கடிதம் அல்ல - உள்ளம்!
கடிதம் அல்ல - உள்ளம்!


ஒரு காலத்தில் கடிதங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்து இருந்தன. சில கடிதங்களை, காதலிக்காக காத்திருக்கும் காதலனைப் போல ஆவலாக எதிர்பார்ப்போம். தபால்காரர் கையிலிருந்து பெறப்பட்ட அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் தந்த குஷி, இன்றைய இ-மெயில் கடிதங்கள் கொடுப்பதில்லை!
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா பிரியதர்சினிக்கு, பத்து வயதாய் இருந்த போது, ஜவஹர்லால் நேருஜி எழுதிய கடிதங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.
பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம், வேலைக்காக பல இடங்களில் விண்ணப்பித்து விட்டு, நாள்தோறும் தபால்காரரின் வருகையை ‘எதிர்பார்த்து காத்திருந்த அனுபவம்’ இல்லாத இளைஞர்கள்/இளைஞிகள் இருக்கவே முடியாது. அந்த நாட்களில் வந்த ஞாயிற்றுக்கிழமைகள் வலி மிகுந்தவை. ஏனெனில் ஞாயிற்றுக் கிழமைகளில் தபால்காரர் வர மாட்டார்!
என் பத்து வயதில் அப்பாவும் அம்மாவும் ஒரு முக்கியமான வேலையாக சென்னை சென்ற சமயத்தில், நான்கு/ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு கடிதம் அனுப்புவார்கள். அழுது கொண்டே இருக்கும் எனக்கு – சுற்றியிருந்த என் உறவினர்கள் கொடுக்காத ஆறுதலை - அந்தக் கடிதம் கொடுக்கும்.
இருபத்தைந்து வயதில், பணியின் காரணமாக வெளியூரில் நான் வசிக்க நேர்ந்தது. கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழ்ந்ததன் காரணமாக வீட்டு நினைவு (home sickness) வெகுவாக வாட்டும். அப்போது இரண்டு/மூன்று நாட்களுக்கு ஒரு முறை மூத்த அண்ணன் எழுதும் அந்த கடிதங்கள் கொடுத்த ஆறுதலையும் உற்சாகத்தையும் வேறு யாரால் கொடுத்திருக்க முடியும்!
மதிப்புமிகு மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து வந்த என் பணி நியமன கடிதம் இன்னும் என்னிடம் உள்ளது. அதோடு இன்னும் சில பணிநியமன கடிதங்களை பெருமையோடு வைத்துள்ளேன்.
மறக்க முடியாதவற்றுள் சற்று விசேஷமான இன்னொரு கடிதம் என்னிடம் உண்டு! இத்தகைய கடிதம் ஒரு சிலருக்கு மட்டுமே வரும். அதைப் பெறுவதற்கு உழைப்பு, விடாமுயற்சி, கற்பனைத் திறன் என எல்லாம் வேண்டும். புரிந்து கொண்டிருப்பீர்களே! ஆம்! பிரபல பத்திரிகையில் என் முதல் கதை பிரசுரமான செய்தி தாங்கிய கடிதம் அது!
ஒரு பெண் மகிழ்ச்சியின் உச்சம் தொடுவது அவரது முதல் பிரசவத்தில்! ஒரு எழுத்தாளன் மகிழ்ச்சியின் உச்சம் தொடுவது அவனது முதல் பிரசுரத்தில்!
சுமார் இருபது வருடங்களுக்குக்கு முன் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியரிடமிருந்து வந்த கடிதம் அது. என் கதை விகடன் பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும், பாராட்டுடனும் நிர்வாக ஆசிரியர் வீயெஸ்வி அவர்கள் தெரிவித்திருந்தார்.
கல்லூரி ஆண்டு மலரில் மட்டுமே என் எழுத்தைப் பார்த்திருந்த எனக்கு “ஆனந்த விகடனில்” என் படைப்பு வெளியாகிறது என்பதைச் சொன்ன அந்தக் கடிதத்தை மறக்க முடியுமா!!!