மஞ்சணத்தி ஏர் பொம்மை
மஞ்சணத்தி ஏர் பொம்மை


காலாட்டியபடி தனது நண்பன் கொடுத்த ஏர் பொம்மையைப் பிடித்தபடி பஸ்சில் எழுபது வயது ரங்கசாமி விஜயா டிராவல்ஸ் பஸ்சில் சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். நேற்றைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தார்.
வழியெங்கும் கால்நடைகளின் பசிக்காக சூபா மரங்களும்,மக்களின் பசிக்காக மாமரங்களும், சப்போட்டாமரங்களும், நெல்லிக்காய் மரங்களும் அவரை வாருங்கள்! வாருங்கள் என வரவேற்றதை இரசித்தார்.
நான் தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டேன் என்பதைப் பார்க்க வந்தீரோ! என்பதுபோல மாதுளம் மொட்டுகள் அவரைப்பார்த்து சிரித்தது.
காலையில் இருந்தே மனசே சரியில்லைடா! இந்த ஏர் பொம்மை இரண்டுமுறை கீழே விழுந்துடுச்சு!
அப்பா! கையில் பணம் கிடையாது. இந்த நேரம் கிளியாஞ்செட்டி ஊருக்குப்போறேன்னு நின்னா எப்படி?
இல்லைடா! எனக்காவது நீ இருக்கே! கையில் நாலு காசு நீ தர்றே! அன்னைக்கே நான் சொன்னேனடா! விவசாயத்தைப் பார்த்துக்கிட்டே இருக்காதடா! கடைசி காலத்துக்கு உட்கார்ந்து சாப்பிட உடல் ஒத்துழைக்காது.
அவன் எனக்கு விவசாயம்தான் முதல் நண்பன்னு சொல்லிட்டான். எனக்கு பென்ஷனும்,புக் எழுதற ராயல்டியும் வருது…
அவனுக்கு எதுவுமே கிடையாது. அவன் தந்த ஏர்பொம்மை ஏது தெரியுமா! மஞ்சணத்தியில் அவனாகச் செய்தது. அவனும், நானும் மஞ்சணத்தி குச்சியில் பாறையில் படங்கள் வரைந்து விளையாடுவோம்,.பெண்குழந்தைகள் போல பல்லாங்குழியில் அதன் விதைகளைப் போடுவோம்…..
நீங்க தர்ற பென்ஷன் வீட்டுவாடகைக்கு சரியாகப் போகுது. நீங்க எழுதற புக் ராயல்டி உங்க மருந்துக்கு சரியாகப் போகிறது. எனக்கும் 3 பசங்கப்பா! 3 பேரும் அரசு பள்ளிதான்பா…….
அப்பா தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பேரன் கணேஷ் உற்றுக்கேட்டுக்கொண்டிருந்தான்.
அப்பா சென்றவுடன் தாத்தா! எனக்கும் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க…அதில் ஒருத்தன் விவசாயி பையன். அவன் அப்பாவும் அப்படித்தான் சொல்வார். விவசாயமும் அந்த மண்ணும்தான் நண்பர்கள் என்று..
நான் குபேரன் பொம்மையில் நீங்க கொடுத்த பணமெல்லாம் வச்சிருக்கேன் தாத்தா.
நீங்க எடுத்திட்டு போய் பார்த்திட்டு வாங்க!
நினைவுகள் அசை போட்டபடி பேரன் கொடுத்த உண்டியல் பணத்தில் கொஞ்சம் பழம், நண்பனுக்குப் பிடித்த பொரி உருண்டை போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்திருந்த பையைத் தடவிப் பார்த்தார்.
பெரியவரே! வண்டி கிளியாஞ்செட்டி வந்துடுச்சு!
இறங்கிச் செல்லும் தாத்தாவை கண்டக்டர் வாயில் கையை வைத்து ஆச்சரியத்துடன் பார்த்தார். பதினைந்து வருடமாக இந்த ஏரியாவில் நான் பஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறேன். விடாமல் தனது நண்பனைப் பார்க்க வர்றார்.
அவரு உங்களுக்குத் தெரிஞ்சவரா என பஸ்சில் பாட்டி கேட்க,
நானும் ஒருநாள் அவர் நண்பன் சங்கர் பெரிய பணக்காரன்போல என நினைத்து கிளியாஞ்செட்டி போனேனா! ஐந்து ஏக்கரில் வீட்டுக்குத் தேவையானது மட்டும் போட்டுட்டுமீதி வர்றதை அப்படியே பக்கத்துல அரசு பள்ளிக்கு கொடுத்துடறார். ஊரில் அவருக்கு நல்ல பேர். ஒருவாரமா உடல் சரியில்லை. இந்த பெரிய பாதையெல்லாம் வர்றதால விவசாயநிலம் எல்லாம்போகப்போகுதுன்னு யாரோ சொல்லி இருக்காங்க.. விளைச்சலும் இந்த வருடம் சரி கிடையாது. அவர் மனைவி காலமாகி பத்துநாள்தான் ஆகுது. இன்று காலையில் அவரும் இறந்துவிட்டார். நேற்று பஸ்சில் அவருக்கு மரியாதை செலுத்த மாலை வாங்கிட்டு போனாங்க.இவருக்கு யாருமே சொல்லவேணாம்னு சொல்லிட்டாங்க!
ஆனா எப்படியோ மனசில ஓடி இருக்கு பாருங்க..எனக் கூறி டிரைவருக்குப் வண்டி புறப்பட விசில் ஊதினார்.