Siva Kamal

Drama

4.7  

Siva Kamal

Drama

கரடியின் ஓமணப்பெண்

கரடியின் ஓமணப்பெண்

9 mins
598


அந்த காட்டில் இளங்கரடி ஒன்றுதான் ராஜாவாக திரிந்தது.. காட்டில் உள்ள அத்தனை பெண் கரடிகள் பார்வையும் அந்த ஒரு கரடியைச் சுற்றயே இருந்தது .. பெண் கரடிகள் இவன் ஒரு பார்வைக்கே தவமாய் கிடந்தன.


இத்தனை வசீகரமானதொரு இளங்கரடி, மற்ற இளம் பெண்கரடிகளை ஈர்க்க தன் சுண்டுவிரலைக்கூட அசைத்ததில்லையென்பது கவனிக்கத்தக்கது.

அந்த இளங்கரடி மனதில் ஒரு வித்தியாசமான கனவு உதித்திருந்தது என்பதே உண்மை. அது வேறொன்றுமில்லை. அவன் ஒரு மனிதப் பெண்ணின் காதலுக்காக ஏங்கினான். அப்படி வாய்க்க வாய்ப்பில்லையென யாருக்காவது தோன்றினால் அதில் தவறொன்றுமில்லை. 


காரணம் எந்த ஒரு இளங்கரடியும், இன்னொரு பெண் கரடியையே ஸ்நேகிக்க முடியும். அல்லது ஒரு பெண் கரடி இன்னொரு ஆண் கரடியைக் காதலிக்க முடியும். அதேபோல ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே காதலிக்க முடியும். இது எச்சூழலிலும் மாறாதது, இயற்கையின் நியதி. 


இந்த இரு வம்சங்களிலேயும் அனுக்கிரகம் பெற்றவர்கள் அவர்கள் வம்சத்திலேயே தங்கள் காதலைக் கண்டடைய முடியும். அதுதான் மனித சமூகச் சாரத்தின் நியதி. மாறாக, கரடி மனுஷியோடோ, மனுஷி கரடியோடோ காதல் வயப்பட்டால் இதுவரையிருந்த நடைமுறை சலித்து விட்டதென்றும், அதைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட வேண்டுமென்றும் முடிவெடுத்துவிட்டதாக நாம் நினைத்துக் கொள்ளலாம்.


அந்த இளங்கரடி, மனிதப்பெண் குறித்த தன் கனவை, அதன் வயதையொத்த சில நெருங்கிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதுண்டு. அவர்கள் அவனைக் கிண்டலடித்துச் சிரித்தார்கள்.


‘‘உனக்கு வெக்கமாயில்லையாடா? இப்படி ரெண்டுகால் ஜீவன்கிட்ட காதல் வயப்பட! அதுங்களுக்கு உடம்புல ஒழுங்கா முடிகூட இல்ல. தலையிலேயும், இங்கேயும் அங்கேயுமா எங்கயோ சில இடத்துல மட்டும் முடி மொளச்சு… சே, எங்களால இத யோசிக்கக்கூட முடியல!!’’


‘‘உடம்பு முழுக்க ரோமம் இல்லாமலும், இரண்டு கால்களோடு இருப்பதாலும் ஒரு சௌந்தர்யத்தை உங்களால் தரிசிக்க முடியலயா?’’


அது மிகுந்த துயரத்தோடு தன் சகாக்களைப் பார்த்துக் கேட்டது. பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அவை மரங்களின் மீதேறி வானத்தைப் பார்த்து ஓலமிடத் துவங்கின. மௌனமாய் அவர்களைப் பார்த்து நின்றது அந்த இளங்கரடி.


தனக்கு விருப்பமான பெண்ணை எப்படித் தேர்வு செய்ய முடியும்? எத்தனை யோசித்தும் சரியான பதில் பிடிபடவில்லை. அப்படியே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் எந்த பாஷையால் தன் காதலை வெளிப்படுத்துவது? அதற்கும் அதனிடம் பதிலில்லை. தன் பிரத்யேகப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டி அது கடவுளிடம் மண்டியிட முடிவெடுத்தது.


