Siva Kamal

Abstract Drama

4.8  

Siva Kamal

Abstract Drama

ஜெயிக்கவே முடியாதா

ஜெயிக்கவே முடியாதா

9 mins
358


கோவைக்கு வந்த சமயம் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஒரு பஸ் ஸ்டாப்பில் ஸ்வாதியைச் சந்திக்க நேர்ந்தது . ஒரு ஆட்டோவில் வந்து இவன் பக்கத்தில் நிறுத்தி இறங்கினாள் . இவன் கொஞ்சம் தடுமாறிப் போனான் .


 " என்ன ஞாபகமிருக்கா " என்று கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள் . நல்ல வளர்த்தியாக பெரிய இடத்துப் பெண் போல பட்டுப்புடவையில் கௌரவமான தோற்றத்தில் நின்றாள் . முதலில் இவனுக்கு தன் மீதான தாழ்மை உணர்ச்சிதான் தோன்றியது . பாவமாகச் சிரித்தான் .


ஆட்டோவை அனுப்பிவிட்டு இவன் பக்கத்தில் வந்து நின்றாள் . மாலை வெயிலில் அவளைப் பார்க்கக் கண் கூசியது . சென்னையில் பெரிய உத்தியோகத்திலிருக்கும் கணவருடன் வாழ்க்கை . " இங்கே ஒரு கலியாணத்துக்காக வந்தேன் . அவருக்கு லீவு கிடைக்கவில்லை . என்ன ஆச்சரியம் . பஸ் ஸ்டாப் பக்கமாக தற்செயலாகப் பார்த்தால் நீ .


“ஒரு கப் காபி சாப்பிடலாமா சிவா ? " ரொம்ப இயல்பாகவும் ரொம்ப வருஷம் பேசிப் பழகியது போலவும் நடந்து கொண்டாள் . அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது .


ஃபேமிலி ரூமில் எதிர் எதிராக அமர்ந்தார்கள் . காபிக்குச் சொல்லி அனுப்பியதும் ஒருவர் முகத்தை ஒருவர் நேருக்கு பார்க்க வேண்டியாயிற்று .எவ்வளவோ பேசவேண்டியிருப்பது போல தொடர்ந்து அவளே பேசி வந்தாள் . பேச தெரியாமல் அவன்.


"உண்மையில் நீ என்னைப் பத்தி எப்பாவாச்சும் நினைப்பியா சிவா ? "


அவனுக்கு ரொம்ப கூச்சமாகவும் கிறுகிறுப்பாகவும் இருந்தது . அவனுடைய மூத்த மகள் பிறந்த சமயம் அவளுக்கு ஸ்வாதி என்று பெயர் வைக்க ஆசைப் பட்டான் . பிறகு யாராவது - குறிப்பாக அவனுடைய மனைவி தவறாக ஏதும் புரிந்து கொண்டு நெருடலாகி விடக்கூடாதென கை விட்டு விட்டான் . இன்னும் எவ்வளவோ மனசில் வரிசையாய் வந்து நின்றன . சொல்லத்தான் வாய்வரவில்லை சிரித்தான் .


" நான் உன்னைப் பத்தியெல்லாம் தினசரி நினைப்பேன் சிவா " என்று வெகுளியாய்ச் சொல்லி விட்டு அவளும் சிரித்தாள் . சிரிப்பில் லேசாய் அவள் கண்கள் மினுங்கியதைக் கவனித்தான் . ஒன்றும் தோன்றாமல் அவன் ,


" குழந்தைங்க எத்தனை ஸ்வாதி ? " என்று கேட்டான் . அவள் உடனே சீரியஸ் ஆகிவிட்டாள் . மௌனமாகித் தலை குனிந்தாள் . சர்வர் காபி கொண்டு வந்தார். அவள் அசையவில்லை . சிவா அதிரும்படியாக அவள் கன்னங்களில் நீர்த்திவலைகள் உருண்டன . ஸ்வாதி ... ஸ்வாதி . . ப்ளீஸ் . . . என்ன இது.


