Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

4.7  

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

நவீன தெனாலி

நவீன தெனாலி

2 mins
406


மத்திய அமைச்சர் தேவராஜ் மக்களின் நலன் விரும்பி மக்களுக்கு நன்மை தரும் என்றால் போரடியாவது அதனை மக்களிடம் சேர்பித்துவிடுவார். மிகவும் நல்லவர். அவரின் நல்லமனதை கலைப்பதற்காகவே சில பல ஜந்துக்கள் அவரை சுற்றி இருந்தனர்.


ராமன் துடிப்பான இளைஞன் நல்லவன் அதே சமயம் புத்திசாலியும் கூட அவனின் யோசனைகள் ஒவ்வொன்றும் அத்துணை சரியாக இருக்கும். தேவராஜின் தனி உதவியாளர் அவனே. எந்த ஒரு முடிவையும் ராமனிடம் கலந்துரையாடாமல் தேவராஜ் எடுக்க மாட்டார். இது மற்றவர்களுக்கு பொறாமை அளித்தது.


அடிப்படை வசதி போதுமானதாக இல்லாத கிராமங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சரியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் முனைப்பில் இருந்தார் தேவராஜ். ஓலை வீடுகளை ஒட்டு வீடாக எண்ணினார். இதை பற்றி ராமனிடம் விவாதிக்க முடிவெடுத்தார்.


அவரின் கட்சியில் உள்ள சில ஜந்துகள் அதனை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டம் போட ஆரம்பித்தனர். தேர்ந்தெடுக்க பட்டிருந்த கிராமங்களில் மூன்றை தேர்வு செய்து அங்குள்ள மக்களை விரட்டி அடித்துவிட்டு அங்கே ஷாப்பிங் மால் கட்ட தீர்மானித்தனர்.


ராமனிடம் கலந்தாலோசித்தபின் சபையில் அறிவிக்க புறப்பட்டார், தேவராஜ். அச்சமயம் அந்த ஜந்துகளில் ஒருவன் அவரிடம், நேற்று அவனின் கனவில் அமைச்சரின் குலதெய்வம் வந்து அங்குள்ள மக்களை வேறு இடத்தில் அப்புறப்படுத்திவிட்டு அங்கே வணிக வளாகத்தை ஏற்படுத்துவது தான் நன்மை என்று கூறியதாக ஒப்பித்தான்.


குலதெய்வம் சொன்னது நன்மை என்று சொன்னால் அமைச்சர் வேறு எதுவும் சொல்ல மாட்டார் என்று தெரிந்தே வார்த்தைகளை பிரயோகித்தனர். அது அவர்கள் எதிர்பார்த்த வேலையை காட்டியது, அமைச்சர் தீர்மானத்தை அறிவிக்கவில்லை.


அடுத்தடுத்த நாட்களில் வேறு பணியில் மூழ்கிவிட்டார். அன்று ராமன் அலுவலக அறையில் உள்ள அனைத்து கோப்புகளையும் தள்ளி விட்டு அலங்கோலம் ஆகிக்கொண்டிருந்தான். இதனை அறிந்த அமைச்சர் கோபத்துடன் அவனை வினவினார். அதற்கு ராமன் அவரிடம் அதாகப்பட்டது மத்திய அமைச்சர் அவர்களே நேற்று தங்களின் குலதெய்வம் என் கனவில் வந்து அலுவலக அறையில் கோப்புகளை கலைத்து விட்டால் என் வாழ்க்கை நன்றாக அமையும் என்றது அதனால் தான் இந்த செய்கை என்றான்.


தேவராஜிற்கு பயங்கர கோபம் வந்தது. உளறுவதை நிப்பாட்டு ராமா அலுவலக அறையை கலைத்தால் உன் வாழ்க்கை எப்படி சீராகும், என் குலதெய்வம் ஏன் உன்னிடம் அப்படி சொல்ல வேண்டும் என்றார். அதை தான் நானும் யோசிக்கிறேன் அமைச்சரே ஏன் உங்கள் குலதெய்வம் ராஜேஷின் கனவில் வர வேண்டும் ஒரு வேலை வழி மாதிரி போயிருக்குமோ என்றான். இப்போது தான் ராமனின் செயல்கள் தேவராஜிற்கு விளங்கியது. "கிராமத்தில் ஷாப்பிங் மால் கட்டுவதால் என்ன பயன்?" என்றும் கேட்டுவைத்தான். தேவராஜிற்கு தான் செய்த தவறை உணர்ந்தார். அதை சரி செய்ய எண்ணினார்.


தேவராஜ் ராமனை மனங்குளிர பாராட்டினார். "என் தளபதிடா நீ" என்றார். என்றும் நீங்கள் என் ராஜா உங்களின் ராமன் நான் என்றான். தேவராஜ் தனக்கென சொந்தமான தனி சிரிப்பை சிரித்தார். கர்வமாக அவரின் மீசையை நீவிக்கொண்டார்.


வாழ்க்கையில் கற்றதை பிறருக்கும் கற்றுக்கொடுங்கள். அவர்கள் தவறான பாதையில் சென்றால் சரியான பாதையில் அவர்களை அழைத்து செல்லுங்கள்.

ஒவ்வொரு கிருஷ்ணதேவராயருக்கும் ஒரு தெனாலி ராமன் தேவைப்படுகிறான்.



Rate this content
Log in