பல ஆண்டுகாலமாக உண்மையான கடவுள் பக்தனாய் தான் இருந்த போதிலும், கடவுளிடம் தன் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டி செல்வது இதுதான் முதல்முறை. தன்னிடமிருந்த ஒரு பெரும் தேனடையைக் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டு சென்றது. தன் கண்முன்னால் கையிலிருக்கும் அத்தேனடையிலிருந்து சொட்டும் தேனைக் குடிக்க நீளும் தன் நாக்கை அது அடக்கிக்கொள்ள சிரமப்பட்டது.


வனத்தினிடையேயிருந்த ஒரு தடாகத்தின் நடுவில்தான் அது வேண்டி நின்ற கடவுளின் வீடும் அலுவலகமும். பார்வையாளர்களின் வசதிக்காக ஒரு சிறு படகு எப்போதும் கரையில் நிற்கும். அப்படகைப் பிணைத்திருந்த கயிற்றை அக்கரடி தொட்டவுடன் அது உதிர்ந்து விழுந்தது. மனிதர்கள் அதைத் தொட்டு பல காலமாகிவிட்டதை அதனால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அலைகளின் சிறு அசைவில் ததும்பிக் கொண்டிருந்த கடவுளின் வீட்டை நோக்கி, தன் கையிலிருந்த துடுப்பினால் துழாவியது.


பாதி வழியில் அத்துடுப்பும் முறிந்தது. முறிந்த மரத்துண்டுகள் கொண்டு முன்னேறி ஒரு வழியாய் அது கடவுளின் வீட்டையடைந்து, கவனமாக தோணியைக் கயிற்றில் கட்டிவிட்டு வராந்தாவைக் கடந்து வீட்டினுள் கால் பதித்தது.


உணவு மேசையில் அமர்ந்து கடவுள் டி.வி.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை அக்கரடி கண்டது. கடவுளின் முன் தான் கொண்டு சென்ற தேனடையைச் சமர்ப்பித்து கரடி தொழுது நின்றது. தெய்வத்தைத் தொழும்போது உச்சரிக்க வேண்டிய,


ஹலி ஹலியோ


ஹலி! ஹூலாலோ’ எனச் சொல்ல,


கடவுள் அதே வார்த்தையைத் திருப்பிச் சொல்லி கரடியின் தொழுகையை ஏற்ற கணம், கரடி தன் வேண்டுதலைக் கடவுளின் முன் வைக்கப்பட்ட தேனடையை வெறித்துப் பார்த்தவாறே சொல்லி முடித்தது. கடவுள் தன்னருகில் கரடியை அழைத்து தேனடையிலிருந்து ஒரு பகுதியை உடைத்தெடுத்து அதைக் கரடியின் முன்நீட்டி உண்ணச் சொல்லி சைகை செய்ய, அதுவரை அடக்கி வைத்திருந்த தன் ஆசை கட்டவிழ, அதை ஆர்வத்துடன் தின்ன மீதியைக் கடவுளும் தின்று முடித்தது. பின்னர் தரையிலிருந்து தன் ஒரு காலை மேலே உயர்த்தி அதைக் கரடியின் தலையின் மேல் வைத்து, ‘ஹந்தொந்து’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லி, மீண்டும் டி.வி.யைப் பார்க்க ஆரம்பித்தது.


அவ்வார்த்தையின் அர்த்தம் புரியாத கரடி, கடவுளையும், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தையும் மாறிமாறிப் பார்க்க ஆரம்பித்தது. பின் மிகுந்த அதிருப்தியோடு அப்படகிலேறி மறுகரையை அடைந்து காடடைந்தது. ‘ஹந்தொந்து’ என்ற வார்த்தையை அது மீண்டும், மீண்டும் உச்சரித்தது. அதன் அர்த்தம் என்ன? ஒரு உண்மையான பக்தனிடம் கடவுள் மனந்திறந்து இன்னும் வெளிப்படையாகப் பேசியிருக்கலாமென கரடியின் மனம் குமைந்தபோது, அதன் முகத்தின் முன் சுழன்று வட்டமடித்துக் கொண்டிருந்த பெருந்தேனீ ஒன்று எதிர்பாராத கணத்தில் அதன் மூக்கின்மேல் அழுத்திக் கொட்ட ‘ஹந்தொந்து’ என அலறிப் புடைத்து மண்தரையில் விழுந்து புரண்டது. அப்போதுதான் கடவுளின் அந்த அருள்வாக்கின் அர்த்தம் அதன் உள்மனதில் எதிரொலித்தது.