டைனிங்டேபிளில் வைத்திருந்த இவன் கைமீது தெறித்து உருண்டது கண்ணிர்த்திவலை . இவன் உடம்பு சிலிர்த்தது .

அவள் சிரிக்க முயன்று இன்னும் பெரிதாய் வெடித்துக் கேவினாள்.இவன் முகத்தில் பட்டுத் தெறித்தது .


அவளுடைய முகச்சுழிப்பு திடீரென அவனுக்கு ஆறாம் வகுப்பில் படித்த ஸ்வாதியை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது .


“K.S ங்கிறது யாரு?” கையில் ஜியாமிட்ரி பாக்ஸை தூக்கிக் காட்டியபடி ஆறாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் கேட்டதும் , சிவா ஸ்வாதி ரெண்டு பேருமே எழுந்து நின்றார்கள் . கிளாஸ் பசங்க எல்லோருமே சிரித்து விட்டார்கள் . இருவரும் ஒருவரை ஒருவர் கூச்சத்துடன் பார்த்து தலையைக் குனிந்து கொண்டார்கள் ,


ரெண்டு பேருமே K.S தானா ? இது யாரோட ஜியாமிட்ரி பாக்ஸ் ? ஸ்வாதி போய் வாங்கிக் கொண்டாள் . திரும்பி டெஸ்க்கில் உட்கார வரும்போது இவனை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள் . அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.


அன்றைக்கு ஸ்வாதி பச்சை ரிப்பன் கட்டிக் கொண்டு சாமந்தி பூவும் ஸ்டிக்கர் பொட்டும் வைத்திருந்தாள் . அன்றைய நாள் வரை அவள் சிவா என்று ஒரு பையன் தன் கூடப் படிப்பதாக நினைத்துக்கூடப் பார்த்ததில்லை .


ஏனென்றால் அவள் எப்பவும் - எல்லா மாதப்பரீட்சை களிலும் முதல் ரேங்க் வாங்குகிறவள் . இவனோ இருபது இருபத்திரண்டில் திணறிக்கொண்டு நிற்கிறவன் . ஏணி வச்சாலும் எட்டுமா ?


ஆனால் என்ன ஆச்சென்று அவனுக்கே புரியவில்லை . அந்த நாள் முதல் அவன் பழைய சிவாவாக இல்லை .


எப்பவும் பள்ளிக்கூடம் விட்டாலும் வீடு சேர்ந்து புத்தகப் பையை வாசலில் நின்றபடிக்கே உள்ளே விட்டெறிந்து விட்டு தெருப்புழுதியில் இறங்கினால் ராத்திரி பனியன் கம்பெனிக்குப் போனவர்கள் திரும்புகிற சத்தம் கேட்கும் வரை குதியாளம்தான் . ' கள்ளன் போலீஸ் ' முதற்கொண்டு ' ரைட்டா - தப்பா ' வரைக்கும் சட்டை டவுசர் அழுக்காவது கூட தெரியாமல் விளையாட்டு விளையாட்டுத்தான் .


அம்மா வந்து அவனைத் தேடிப்பிடித்து முதுகில் நாலு வப்பு வச்சு சாப்பிட இழுத்துப் போகிற வரை விளையாட்டு . சாப்பிட்ட மறுநிமிஷம் தூங்கி விடுவான் . காலையில் தார்க்குச்சி போட்டுத்தான் எழுப்ப வேண்டும் . பாதிநாள் குளிக்க மாட்டான் . கம்மாயில போயி குளிச்சிட்டு வாடா . ம்கூம் . கிணத்துல பம்பு செட் ஓடுது போயி குளிச்சிட்டு வாடா . ம்கூம் . அப்படியே உறக்கச் சடவு கலையாமல் உட்கார்ந்திருப்பான் . பிறகு அவசரமாய் செங்கல்லை ராவி பல்லில் ரெண்டு இழுப்ப இழுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்து விடுவான் . ஸ்கூலுக்குப் போணுமே .


