குற்றம் கடிதல்
குற்றம் கடிதல்


சமீப காலத்தில் மருத்துவர்கள் அதுவும் அனுபவமிக்க மருத்துவர்கள் பலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மற்ற மருத்துவர்களுக்கு பாதுகாப்பும் அளித்து வந்தனர். ஒரு மாதத்தில் 4 மருத்துவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். கொலை செய்தவனை கண்டுபிடிக்க ஷெர்லாக் ஹோல்ம்ஸ் மற்றும் கணியன் பூங்குன்றன் இருவரும் களத்தில் இறங்கினர்.
இதுவரை கொல்லப்பட்ட மருத்துவர்களின் முழுவிவரமும் தெரிந்துகொள்ள முற்பட்டனர். கொல்லப்பட்ட நான்கு பெரும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் இதுவரை செய்திருந்த அனைத்து அறுவைசிகிச்சை பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். புரிவது போன்றும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது.
அடுத்ததாக ஒரு மருத்துவர் கொலை செய்யப்பட்டார். அவர் இதய சிகிச்சை நிபுணர். வாரம் ஒரு மருத்துவரை கொல்கிறான் அதுவும் புதன் அன்று என குறித்துக்கொண்டனர். அடுத்த புதனுக்குள் கண்டுபிடித்துவிட எண்ணினர் ஆனால் செவ்வாய் இரவு வரை முடியவில்லை. இருவரும் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தனர். கணியனின் அலைபேசி அடித்தது. அதை உயிர்பித்தான். "உனக்கு மிகவும் வேண்ட பட்டவன் நான்", என்றது அந்த குரல். நொடியில் கிரஹித்துவிட்டான் அவன் தான் கொலையாளி என்று. ஸ்பீக்கரை ஆன் செய்தான். தான் இன்னும் கொலைகள் செய்வேன் உங்களால் என்னை கண்டுபுடிக்க முடியாதென்றும் நான் செய்யும் செயல் நியாயம் ஆனதே என்று கூறி வைத்துவிட்டான்.
அவன் பாதிக்க பட்டவனாக இருக்க கூடும் என் கணிப்பு சரி என்றால் மருத்துவத்துறையை தவறாக பயன்படுத்தியவர்களையே இவன் கொலை செய்திருக்க கூடும் என்றான் ஷெர்லாக். கொல்லப்பட்ட மருத்துவர்களின் வெளியே தெரியாத முகங்களை கண்டுபிடித்தனர். அவனின் கணிப்பு சரியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் ஒரு மருத்துவர் கொல்லப்பட்டார். செய்தி காவல்துறைக்கு செல்லவில்லை இவர்களுக்கு வந்தது. அவர்களுக்கு வந்த செய்தியில் ஒரு வீட்டின் முகவரி இருந்தது. முதலில் அங்கு செல்லலாம் பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்று எண்ணி இருவரும் புறப்பட்டனர்.
வீட்டுக்குள்ளே யாரும் இருப்பதாக தெரியவில்ல
ை. தோட்டத்துக்கு பக்கத்தில் உள்ள அறையில் மருத்துவர் ஒருவர் உயிர்பிரிந்த நிலையில் கிடந்தார். மற்றொரு புறம் ஒரு வாலிபன் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அதுவே சொன்னது அவன் தான் கொலையாளி என்று. அவனிடம் விவரம் கேட்டனர். "உனக்கு மனசாட்சி இல்லையா ஒரு உயிரோட இப்படி வெளயாடுற? ", என்றான் கணியன். சற்றும் அசராமல் பதில் அளித்தான் அந்த வாலிபன்.
"ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்க அம்மாக்கு விபத்துல அடிப்படிருச்சுனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் 12 லட்சம் ஆபரேஷனுக்கு கட்டுனாத்தான் டிரீட்மென்ட் பாப்பேன் இல்லனா தொட கூட மாட்டேன்னு சொன்னான் அந்த டாக்டர். ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணுங்க எப்படியாவது பணம் கட்றேன்னு சொன்னத காதுல வாங்கவே இல்லை.
நாங்க இருந்த வீட்ட வித்து அம்மா வோட நகையை வித்து காச கொண்டு வந்து கட்டுனேன். ஒரு மணிநேரத்துல வந்து சொன்னாங்க உங்க அம்மா இறந்துட்டாங்க பணம் கொண்டுவராம நீங்க தான் லேட் பண்டீங்கன்னு என்னால இத தாங்கிக்கவே முடில. அம்மாவோட உறுப்புக்கள் எல்லாத்தையும் எனக்கே தெரியாம எடுத்துகிட்டாங்க இத அங்க உள்ள நர்சு சொல்லி தான் எனக்கு தெரியவந்துச்சு. ஹாஸ்பிடல் நிர்வாகத்துக்கிட்ட கேட்டா எங்க அம்மா தான் கையெழுத்து போட்டாங்கன்னு பேப்பர்ஸ் காட்றான்.
கடவுள யாரும் பார்த்தது இல்லை மருத்துவர்கள் ரூபத்துல தான் கடவுளா நாம பாக்குறோம் உயிர பாதுகாக்குறவனே அத வெறும் தொழிலா மனசாட்சி இல்லாம பணத்த பத்தி தான் யோசிக்கிறாங்க. எங்க அம்மாவ பறிகொடுத்துட்டு நிக்குற மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க ன்னு யோசிச்சேன். அன்னைக்கு இறங்கினேன் இதுல எந்த டாக்டர்ஸ்லாம் இந்த தப்ப பண்றங்களோ போட்டு தள்ளுனேன்.
எனக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை. எத்தனையோ உயிர காப்பாத்துனேன்னு தான் தோணிருக்கு. இதுக்கு மேல என்னால முடியும்ன்னு தோணல. உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தா எல்லாரும் நல்லா இருக்கனுமன்னு நெனச்சா இந்த பைல்ஸ்ல இருக்கிறவங்களுக்கு ஒரு முடிவு கட்டுங்க", என்றான் அந்த வாலிபன். நொடியும் தாமதிக்கவில்லை கையில் இருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்தான்.