‘தேனீ’


‘தேன்’


”தேன்மீது பெரும் வாஞ்சையுற்ற ஒரு யுவதியே உனக்கானவள்”


அது சந்தோஷம் தாங்காமல் எக்களித்தது. அவள் மொழியை எப்படி நானறிவது கடவுளே? ‘‘பெண் கிடைத்தால், மொழியும் கூடவே கிடைக்கும்” அந்த இளங்கரடி தாங்கமுடியாத சந்தோஷத்தில் ஒரு அணில்வழுக்கி மரத்தின் மேலேறி வானத்தையும், மேகத்தையும் பார்த்து, மீண்டும் மீண்டும் எக்காளமிட்டது. 


ஒரேயொரு நிராசை மட்டும் அதனுள் எழுந்தது. அவளுக்கு என்னைப் போலவே தேனடையோடு கரையானும்கூடப் பிடித்திருக்க வேண்டும் கடவுளே! தன் இருப்பிடத்தை அடைந்தவுடன் அது அடுத்து எடுத்துவைக்க வேண்டிய தன் அடியைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தது. இருட்டியவுடன் அது காட்டின் மையத்திற்குள் பிரவேசித்தது. அக்காட்டினுள் ஜீவித்திருந்த ஒட்டுமொத்த தேனீக் கூட்டமும் நடுநடுங்கிய இரவு அதுதான். இத்தனைப் பெரிய தொடர் ஆக்ரமிப்பை அவை ஒட்டுமொத்தமாய் இதுவரை எதிர்கொண்டதில்லை.


மொத்தத் தேனீக்களும் அக்கரடியைச் சூழ்ந்து, மொய்த்து, கொட்டியும், அவற்றைத் தன் உடலால் அநாவசியமாக ஏற்று, அக்கரடியே ஒரு பெரிய தேன்கூடாக மாறி நடந்தது. தன்மீது மொய்த்திருந்த தேனீக்களைத் தட்டிவிடக்கூட மறந்து, ஒரு தேன் கூட்டிலிருந்து, இன்னொரு தேன்கூட்டிற்கு மாறிமாறி நடந்து மொத்தத் தேனடைகளையும் அப்படியே தன்முன் கொண்டுவந்து குவித்தது.


விடியும்போது இன்னமும் சொட்டிக் கொண்டிருந்த தேனடைக் குவியலின் முன் அது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. இக்கரடியின் ஆகிருதியின் முன் தோற்றிருந்த மொத்தத் தேனீக்களும் காட்டை விட்டகன்றிருந்தன. காலையில் அக்காட்டின் அருகிலிருந்த வயல்வெளிப் பாதையில் ஆண்களின் நடமாட்டம் குறைவதற்காக வேண்டி அக்கரடி மறைந்து நின்று காத்திருந்தது.


பெண்களின் வருகை சமீபிக்கும்முன் அது காட்டின் விளிம்பை ஒட்டிய ஒரு பகுதியில், நேற்றிரவு தான் சேகரித்த மொத்த தேனடைகளையும் குவித்து வைத்து மறைந்து நின்றுகொண்டது. அதன் எதிர்பார்ப்பின்படியே அவ்வழியே பெண்களின் வருகை ஆரம்பமானது. அவசர கதியில் நடந்தவர்கள், அத்தேனடைகளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றார்கள். சிலர் தேனடைகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். குனிந்து கையிலெடுத்து முகர்ந்து பார்த்து முகம் மலர்ந்தார்கள். விரலால் தொட்டு நக்கி ருசியை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டார்கள். தங்கள் கணவர்களுக்காக அத்தேனடைகளின் துண்டுகளை கைகளிலோ, காகிதங்களிலோ சுற்றி, பைகளில் வைத்தவாறு அவர்கள் நடந்தார்கள்.