அந்த சிவாதானா இவன் ? சாயந்திரம் வந்ததும் படிக்க உட்கார்ந்தால் படிப்பு - ஒரே படிப்பு . ராவெல்லாம் படிப்பு . காலையில் அவன் குளிப்பென்ன ? நெற்றியில் விபூதி பூச்சென்ன ? அடக்கமான பேச்சென்ன ? அம்மாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் ஒரு பக்கம் பயலுக்கு அக்கற வந்துருச்சே என்று சந்தோஷமாகவும் இருந்தது .


கால் வருடப் பரீட்சையில் இருப்பதில் இருந்து ஒறே தாவாகத்தாவி எட்டாவது ரேங்க் . அடுத்த மாதாந்திர பரீட்சையில் மூணாவது ரேங்க் .வசந்தி டீச்சரே அவனை கூப்பிட்டு " ஏலே . பொய் சொல்லாமச் சொல்லு . காப்பி தானே அடிக்கே” என்று கேட்கும் படியாக வகுப்பையே அசர வைத்தான்.


ஸ்வாதி ரெண்டாவது ரேங்க் . அவன் மூனாவது ரேங்க் . வகுப்பறையில் தொங்கவிடப்படும் ' ரேங்க பட்டியலில் ரெண்டாவதாக சிவப்பு மையில் ஸ்வாதியின் பெயர் . அதை ஒட்டி மூணாவதாக ஊதாமையில் இவன் பெயர் பட்டியல் தொங்கவிட்டதும் அவனுக்கு ரொம்ப கூச்சமாகிவிட்டது . ஸ்வாதி பெயரும் அவன் பெயரும் பக்கத்தில் பக்கத்தில் அவளை ஏறெடுத்துப் பார்க்கவும் வெக்கமாக இருந்தது . அதே சமயம் உள்ளுக்குள் சந்தோஷம் பிடுங்கியது .


அதற்குப் பிறகு மாதங்கள் வருஷங்கள் வகுப்புகள் மாறின . ஆனால் அவன் இடம் மட்டும் மாறவே இல்லை . ஸ்வாதி என்கிற அந்த சிவப்புமை எழுத்துகளுக்குக் கீழே ஊதாவின் இவன் பெயர் . அவள் முதல் ரேங்க் வந்தால் இவன் ரெண்டாவது . அவள் ரெண்டாவதானால் இவன் மூணாவது . பத்தாம் வகுப்பு வரையிலும் இந்த லிஸ்ட் மாறவே இல்லை . பையன்களின் கேலி பொறுக்க முடியவில்லை .


ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி அவள் பெயரைத் தாண்டிப் போகமுடியாமல் அவனுடைய மார்க்குகள் நின்றன .அவன் அம்மா கூட “ஏன்டா ஒரு பொம்பள புள்ள கிட்டயா தோத்துப்போற” என்று கிண்டலடித்தார்.


 அந்தப் பாழாப்போன இங்கிலீஷ்தான் அவன் கழுத்தை அறுத்தது . பிள்ளையாருக்கு எத்தனையோ நேத்திக்கடன் போட்டும் அதிகாலையில் தோப்புக்கரணங்கள் போட்டும் அவர் மனம் இரங்கவில்லை . பிள்யைாருக்கு கணக்கு மட்டும் தானே வரும் என்கிற சந்தேகம் ஒருநாள் வர பக்கத்து ஊரிலிருந்த சர்ச்சுக்குப் போய் " ப்ளீஸ் ஹெல்ப் மீ இங்க்லீஷ் ஒன்லி " என்று யேசு நாதரையும் ரெண்டு மாசம் விடாமல் முட்டங்கால் போட்டுத் தொழுது பார்த்தான்.. ம்கூம்.... இங்கிஷின் இஸ் வாஸ்கள் தவிர வேறு எதுவும் அவன் மண்டைக்குள் தங்க மறுத்தன . உயிரை வெறுத்து ' ஸ்டோரி ' களையும் ' பாரா கிராப்பு’ களையும் மனப்பாடம் செய்தான் . என்ன படித்து எழுதிப் பார்த்துவிட்டுப் போனாலும் பரீட்சையில் மறந்தது .


