காற்றுக்கு வேலியா
காற்றுக்கு வேலியா


டிசம்பர் 3, 2019
அழகு இருந்தது. நிறம் இருந்தது! பத்தாம் வகுப்பு வரை படித்த படிப்பும் இருந்தது. ஆனால்..
எங்களுக்குள்ளே எப்போதும் சண்டைதான்! பிரச்சினைதான்! எனவே காதல் என்கிற நினைப்புக்கே இடம் இல்லாமல் இருந்த தருணம் அது. காமம் கூட காசு கொடுத்தால் வாங்கலாம். ஆனால் காதலை வாங்க முடியுமா?
சொன்ன நேரத்திற்கு வரவில்லை என்று அவள் கோபப்பட்டால் அதை கேட்க நீ யார் என்று எகிறி விடுவேன். மற்றொரு பெண்ணிடம் பேசினால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அதில் உனக்கு என்ன பிரச்சினை என்று எரிந்து விழுவேன்.
இப்படியே சாப்பாட்டு விஷயம் குழந்தைகள் விஷயம் என எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு வரும். வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லை என்றால் வாக்குவாதம் வரும். அவ்வப்போது உறவினர்கள் பிரச்சினை விசுவரூபம் எடுக்கும்.
இப்படியே போய்க் கொண்டிருந்த போதுதான் அலுவலக ‘செமினார்’க்காக வெளியூர் போனேன். பத்து நாட்கள் கழித்து தொலைபேசி வந்தது. அவளுக்கு சிறிய விபத்து என்று!
ஏனோ தெரியவில்லை. உடம்பு நடுங்கியது! உள்ளம் பதறியது! உடனடியாக ஊருக்குத் திரும்பினேன். நேராக மருத்துவமனை சென்றேன். கண்களை மூடி படுத்திருந்தாள் என் குடும்பத் தலைவி! ஆதரவாக அவள் நெற்றியில் கையை வைத்தேன். அதற்காகவே காத்திருந்தது போல் ஆவலுடன் கண்களை திறந்தாள். அந்தக் கண்களில் கண்ணீர்த்துளிகள்…!
அது வரை இருந்த அத்துணை மனக்குறைகளும் பிரச்சினைகளும் சிறகு விரித்து பறந்து போயின.
என் உள்ளமெங்கும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன!
பெற்றோரால் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்ட நான் அப்பொழுதுதான் முதன் முதலாக உணர்ந்தேன்.
என் மனைவியின் மீது தகர்க்க முடியாத காதலில் உள்ளேன் என்று நான் உணர்ந்த தருணம் அது!
“காற்றுக்கென்ன வேலி?
கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?”
வார்த்தைகள் மட்டும் இன்றி ஜானகி அம்மாவின் குரலில் எம்.எஸ்.வி யின் இசையில் உணர்வுகளை வெளிப் படுத்தும் இந்தப் பாடல் என் உள்ளம் முழுதும் பரவி வழிந்தது!
பாடலை ஒரு முறை கேட்டுப்பாருங்கள்! என் உணர்வுகளை நீங்களும் புரிந்து கொள்வீர்கள்!