Salma Amjath Khan

Abstract

4  

Salma Amjath Khan

Abstract

குற்றம்

குற்றம்

3 mins
520


"டேய் அங்க என்னடா வேடிக்கை பார்க்கிற. சாப்பிடு." என தன் மகனிடம் சீறினான், பிரபாகரன்.


"இல்லப்பா. அந்தத் தாத்தா நம்மளையே பாத்துட்டு இருக்காரு. அதான் பார்த்தேன்." என பிரபாகரனின் பின்னால் நின்ற வயதானவரை அவன் மகன் கைகாட்ட திரும்பிப்பார்த்தான், பிரபாகரன்.


அழுக்குப் படிந்த முகத்துடனும் இத்துப் போன பழைய உடையுடனும் இவர்களையே குறுகுறுவென பார்த்தவண்ணம் நின்றிருந்த அந்த வயதானவரை பார்க்க, அந்த வயதானவரோ பிரபாகரனின் பார்வையை கண்டு வேறு புறம் திரும்பி பார்த்தார்.


தன் மகன் ஆகாஷ் பார்த்தவன், "அவரை ஏன் நீ பாக்குற. நீ சாப்பிடு." என அந்த சாலையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு கடையில் சுடச்சுட வடையை வாங்கி ஆகாஷுக்கு ஊட்டிக் கொண்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


"இன்னுமா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுறீங்க. நான் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டே வந்துட்டேன். சீக்கிரம்." என பிரபாகரனின் மனைவி நித்யா வந்து நின்றாள்.


"இதோ இவன்தான் இன்னும் சாப்பிடனும், நிதி. நீ பில் பே பண்ணு. அதுக்குள்ள இவன் சாப்பிட்ருவான்."


நித்யா தன் பையிலிருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்ட கடைக்காரர் சில்லறை இல்லை என கூறி விட்டதால், மீண்டும் பிரபாகரனிடம் வந்தாள்.


"பிரபா, உன்கிட்ட சேஞ்ச் இருக்கா?" என்றவாறு பின்னால் பார்க்க,


"இருக்கு நிதி. அங்க என்ன பாக்குற?"


"இல்ல அந்த ஆளு...." என பின்னால் கைகாட்ட, மீண்டும் பிரபாகரன் திரும்பி அந்த வயதானவரை பார்த்தான். இவர்களின் பார்வையை உணர்ந்து அவர் மீண்டும் திரும்பிக் கொண்டார்.


அவரை முறைத்த வண்ணமே பிரபாகரன் திரும்ப , "அப்பா எனக்கு போதும்." என்றான் ஆகாஷ்.


"இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா."


"விடு பிரபா. அவன் தான் வேணாம்னு சொல்றான்ல்ல. அதை தூக்கி போட்டுட்டு எனக்கு பேலன்ஸ் கொடு." எனக் கேட்டாள், நித்யா.


தட்டை அவன் வண்டியின் மீது வைத்தவன் , அவன் பர்சை திறந்து பணத்தை எடுக்க முயல, அவன் ஒரு கையால் எடுக்க முடியவில்லை.


சரி என வண்டியின் மீது பர்சை வைத்துவிட்டு, அருகில் இருந்த குடத்தில் தண்ணீரை எடுத்து எச்சில் கையை கழுவி விட்டு திரும்ப, வண்டியின் மீது பர்ஸ் இல்லை.


பதறியவன் சுற்றி முற்றி பார்க்க, அந்த வயதானவர் இவனைப் பார்த்துக் கொண்டே பயந்து ஓட,"ஏய்..." என கத்திக் கொண்டே ஓடினான், பிரபாகரன்.


திடீரென தன் கணவன் ஒரு வயதானவரை துரத்த என்ன ஏது என்று புரியாமல்," பிரபா!!!!"என கத்திக்கொண்டே தன் மகனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அவன் பின் ஓடினாள், பிரபாகரனின் மனையாள்.


பிரபாகரனும் அந்த மனிதரை துரத்திக்கொண்டு ஓட பல குடிசைகளுக்கு நடுவே அவர் மறைந்து போனார்.


எங்கு சென்றிருப்பார் என பிரபாகரன் சுற்றி முற்றி தேட ஒரு குடிசைக்கு பின்னால் இருந்து அவர் எட்டிப்பார்ப்பது தெரிந்தது.


ஒரே எட்டில் அவரை அடைந்தவன், அவரை இழுத்து கன்னத்தில் ஒரு அறை விட்டிருந்தான்.


"பிரபா என்ன பண்ற?" என மூச்சிரைக்க தன் பையனை கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த பிரபாகரனின் மனையாள், வந்து நின்றாள்.


"இவன் என்னோட பர்ஸ ..... "என நித்யாவை பார்க்க அவள் கையில் அவன் பர்ஸ் இருந்தது.


"பர்ஸ் எப்படி உன்கிட்ட?" குழப்பத்தில் கேட்டான், பிரபாகரன்.


"நான் தான் பில் பே பண்ண எடுத்தேன். என்னாச்சு?" என பிரபாகரனை கேள்வியாக நோக்க, அவனோ அதிர்ச்சியில் பெரியவரை திரும்பிப் பார்க்க, அவரோ தரையில் மண்டியிட்டார்.


"மன்னிச்சிடுங்க தம்பி. எனக்கு வலிப்பு வந்துருச்சுன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வேலையை விட்டு தூக்கிட்டாங்க. வேற வேலையும் கிடைக்கல. எனக்கும் என் பேரனுக்கும் யாரும் இல்ல.


வீட்ல உள்ளதெல்லாம் வைத்து ரெண்டு மாசத்துல ஓட்டிட்டேன். இப்ப ரெண்டு நாளா என் பேரன் எதுவும் சாப்பிடல தம்பி. அதான் உங்க சம்சாரம் தூக்கி வீச சொன்ன வடைய எடுத்துட்டு வந்துட்டேன். தப்புதான். என்ன மன்னிச்சிடுங்க தம்பி." அவன் பிரபாகரனின் காலில் விழ,அவன் சுக்குநூறாக உடைந்து போனான்.


"நீயும் கொஞ்சம் சாப்பிடு தாத்தா. எனக்கு மட்டும்தான் எப்பவும் வாங்கித்தர. ஆமா யாரு இவங்க?" என்ற குரலில் பிரபாகரன் பார்க்க, மெலிந்த தோற்றத்தில் வடையை சாப்பிட்டுக்கொண்டே தாத்தாவைப் பார்த்து கொண்டிருந்த அந்த தாத்தாவின் பேரன் நின்றுக் கொண்டிருந்தான். பிரபாகரனின் மனம் கனத்தது.


யார் மீது குற்றம்? தூக்கி எறிய காத்திருந்த எச்சில் வடையை திருடிய பெரியவர் மீது குற்றமா? இல்லை எச்சில் வடையை எடுத்ததற்கு பர்சை எடுத்து விட்டான் என முன்பின் யோசிக்காமல் கையை நீட்டிய பிரபாகரனின் மீது குற்றமா? இல்லை ஏழை ஏழ்மையிலே மூழ்கி போகட்டும் என அவர்களை பார்த்தும் பார்க்காமல் ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கும் கயவர்கள் மேல் குற்றமா? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். 


அன்புடன் 

சல்மா அம்ஜத் கான்....



Rate this content
Log in

Similar tamil story from Abstract