழந்தைகளுடன் மேலே வர "என் ப்ரண்ட்ஸ் வந்துட்டாய்ங்க "என சாய் குதித்து ஓட நான் உரையாடல் முடிந்ததென கீழிறங்கினேன்.
முற்றும்