காட்டின் விளிம்பில் மூச்சடக்கி கரடி இதை கவனித்தவாறு நின்றிருந்தது. தேனடைக் குவியல் மிக விரைவில் சிறியதாக இளைத்திருந்தது. இனி எட்டு அல்லது பத்து அடைகளே மிச்சமிருந்தன. கரடி நிராசையில் மூழ்கியது. கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தில் கடவுள் என் கோரிக்கையை மறந்துபோனதா? தேன்மீது  அதீத நாட்டமுள்ள எனக்கான அவள் எங்கே? இப்போது தன்னைக் கடந்துபோன பெண்களைப் போல தேனடைகளை எடுத்து இலைகளிலோ, பைகளிலோ அடைத்துக் கொள்ளும் ஒருத்தி அல்ல அவள். இத்தேனடைகளைக் கண்ட விநாடி அவள் மேலெழும்பித் ததும்பும் தன் ஆர்வத்தை அடக்க முடியாமல் தேனைப் பருகியிருப்பாள். இந்நினைவே அதன் வாயில் எச்சிலூற வைத்தது. ஊறிய எச்சிலை தனக்குள் விழுங்கியபடியே இன்னொரு இரவை தேனீக்களோடு மல்லுக்கட்டி செலவழிக்க வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் அவ்வழியின் மீதே கண்களை மீண்டும் பதித்தது.


தூரத்திலிருந்து ஒரு பெண் வருவது இப்போது தெளிவாகத் தெரிந்தது. அவள் வருவாள். மீதியிருக்கும் தேனடைகளையும் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவ்வளவுதான் முடிந்தது என் கதை. வரும் பெண்ணின் கையில் பையோ, கூடையோ இல்லாமலிருந்தது அதற்குப் பெரிய நிம்மதியைத் தந்தது. அவள் அருகில் வந்தபோது அதன் கண்கள் விரிந்து, மூக்கு புடைத்து மனம் குதூகலித்தது. இத்தனை பேரழகோடு ஒரு மனுஷப் பெண்ணை இதுவரை அது பார்த்ததில்லை.


தன்முன் வியாபித்திருந்த கோரைப்புற்களை முற்றிலும் விலக்கி, அவள் பேரழகைப் பருகியும், மயங்கிச் சரியாமல் கிறங்கி நின்றது. அத்தனை வசீகரமானவள் அப்பெண். அவள் ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வந்து கொண்டிருந்தாள். அதற்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரியவில்லையெனினும்,


‘‘ஜன்னல் திரைகளை விலக்கி,


ஜாலம் காட்டுவது எதற்காக?


தேன் தடவிய முட்களை


என் இதயம் நோக்கி வீசுவது எதற்காக?’’


என்ற அப்பாடல் தனக்கானது என அது அர்த்தப்படுத்திக்கொண்டது.


அவளின் அழகும், அப்பாடலின் வசீகரமும் சேர்ந்து காதல் ததும்பும் நீல வானத்தில் அதைத் தூக்கிப் போட்டது.


‘ஹலி ஹலியோ


ஹலி, ஹலாலோ


நான் தேடிக் கண்டடைய விரும்பிய தேனூறும் பெண் இவளாக மட்டுமே இருக்க வேண்டும் கடவுளே! கடவுளிடம் பிரார்த்தித்தபடி அவளின் ஒவ்வொரு காலடி ஓசையையும் அது மனதால் பின்தொடர்ந்தது.


ஓர் அற்புதத்தைப் பார்ப்பதைப்போல தன் முன்னிருக்கும் அத்தேனடைகளைக் கண்ட விநாடி அவள் கண்கள் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தன. அவள் நாக்கு, ஈர உதடுகளின் மீதேறி பயணித்தது. வாயில் எச்சில் ஊறத் துவங்கியது. தேனடைகளின் முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். முதல் தேனடையைக் கையிலெடுத்து வாயிலிட்டபோது, உதட்டோரம் வழியும் தேன் துளிகளும், கிறங்கிய கண்களுமாய் அதை அப்படியே அவள் ஸ்வீகரித்தாள். ஒரு நிமிடம் கண்மூடி அதன் சுவையை உள்வாங்கி. இப்போது தேனை உள்ளங்கையிலிட்டு நக்கிக் குடிக்க ஆரம்பித்தாள்.