இப்படித்தான் ஸ்வாதி ஒவ்வொரு ' டெஸ்ட்டி லும் முந்திக்கொண்டிருந்தாள் . அவ்வப்போது இவன் பக்கம் ஒரு லேசான புன்னகையை வீசி ' அவ்வளவுதானா ' என்று கேட்பது போல அவள் பார்ப்பாள் . இவனுக்கு எல்லாம் வெறுத்துவிட்டது . கேவலம் ஒரு மாதப் பரீட்சையில்கூட அவளை ' பீட் ' பண்ண முடியவில்லை .


இவனுடைய வேண்டுதல்கள் பத்தாம் வகுப்பில் வேலை செய்ய ஆரம்பித்தன . திடீரென ஒரு மாசம் அவள் பள்ளிக் கூடமே வரவில்லை . " பெரிய மனுஷி ஆயிட்டாளாம் " என்று பையன்கள் கமுக்கமாகப் பேசி கமுக்கமாகச் சிரித்துக் கொண்டார்கள் . சிவாவுக்கு லேசான கிறுகிறுப்பு வந்து வந்து போனது . எப்போடா அவள் திரும்ப வகுப்புக்கு வருவாள் என்று மனம் தேட ஆரம்பித்து விட்டது .


ஒரு மாதம் கழித்து அரைத்த மஞ்சளாக பொன்னாக மின்னும் தகதகப்புடன் வந்தாள் . அவளைப் பார்க்கவே கண் கூசுகிற மாதிரி ஒளியோடு வந்தாள் . சிவாவுக்கு மனசு நடுங்கியது . ஆனால் அவளுக்கோ யாரையும் ஏறெடுத்துப் பார்க்கவும் வெட்கம் பிடுங்கியது . யாரைப் பார்த்தாலும் மனசு படபடத்தது . வகுப்பில் குனிந்த தலை நிமிரவே இல்லை . எதிலும் கவனம் சிதறியது .


அடுத்து வந்த ரிவிஷன் டெஸ்ட்டில் அவளுக்கு முதல் அடி விழுந்தது . சிவா அவளைத் தாண்டி மேலே போய் விட்டான் . முதல் ரேங்க் . அவள் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டாள். இனி அவ்வளவுதான் . தொலைந்தாள் ஸ்வாதி என்று சிரிப்பு வெடித்து வந்தது அவனுக்கு .சந்தோசம் தாங்கவில்லை அவனுக்கு.


ஆனால் மறுநாளே அவள் மீது இரக்கமும் பரிவும் சுரந்தது . ரெண்டாவது ரேங்க்காவது அவளுக்கு வராமப் போச்சே என்று கவலையாக இருந்தது . வகுப்பில் அவளது வருத்தமான முகத்தைப் பார்த்ததும் அடுத்த பரீட்சையில் அவளுக்காக தான் எல்லாப் பாடங்களிலும் வேண்டுமென்றே பெயிலாகிவிட வேண்டும் என்றெல்லாம் கூட எண்ணினான் . இருந்தாலும் முழுப் பரீட்சை நெருங்க நெருங்க படிப்பில் முழு கவனம் , திரும்ப அவனே முதலாவதாக வந்தான் ,


 நீண்ட கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்த போது பதினோராம் வகுப்பில் இருந்தார்கள் . ஸ்வாதியுடன் வலிய போய் இவன் பேசி வரலானான் . பாவம் தோற்றுப்போனவள் அல்லவா . ஆனால் முதல் மாதப் பரீட்சையில் ஸ்வாதி ரெட்டிப்பு வேகத்துடன் அவனைத் தூக்கி எறிந்து விட்டு முதல் இடத்தைப் பிடித்து விட்டாள். அவன் ரெண்டாவது . அதே சிவப்புமை எழுத்துக்குக் கீழே அவன் பெயர் மறுபடி .


