இதுவும் கடந்து போகும்!
இதுவும் கடந்து போகும்!


நான் சோர்வடைந்த தருணங்களையும் அதற்கான காரணங்களையும் யோசித்துப் பார்க்கிறேன். இயலாமை, பயம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்றவைதான் மனச் சோர்வுக்கான மூல காரணங்கள் என்று தோன்றுகிறது.
சிறிய வயதில் யார் வீட்டுக்காவது போய் விட்டு வந்தால் ‘நாம் வந்த உடன் அவர்கள் வீட்டில் ஏதாவது பொருள் காணாமல் போய் விடுமோ? அப்படிப் போய் விட்டால் நம்மை சந்தேகப் படுவார்களோ?’ என்று எனக்கு ஒரு பயம் தோன்றும். பயம் நீடிக்கும் போது மனச்சோர்வு ஏற்படும்.
ஒரு முறை என் மூத்த அண்ணனிடம் இதைக் கூறினேன். அவர் சொன்னார்: ‘இந்த பயமும் சோர்வும் தேவை இல்லாதது. நீ நினைப்பது போல் நடப்பதற்கான சாத்தியக் கூறு ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட இல்லை. அப்படியே நடந்தாலும் நம் மீது சந்தேகப் பட வாய்ப்பில்லை. அப்படியே சந்தேகப் பட்டால் அதை எதிர்கொண்டு நிரூபித்து அவர்கள் முகத்தில் கரி பூசுவோம்’! என்றார். அதன் பிறகு என் அண்ணன் கொடுத்த அந்த தைரியத்தால் எனக்கு அத்தகைய எண்ணங்கள் குறைந்து மறைந்து போயின.
ஐந்தாம் வகுப்பு வரை முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படித்தேன். ‘நல்லா படிக்கிற பையன்’ என்று டீச்சர்களிடம் பெயர் எடுத்தவன். ஆறாம் வகுப்புக்கு யூனியன் உயர்நிலைப் பள்ளியில் எழுத்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அதில் 6A இங்கிலீஷ் மீடியம் வகுப்பு. எழுத்துத் தேர்வில் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் நான் இருந்ததால் ஆங்கில மீடியத்தில் போட்டார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
வகுப்புகள் தொடங்கின. நாட்கள் சென்றன. கணிதம், விஞ்ஞானம், சமூகம், என எல்லாமே ஆங்கிலத்தில்! பாடம் புரியவில்லையே என்ற ஏமாற்றம் ஒரு புறம்.முறுக்கிய மீசையுடன் பயம் தரும் (ஒரு சில) ஆசிரியர்கள் மறு புறம்.
மிகவும் சோர்ந்து போனேன். உற்சாகமில்லை. எதிலும் ஆர்வமில்லை. பள்ளி செல்ல பிடிக்கவில்லை. ஒருநாள் இடைவேளை நேரத்தில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.
என் அண்ணன்மார்கள் நிறைய சமாதானம் சொன்னார்கள். ’பாடம் புரியாமல் நீ ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை. இன்னொரு வருஷம் படித்துக் கொள்ளலாம்’ என்றார்கள். பள்ளி சென்று வர வாகனம் ஏதாவது ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.
என் அக்காவின் கணவர் என் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். தைரியமானவர். அவரும் என்னிடம் பேசினார். இடைவேளையில் ஓடி வந்து விட்டதை கூறினேன். ‘அதைப் பற்றி நீ கவலைப் படாதே. நான் உன் பள்ளிக்கு வருகிறேன். உன் ஆசிரியர்களைப் பார்த்து பேசுகிறேன். அவர்கள் உன்னிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்’ என்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினார்.
அடுத்த நாள் என்னை அவருடன் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். என் வகுப்பு ஆசிரியரை சந்தித்து என் மனச்சோர்வையும் அதற்கான காரணங்களையும் எடுத்துக் கூறினார். ஆசிரியரும் என்னிடம் ஆறுதலாக பேசினார். என் மனத்தில் சற்று தெம்பு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சோர்வு நீங்கியது. சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
வாழ்க்கையில் அவ்வப்போது சோர்வடையும் படியான நிகழ்வுகள் வருவது இயல்பு. காலமும் நேரமும் நம் மீது அக்கறை கொண்ட பெரியவர்களின் கலந்தாலோசனையும் அந்த சோர்வினை அகற்றும்.