கனவு நிறைந்த கண்களினூடே, இதழ்களில் வழியும் தேன்துளிகளைத் தன் விரல்களால் வழித்து நக்கி, இடையிடையே நாவில் அகப்பட்ட சில தேனீக்களைத் துப்பி, சுவாசிப்பதற்காக வேண்டி சில விநாடிகள் சுவைப்பதை நிறுத்தி, கடைசித் துளியையும் மிச்சமின்றி அருந்தி முடித்த கணம், வானத்தை நோக்கி கண்கள் விரிய அவள் புன்னகைத்தாள். எழுந்து நின்று கட்டியிருந்த பாவாடையை உயர்த்தி, தாடையில் வழியும் தேனைத் துடைத்துக்கொண்டு பிசுபிசுத்த கைகளை முதலில் புற்களிலும், பின் தன் பாவடையிலுமாகத் துடைத்துக்கொண்டாள். வலதுகாலை முன்வைத்துப் புறப்பட ஆயத்தமானாள்.


‘‘இவள்தான் எனக்கானவள்’’


கரடி சந்தேகமற்று ஆசுவாசமானது. அது ஒளிந்திருந்த இடத்திலிருந்து ஒரே தாவலில் அப்பெண்முன் நின்று அவள் கைகளைப் பற்றி,


‘‘தேனூறுபவளே! உங்களை நான் காதலிக்கிறேன்’’ என்றது.


தன்னிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு அதுவே நடுங்கியது. அது மனித மொழியை உச்சரித்ததுதான் நடுக்கத்திற்கான காரணம். கிரிக்கெட் பார்க்கும் வெறிக்கிடையிலும் கடவுள் வாக்கு பலித்துவிட்டது.


‘‘பார்க்க ஒரு கரடியைப் போலிருக்கும் நீங்கள் யார்?’’ அவள் வாய் திறந்தாள்.


‘‘உங்கள் யூகம் சரிதான். நான் இக்காட்டிலுள்ள ஒரு கரடிதான். உங்களை நான் ஆத்மார்த்தமாகக் காதலிக்கிறேன்’’


‘‘நீங்கள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு இங்கு என்ன நடந்தது?’’


‘‘உங்கள் அழகும், பாடலும் என் இதயத்தை உருகி ஓட வைத்துவிட்டது. கடவுளின் வாக்குபடி நீங்கள்தான் என் தேன் காதலி’’


‘‘சரி கையை எடுங்கள், இது கேரளா. நீங்கள் ஒரு ஆண் என்பதையும் நான் ஒரு பெண் என்பதையும், ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்’’


‘‘சமூகநீதிக் காவலர்களும், மாதர் அமைப்புகளும், இளைஞர் சங்கங்களும், ஊடகக்காரர்களும் நம்மை கவனித்து கையும் களவுமாகப் பிடித்தால் நம் கதி அதோகதிதான். நாம் கைது செய்யப்பட்டால் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை’’


சட்டெனக் கரடி அவள் கைகளை விடுவித்தது.


‘‘உங்கள் வாழ்க்கைச் சுருக்கத்தைச் சொல்ல முடியுமா? சொத்து விவரங்களையும், லௌகீக சுகபோகங்களையும்கூட’’


ஒரு ரகசியம்போல அவள் கேட்டாள்.

உடனே கரடி தன் பெருமையை எடுத்து விட்டது... இந்த 100 ஏக்கர் காடு நம்முடையது தான்... இந்த மரம்,சேடி, கொடி, விலங்கு, பறவை, குளம்,மலை எல்லாமே நம்முடையது தான்.. என்ன ஆனாலும் உன்னை கைவிட மாட்டேன் என்றது.


இவளுக்கு பிடித்து விடும்... பின்னர் பெண்களுக்கே உரிய நிபந்தனைகளை போடுவாள். ‘‘வாங்க, போங்கன்னு மரியாதையா என்னக் கூப்பிடுறத உடனே நிறுத்து. இதயத்தை உருக்குவதைப் போல என்றெல்லாம் இன்னொருவாட்டி வசனம் பேசினா நான் வன்முறையக் கையாள வேண்டியிருக்கும். சரி, உனக்கு எவன் மலையாளம் கத்துக் குடுத்தது ?