ஆடிப்போனான் சிவா , திடீரென்று ரொம்ப வயசாகிப்போய் கிழவனாகிவிட்டது போல கை கால் வராமல் போய்விட்டது . மறுபடியும் ஸ்வாதியின் ராஜ்ஜியம் ஆரம்பமாகியே விட்டது . ராவும் பகலும் படித்துப் போராடிப் போராடியும் அந்தச சனியன் பிடிச்ச ஆங்கிலத்தால் அவன் தோற்றுத் தோற்று அவளுக்கு நேர் கீழே வந்து வந்து நின்றான். இவளை எப்படி வெல்வது என எந்நேரமும் யோசனையிலே கிடந்தான்.


ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாதி வருடத்தில் ஸ்வாதியுடைய அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது . அவள் டி . சி . வாங்கிக்கொண்டு பாதியிலேயே போய்விட்டாள் . மழையடித்து ஓய்ந்த மாதிரி ஆகிவிட்டது . இவனுக்குள் கேட்டுக் கொண்டிருந்த இரைச்சல் எல்லாம் அடங்கி பெருத்த அமைதி வந்து கவிந்தது . இனி எதிரி யாருமில்லை . அவனே முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டு கடைசி வரை ஆண்டான் . பள்ளியில் முதல் மாணவனாகத் தேறி வெளி வந்தான் .


கல்லூரியில் சேர்ந்தான் . ஹாஸ்டலில் அறையின் ராத்திரிக் கனவுகளில் ஸ்வாதி வர ஆரம்பித்தாள் . தனிமை வாய்க்கும் சந்தர்ப்பங்களில் அவளே மனசை ஆக்கிரமித்தாள் . யாரும் இல்லாத போது 'ஸ்வாதி... ஸ்வாதிக்குட்டி...' என்று வாய்விட்டுச் சொல்லிப் புளங்காகிதம் அடைந்தான் .


ஒரு சாயங்காலம் ஹாஸ்டலில் பக்கத்து ரூம் பைய னோடு பேசிக்கொண்டிருந்தான் . பிறகு தன் அறைக்கு வந்து படித்துவிட்டு ராத்திரி படுத்தான் . திடீரென அந்தப் பையனது ஊர்ப்பெயர் எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என்ற ஞாபகம் கூர்மைப்பட்டு - அட - அது ஸ்வாதி பாதியில் மாற்றிப்போன ஊரல்லவா - என்று எழுந்து அந்நேரமே அவன் ரூம் கதவைத் உன்னான் . “என்ன தலைவா?” என்று அவன் கதவைத் திறந்தான் .


 “ உங்க ஊர் ஸ்கூல்ல போன வருஷம் பள்ளி முதல் மார்க் வாங்கினது யாரு ? " அந்தப் பையன் விநோதமாக இவனை ஒரு கணம் பார்க்க அவன் பதிலை எதிர்பார்த்து இவன் மனம் திக்திக்கென்று அடிக்க “ 


K.S.... ஸ்வாதின்னு சொல்லி ஒரு பொண்ணு . அவ தான் ஃபஸ்ட் மார்க் . ஏன் என்ன விஷயம் ? "


" அவ எத்தனை மார்க் ? "


அவன் மார்க்கைச் சொன்னதும் இவன் கைகால் சோர்ந்து தள்ளாடி விட்டது . ஆம் , அவனைவிட பதினைந்து மார்க் அவள் அதிகம் எடுத்து விட்டாள் .


