போகி கழிதலும்
போகி கழிதலும்


4.30 மணி நேரத்துக்காலைப் பனியின் துவக்கத்தில் மெல்லக் கண்விழித்த ஜனனி தன் அம்மாவை எழுப்பிப் பார்த்தாள். 17 டி பஸ் வந்து விடுமே என்ற பதற்றத்தில் குளித்து முடித்தாள். அம்மாவை ஊருக்குப் போய்க் குளியுங்கள்! எனச் சொல்லி விட்டாள். எழும்பூருக்குச் சென்றால்தான் உட்கார இடம் கிடைக்கும். பாண்டிச்சேரி செல்ல பத்தரைக்கு மேல் ஆகி விட்டால் வழியில் பசிக்கு என்ன செய்வது என்ற நினைப்பில் பிஸ்கட் பாக்கெட்டுகளை அள்ளி பையில் போட்டாள். மெல்ல வீட்டைப் பூட்டியபடி புதூர் பஸ் ஸ்டேண்ட் வந்தார்கள். எப்பதான் மெட்ரோ போடுவார்களோ! என்ற முணுமுணுப்பில் பிரயாணிகள் பலர் தெரிந்தனர். பஸ் வந்ததும் ஏறி ஜனனியும் அவள் அம்மா ருக்மணியும் அமர்ந்தனர். மறக்காமல் பாலைக் குடிச்சிடு! என்றாள் அம்மா. ஊற்றி வைத்த பாலை சீட்டில் அமர்ந்ததும் இருவரும் குடித்தனர். போகிப் புகை கண்ணெல்லாம் எரிய ஆரம்பித்தது. சிறுவர்களின் ஆனந்தத்தில் தெருவோரத்து லைட் வெளிச்சங்கள் கண்ணைக் கசக்க ஆரம்பித்தன. கண்டக்டர் மெல்ல வண்டியை ஆர் 3 காவல்நிலையம் வழியாக மெல்ல விசிலடித்து ஓட்ட டிரைவருக்கு உத்தரவிட்டார். வண்டி மெதுவாக வடபழனி சிவன்கோவிலைப் பார்த்தபடி ஓட ஆரம்பித்தது. வண்டியில் இருந்தபடியே பயணிகள் சிவனுக்கு ஒரு வழிபாடு நடத்தினர். மழை பெய்ததால் அங்கங்கே தண்ணீர் தேங்கிய சுவடுகள் தெரிந்ததை ஜனனி கவனித்தாள். சாக்கடை மூடியைத் தாண்டி வெளிவிந்த கழிவு
நீர் வீதியெங்கும் பரவிக் கிடந்ததையும் பார்த்தாள். இந்த மெட்ரோ டிரெயின் வந்தாலும் வந்தது! இப்படி ஐந்து மணிக்கெல்லாம் ரூட்டை மாத்த வைக்கிறானுங்களே! என கண்டக்டர் அலுத்தபடி வண்டியை மேற்கு மாம்பலம் பக்கமா ஓட்டுப்பா! பேரிகார்டு இல்லாத இடமா போப்பா! என உத்தரவு பிறப்பித்தபடி வந்த கண்டரை நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி. இந்த தொழில் பார்க்கிறதை விட மாடு மேய்க்கப் போகலாம்பா! என்ற எதிர் சீட்டு இளைஞனைச் சிரிப்புடன் பார்த்தாள் அம்மா. என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என்றாள் வெடுக்கென்று....... ஜனனி கடுப்பானாள். அம்மா! அவர் யாரென்றே தெரியாது.... என்னம்மா என்றாள். ஜனனி! நீ என்னை ஏமாத்தலாம்னு பார்க்காதே! அவர் உன் ஆபிசில்தான் வேலை பார்க்கிறவர்.....அவர் நம்மகூட பாண்டிவரை வருகிறவர் என்பதும் எனக்குத் தெரியும்.. ஜனனி மௌனமானாள். எதிர் சீட்டு இளைஞன் ஜனனியிடம் நான் சொல்லலை ஜனனி அம்மாவே எப்படியோ தெரிஞ்சு வச்சிருக்காங்க! என்று சிரித்தான். இது காதல் வண்டியா போச்சுப்பா என்று ஓரக்கண்ணால் பார்த்தபடி டிரைவர் சிரித்தார். அண்ணே! காதல் வண்டியில்லை! கல்யாண ஜானவாச வண்டின்னு சொல்லுங்க என்றாளே அம்மா! பஸ் பிரயாணிகள் சிரிக்க ஆரம்பித்தனர். பாதி பெண்களுக்கு இலவசம் ..நாலு ஆம்பிளைங்கதான் இருக்கோம். தம்பி...இப்பவே மோதிரம் மாத்திடுவோமா என்றார் வெள்ளை வேஷ்டிக்காரர். ஜனனி வெட்கத்தில் நெளிய ஆரம்பித்தாள்.