இனி நான் உன்னை நீன்னும் போடா வாடான்னும் கரடின்னும்தான் கூப்பிடுவேன். நீ என்னை தங்கமேன்னும், சக்கரக் கட்டியேன்னும், குட்டின்னும் செல்லமாக் கூப்பிடு, உனக்கு என்னிடம் சொல்ல வேண்டிய ஏதாவது இருந்தா சொல்லு, மீதி விஷயங்கள அப்பறம் தொடரலாம்!’’


அவர்களிருவரும் காட்டினுள் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாடினார்கள். இப்படியொரு அருமையான இணை அருகிலிருந்தும் இவ்வளவு நாள் அறியாமல் இருந்துவிட்டேனே என ஆச்சர்யப்பட்டு, அவள் அக்கரடியைக் கட்டித்தழுவி ஒரு முத்தம் தந்தாள்.


‘‘வா, நான் உன்னை என் அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறேன்’’ என அதைத் தன்னோடு அழைத்துக் கொண்டு, தன் வீட்டைப் பார்த்து நடந்தாள்.


அதை அந்த ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. சிலர் ஆச்சரியத்துடன்,


‘‘இந்தக்கரடியை எங்க பாத்த? உன்னோட எணக்கமாப் பழகுதே’’ என விசாரிக்க ஆரம்பித்தார்கள்.


‘‘ஆமாம், என்னோட அவ்ளோ பிரியமா இணைஞ்சிடுச்சு. நானே அதை வளர்க்கலாம்னு இருக்கேன்’’ என அவர்களுக்கு பதில் சொன்னாள்.


‘‘இருந்தாலும் ரொம்ப கவனமாயிரு. எப்பவுமே ஒரு கரடி இவ்ளோ எணக்கமாயிருக்குமான்றது சந்தேகந்தான்’’


ஊர்க்காரர்களின் வார்த்தைகளில் எச்சரிக்கையிருந்தது.


‘‘நான் பாத்துப்பேன். எணக்கத்தவிட அனுசரணையா இருக்கறதுதான் எனக்கு முக்கியம்’’


கரடிக்கு அவர்களைப் பார்த்து ‘நமஸ்காரம்’ சொல்ல வேண்டும் என்று ஆர்வமெழுந்தாலும், ‘ஊர்க்காரர்கள் முன் வாயைத் திறக்கவே கூடாது’ என அவள் எச்சரித்திருந்தது நினைவுக்கு வர அமைதி காத்தது.


அவள் அதைப் பேசக் கூடாதெனச் சொல்லியிருந்ததன் காரணம் கரடி மலையாளம் பேசினால், அதை ஒற்றன் என்றோ, மாவோயிஸ்ட் என்றோ முத்திரை குத்தி கேரளாக்காரர்கள் அதை சேனல்களின் முன் நிறுத்தப் போவது உறுதி என்பதை அவள் நன்கறிந்திருந்தாள்.


மிகவும் பிரியத்தோடு அவள் கரடியிடம் ‘‘நாம எப்பயுமே கவனமாயிருந்தா ஒரு பிரச்சனையுமில்ல. அது மட்டுமில்ல, உன் வேலை என்னிடம் இணக்கமாயிருப்பதே தவிர, இந்த ஊர்க்காரர்களிடம் அல்ல’’ என்றாள்.


வீட்டை நோக்கி இருவரும் நடந்தபோதே அவள் சொன்னாள். ‘‘கூப்பிட வசதியாயிருக்குன்னு நான் உனக்கு ஒரு பேர் வைக்கிறேன். நடேசன். இந்தப் பேர் உனக்குப் பிடிச்சிருக்கா?’’


‘‘பிடிச்சிருக்கு, ஆனால் இந்தப் பேர் புகழ்பெற்ற நல்ல பேர்தானா?’’ கரடி சந்தேகத்துடன் கேட்டது.


அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்,


‘‘நீ அவ்ளோ தூரம் இந்தப் பேரைப் பத்தி யோசிக்க வேண்டாம்’’


மகள் ஒரு கரடியோடு வீட்டுவாசலை அடைந்தபோது அப்பாவும் அம்மாவும் நடுங்கிப் போனார்கள். கோழி, வாத்து, ஆடு, பசு, முயல் இதெல்லாம் வீட்டிலிருந்தது போதாதுன்னு, அவளே சொந்தமாக வளர்த்த ஏழு பூனைகள், ஒன்பது நாய்கள், ஒரு குரங்கு என ஏற்கனவே வீட்டிலிருக்கும்போது,


‘‘ஈஸ்வரா இந்தக் கரடிய வேற வீட்ல எங்க வச்சு வளக்கறது?’’