அறைக்கு திரும்பி வந்து படுக்கையில் இற்று விழுந்தான் . ச்சே ...


மறுநாள் சாயந்திரம் அந்தப் பையனே தேடிவந்து , என்ன ஏதென்று விசாரித்தான் . சும்மா கேட்டேன் . அவ என் ஸ்கூலில் படிச்சவ என்று சுருக்கமாக முடித்து விட்டான் . ஆனால் அந்த பையன் . கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் . அந்த ஸ்வாதிங்கிற பொண்ணு வருகிற வரைக்கும் இந்தப் பையன்தான் அவர்களுடைய ஸ்கூலில் முதல் ரேங்க் . அவள் வந்த முதல் மாதப் பரீட்சையிலேயே அந்தப் பையனை " ம் . . . இடத்தைக் காலி பண்ணு " என்று - இறக்கி விட்டாள். அவள் தான் முதல் ரேங்க் . அவன் ரெண்டாவது ரேங்க் . கடைசி வரை அவனும் போராடி பார்த்தான் . நடக்கவில்லை . பள்ளி இறுதித் தேர்வது ஸ்வாதி ஃபஸ்ட் . அவன் ரெண்டாவது .


சிவாவுக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை . தான் பேசிக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பையன் பேசிக் கொண்டிருக்கிறானா என்று குழப்பமாய் கண்ணை இருட்டியது போலிருந்தது . சரி சரி போதும் உன் கதை என்று அவனை அனுப்பி வைத்து விட்டான்.


ஒரு பத்து நாள் சுரத்தில்லாமல் இருந்தான் . ச்சே...என்று அடிக்கடி தானே சொல்லிக் கொண்டான்.பிறகு நாளாவட்டத்தில் படிப்பில் கவனம் திரும்பியதும் எல்லாம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.


படிப்பில் மட்டுமின்றி பேச்சுபோட்டி,கவிதைப்போட்டி,கட்டுரைப்போட்டி என்று பலவற்றிலும் பங்கு கொண்டான்.பேச்சுப்போட்டியில் கல்லூரியில் அவனை மிஞ்ச ஆளின்றிப் போனது.


பல்கலைக்கழக பேச்சுப்போட்டிக்கு தேர்வு பெற்று இறுதிப்போட்டிக்கு சென்னை சென்றான். ஆனால் விதி யாரை விட்டது. பெண்கள் கல்லூரியின் சார்பாக வந்து மேடையேறி சண்டப் பிரசண்டம் செய்து முதல் பரிசை தட்டிச் சென்றாள் ஒரு பெண். இவனுக்கு வழக்கமான இரண்டாவது பரிசு தயாராக இருந்தது. பரிசு வாங்கும்போது இவனைப் பார்த்துச் சிரித்த அவளின் சாயலில் ஸ்வாதி இருந்தாள்.


பரிசாகக் கிடைத்த புத்தகத்தையும் சான்றிதழையும் சென்னை பஸ்ஸ்டாண்டில் வீசி எறிந்துவிட்டு பஸ் ஏறினான். அத்தோடு எந்தப் போட்டியிலும் பங்கெடுப்பதை விட்டுவிட்டான். படிப்பைத் தவிர வேறு எதிலும் சிந்தை செலுத்த மறுத்துவிட்டான். பட்டம் வாங்கி இந்த வேலை கிடைத்தது . பிறகு கல்யாணமானது. ரெண்டு பிள்ளைகள் பிறந்தது . பொருளாதார நெருக்கடிகள் என்று வாழ்க்கை தன் போக்கில் கடகடா கடகடா என்று ஓடிக்கொண்டிருந்தது . அந்த ஸ்வாதியா இது என்கிற வியப்பே இன்னும் அடங்காதபோது இந்தக் கண்ணீர் துளிகள் .


“ஆதிலட்சுமியைப் பார்த்திருக்கே இல்லே நீ ?”


