கற்கண்டு
கற்கண்டு


ஒன்பதாம் வகுப்பு ஏ பிரிவில், ஆசிரியை சிந்தியா, அன்றைய பாடங்களை முடித்து விட்டு, " பிள்ளைகளா ! இன்னைக்கு பாடம் எல்லாம் முடிஞ்சது. நீங்க அமைதியா வீட்டுப் பாடங்கள் இருந்தால் எழுதுங்க, இல்லை படிக்கிறதுன்னா படிங்க" என்றவாறு, மாணவர்களை மேற்பார்வையிட்டவாறு வகுப்பறையை சுற்றி வந்தார்.
கடைசி இருக்கையின் அருகில் வந்தவர், சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தார்.
"ஹமீத் ! அந்த நோட்டை இப்படி குடு" என்றவர், நோட்டினை திறந்து பார்த்துவிட்டு, "படிங்க, இல்லை வீட்டுப்பாடம் எழுதுங்கன்னு சொன்னா, படம் வரைஞ்சிட்டா இருக்க ? ப்ரின்சிபால் கிட்ட நோட்டை குடுத்துடறேன். போய் வாங்கிக்க" என்று அவர் அவ்விடத்தை விட்டு நகரவும், அடுத்த பாடவேளைக்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது. தலைமையாசிரியரை சந்திப்பது என்பது மாணவப் பருவத்தில், அனைவருக்கும் ஒரு கலக்கமான விஷயம் தானே. அப்படியே தான் ஹமீதும் உணர்ந்தான்.
ஒரு வாரம் சென்றிருக்கும். திடீரென, தலைமையாசிரியரின் காரியதரிசி வகுப்பறைக்கு வந்து, " டீச்சர், இந்த வகுப்புல இருக்க ஹமீத் அப்படிங்குற பையனை தலைமையாசிரியர் கூப்பிடுகிறார்" என்றதும், எங்கோ ஒளிந்து கொண்டிருந்த பயமும், கலக்கமும் உடலெங்கும் பற்றிக் கொள்ள, ஒருவித நடுக்கம்.
"போ ஹமீத். தலைமையாசிரியர் கூப்பிடுகிறார்" என்று தமிழாசிரியை சரோஜினி அவர்கள் சொல்ல, தலைமையாசிரியர் அறை நோக்கி நடந்தான் ஹமீத்.
சற்று நேர காத்திருப்பிற்குப் பின், அனுமதி பெற்று தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்ததும், ஏதோ கோப்பினை பார்த்துக் கொண்டிருந்த தலைமையாசிரியர், கண்ணில் இருந்த கண்ணாடி, சற்றே இறக்கி, மூக்கின் மீது வைத்துக் கொண்டு, சற்றே குனிந்து, கண்ணாடியின் வழியாக ஹமீதை பார்த்து, " நீ தான் ஹமீதா?" என்றார். "ஆமாம் சார்" என்றதும், "சரி நீ உன் வகுப்புக்கு போ" என்று அனுப்பி விட்டார்.
இது நடந்து ஒரு மாதத்திற்குப் பின் பள்ளியை ஆய்வு செய்ய கல்வி அலுவலர் வருவதாய், பள்ளி முழுதும் ஒரே பரபரப்பு. மாணவர்கள் அனைவரும் வகுப்பு வாரியாக, காலை பிரார்த்தனை கூட்டத்திற்கு நிற்க, தலைமை ஆசிரியருடன், கல்வி அலுவலரும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியர் உரை முடிந்ததும், கல்வி அலுவலர் பேச ஆரம்பிக்கையில், " பள்ளி வாயிலில் இருக்கும் வரவேற்பு பதாகையில் அழகான ஓவியம் கண்டேன். அது, கல்வி, ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரத்தை விளக்கும் அழகான படம்." "கணினியில் வரைந்த ஓவியமா ?" என்று தலைமையாசிரியரை வினவ, அவரோ, "இல்லை. எங்கள் மாணவர் ஹமீது வரைந்த ஓவியம்" என்றார்.
ஹமீது கூட்டத்திற்கு முன்னர் வரவழைக்கப்பட்டு, அவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது. அவனது திறமையை மென்மேலும் மெருகூட்ட, அவனுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும், கலை சார்ந்த டிப்ளமோ படிக்கவும் ஏற்பாடு செய்வதாக கல்வி அலுவலர் சொல்ல, மாணவர்களும் ஆசிரியர்களும் கரகோஷமிட்டனர்.
அந்த ஓவியம், அன்று வகுப்பறையில் ஹமீத் வரைந்து கொண்டிருந்ததாக, ஆசிரியயை சிந்தியா வாங்கிச் சென்ற அதே ஓவியம் தான். ஆனந்தத்தில் கண்களில் நீர் துளிர்க்க, ஆசிரியை சிந்தியாவுக்கும், தலைமையாசிரியைக்கும் தனது நன்றியை, ஆனந்தக் கண்ணீரின் மூலம் தெரிவித்தான் ஹமீது. கரடு முரடாக தெரிந்த ஆசிரியையும், தலைமையாசிரியரும், தாங்கள் கரடு முரடான கற்கண்டு என்பதை உணர்த்தியிருந்தார்கள்.