அவர்களிருவரும் பதைக்கும் மனதோடு தன் மகளையும், அந்தக் கரடியையும் மாறிமாறி பார்த்துத் திகைத்தார்கள்.


அவள், அப்பா அம்மாவைப் பொதுவாகப் பார்த்துக்கொண்டே,


‘‘இது என் கரடி நண்பன். பெயர் நடேசன். கடவுள் பக்தியும், உழைப்பின்மீது பெரும் நம்பிக்கையுமுடையவர். அவர் என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறார். அதப் பத்தி உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேச வந்திருக்கார். அவருக்கு மலையாளம் பேசவும் தெரியும்’’


கரடி முந்திக்கொண்டு அப்பா அம்மாவின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தது.


‘‘மரியாதைக்குரிய அப்பா, அம்மா என்னை ஆசீர்வதிக்க வேண்டும். உங்கள் மகளை என் மனைவியாக்கிக் கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும். நான் அவளைத் தங்கத்தைப் போலப் பார்த்துக் கொள்வேன்’’


அப்பாவும் அம்மாவும் விக்கித்து நின்றார்கள். அப்பா மெதுவாக அம்மாவிடம்,

அப்பா முதலில் கரைந்து விடுவார்.நமக்கு இரண்டு மருமகன்கள் உள்ளனர், ஒருவன் கூட இதுவரை காலில் விழுந்ததில்லையே என நினைத்துக்கொண்டார்

‘‘அது நம் கால்களைப் பிடித்துக் கொண்டு கேட்டதைப் பாத்தியா? இந்தக் காலத்துப் பையன்கள்ல யாருக்கு இத்தன பணிவிருக்குது? பாக்கறதுக்குக் கரடி என்பதைத் தவிர வேற பிரச்சனை எதுவுமில்லயே? அவளுக்குப் பிடிச்சிருந்தா… நாம எதற்காக… நீ என்ன நெனைக்கிற?’’


அம்மா சொன்னாள்,


‘‘சரி எனக்கும் சம்மதம். ஆனா ஒரு விஷயம். கல்யாணம் முடிஞ்ச பிறகு இங்க குடியிருக்க வேண்டாம். கரடியப் பாக்க தொடர்ந்து ஆளுங்க வந்தா அது ஒரு பெரிய பிரச்சனையாயிடும்’’ அம்மாவின் முடிவை அப்பா அவள் காதுகளில் ஒரு ரகசியம் போலச் சொன்னபோது,


‘‘எனக்கொண்ணும் அதுல பிரச்சனையில்லப்பா. நான் நடேசனோட காட்டுக்குப் போகத்தான் விரும்பறேன். காட்ல இருக்கற கரடி சமூகத்துக்கு, ஒரு முன்மாதிரியான வாழ்க்கையச் சொல்றதுக்கு என் இருப்பு பெரும் ஒதவியா இருக்கும்னு நடேசன் விரும்புறார். தினம்தினம் காட்லருந்து வேத்து விறுவிறுக்க வீட்டுக்கு வந்து அடுத்தநாள் காட்டுக்குத் திரும்பறதவிட, நாங்க அங்கயே போயிடறது நல்லாயிருக்குந்தானே!’’

அம்மா சொன்னாள்,


‘‘உன் விருப்பம் போலவே மகளே, ஆனா நீ வீட்டைவிட்டுப் போய்ட்டா நாய்களையும், பூனைங்களையும், குரங்கையும் யார் பாத்துக்கறது? என்னால அந்த பாரத்தையும் சேத்துச் சொமக்க முடியாது. ஏற்கனவே உன் அப்பாவச் சுமப்பதே போதும்’’

‘‘பரவாயில்ல. அதெயெல்லாம் நானே என்னோட கூட்டிட்டுப் போயிடறேன். நாய காட்டு நாயாவும், பூனைய காட்டுப் பூனையாவும், கொரங்க காட்டுக் கொரங்காவும் நான் மாத்தி வளத்துக்கறேன்’’


அப்பாவும், அம்மாவும் அவர்களிருவரையும் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்கள். அவர்கள் இருவரும் மகளின் கையைப் பிடித்து நடேசன் கைகளில் ஒப்படைத்தார்கள். புதுமணத் தம்பதிகள் காட்டை நோக்கி நடந்ததை அவர்கள் ஒரு புள்ளியாகி மறையும்வரை கண்களில் நீர் பனிக்க, பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஏழு பூனைகளும், ஒன்பது நாய்களும் ஒரு குரங்கும் அவர்களைப் பின் தொடர்ந்தன.