சிவா ஆதிலட்சுமியின் அகண்ட கண்களை மட்டும் நினைவு கொண்டான் . ஸ்வாதியின் சாயல் அப்படியே அவளிடம் இருக்கும் . கண் மட்டும் பெரிசு .எட்டாவது படிக்கும் போது விரிய விரியப் பார்த்தபடி ஸ்கூல் ஆண்டு விழாவன்று ஸ்வாதியின் இடுப்பில் உட்கார்ந்தபடி முறுக்குத் தின்று கொண்டிருந்தாள் .


"அவளை ரெண்டாந்தாரமாக கட்டித் தரச்சொல்லி என் வீட்டுக்காரர் கேட்கிறார் . மூனு வருஷம் தானே ஆகுது . இன்னும்கூட வெயிட் பண்ணலாம்.பேபிக்கு சான்ஸ் இருக்குன்னு டாக்டர்ஸ் எல்லாம் சொல்றாங்க . ஆனா . . . . அவர் . . ." மறுபடியும் அவளுக்கு மூச்சுத் திணறி அழுகை வந்தது .


ஸ்வாதியின் அம்மா ரெண்டு பேரையும் ஏகமாக திட்டினாள் . " என்னடி ரெண்டு பேரும் சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அவர் ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கப் போறது உறுதி . எவளோ ஒருத்தி வந்து உன்னை ராஜ்ஜியம் பண்றதுக்கு நம்ம ஆதிலட்சுமி வந்து வாழ்ந்துட்டுப் போனா என்னங்கிறேன்? நகையும் வேண்டாம் . நட்டும் வேண்டாம் . எல்லாச் செலவும் நானாச்சுன்னு சொல்றாருடி . கொஞ்சம் யோசிச்சுப் பாரு . . . உங்க அப்பாவா இருக்காரு எல்லாம் பாத்து செய்ய? "


திடீரென்று ஸ்வாதி சிவாவின் கைகளைப் பற்றிக்கொண்டு “ஏன் சிவா, எங்கள மாறி பொண்ணுங்க எல்லாம் ஜெயிக்கவே முடியாதா?” என்று கலங்கிய குரலில் கேட்டாள்.அவன் நிலைகுலைந்து போக கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் மட்டும் ஸ்வாதியின் கையில் பட்டுத் தெறித்தது.


வாழ்நாள் எல்லாம் முதல் ரேங்க் கப்பும் மெடலுமாய் வாங்கிய தன் ஸ்வாதி ஒன்றாம் வகுப்பில் இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் ஜெயித்த தன் ஸ்வாதி தோற்றுப்போய் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்கிறாள், 'எங்கள மாறி பொண்ணுங்க எல்லாம் வாழ்க்கையில ஜெயிக்கவே முடியாதா சிவா?' என்றதற்கு ஒரு ஆணாக தலை குனிந்து நின்றான் சிவா.


கிளம்பும்போது கண்ணுக்கு இட்ட மை கரைந்து பக்கங்களில் பரவியிருக்க ஈரமான இமைகளை தாழ்த்தி வரட்டுமா என்பது போல ஸ்வாதி தலையை சாய்த்துச் சிரித்தாள் . ஸ்வாதியை அனுப்பிவிட்டு சிவா கோவை பஸ் ஸ்டாண்டில் சுற்றிச் சுற்றி வந்தான் . அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.


ஒரு கடை வாசலில் நின்றான் . உடனே வேண்டாம் என்று சலூன் பக்கம் போனான் . இல்லை . மறுபடி வேறு ஒரு பக்கம் போவான் . டவுண் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுற்றி வருவான் . பெஞ்சில் சற்று உட்காருவான் . அவனுக்கு எங்கே வந்தோம் எங்கே போகணும் என்றே மறந்து விட்ட து .


Rate this content
Log in

Similar tamil story from Abstract