ஒரு வருடம் கடந்தது.


ஒரு நாளின் அதிகாலையில் நடேசனும், அவன் மனைவியும் கைக் குழந்தையுமாய் அப்பா அம்மாவின் ஆசீர்வாதம் பெற வேண்டி வீட்டையடைந்தார்கள். குழந்தையைக் கொஞ்சி முடித்து, டீ தந்தவுடன் அம்மா, மகளை அடுக்களைக்கு அழைத்து,


‘‘உன் வீட்டுக்காரன் எப்படி இருக்காரு? உன்னை எப்படிப் பாத்துக்கிறாரு?’’ என்று கேட்டாள்.


மகள் நிதானமாகச் சொன்னாள்.


‘‘அம்மா, இவரோட மகத்துவம் இத்தனை தூரம் நான் எதிர்பார்க்கல. குடியில்ல, ஒரு பீடி சிகரெட் இல்ல, வாய் நாத்தமில்ல, அரசியல் இல்ல, இன்னொரு பொண்ணைத் தேடிப் போறதில்ல, சமையற்கட்டை மொத்தமாகவே அவர் பாத்துக்கிறார்.


அவர் சமையலோட சுவையை என்னால வார்த்தைகளால விவரிக்க முடியாது. தண்ணீர் கொண்டு வருவார், விறகு வெட்டுவார், பூ பறித்து எடுத்து வருவார். துணி துவைக்க ஒரு நாளும் நான் கஷ்டப்பட்டதில்ல. காரணம் அவர் துணி உடுத்தறதில்ல. தேன் நெறஞ்சு கெடக்கும் என் வீடு. கூடைக்கூடையாய் பழங்கள் கொட்டிக் கெடக்குது. கரையானும் கூட. அதைச் சாப்பிடப் பழகிக்கிட்டா அப்பறம் வேற எதையும் சாப்பிடத் தோணாது நமக்கு. துவையலுக்குக் கரையானைவிட இன்னொண்ணை யோசிக்கவே முடியல என்னால. இதவிட முக்கியம், குழந்தைக்குப் பாலூட்டறதத் தவிர வேறெதையும் நான் செய்யத் தேவையில்ல. எல்லாம் அவரே பாத்துக்குவார்.


அப்றம் ரொம்ப முக்கியம் அவர் என்னைச் சந்தேகப்பட்டதேயில்ல.  


அவள் சொல்லிக்கொண்டே போனாள்.


‘‘படுக்கைல?’’


‘‘அதுல அவர் பெரிய ஜாலக்காரன், ஒரு நாள் கூட என்ன சும்மா விட்டதில்ல’’

யாராலும் அவதானித்துவிட முடியாததொரு மனநிலையில், அவிழ்ந்திருந்த தன் கூந்தலைக் கட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து நடைக்கு வந்தாள் அம்மா.


தீ ஜ்வாலை மாதிரியாகியிருந்த கண்களோடு, ஈசிச்சேரில் உட்கார்ந்திருந்த தன் கணவனை ஒரு பார்வை பார்த்தாள். அப்படியே திரும்பி மகளைப் பார்த்து,


‘‘ஏண்டி, எங்கேயாவது ஒரு கரடி தேனடைகளோடு உட்காந்திருக்கறப் பாத்தா உடனே எங்கிட்ட சொல்லு. மறந்துடாத!’’


  ‘‘நிச்சயமா அம்மா, நான் என் பிரியப்பட்ட அம்மாவுக்காக இது கூட செய்ய மாட்டேனா என்றாள் புன்னகையுடன்’’


Rate this content
Log in

Similar tamil story from Drama