sangeetha muthukrishnan

Drama

4.6  

sangeetha muthukrishnan

Drama

இறைவனின் சிரிப்பு

இறைவனின் சிரிப்பு

2 mins
216


மதுமிதா கையில் சாப்பாட்டு கூடையும் தோழில் புத்தக பையையும் சுமந்து கொண்டு கண்களில் மிரட்சியுடன் வழியையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா வரும் சுவட்டையே காணோம். பயம் பிடுங்கித்தின்றது. பள்ளியில் சில மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். அழுகை முட்டிக்கொண்டு கண்களை விட்டு வெளியேற துடித்தது. அதோ அம்மா வருவது தெரிந்தது. பக்கத்தில் வர வர அழுகை திமிறி க்கொண்டு வெளியேறியது.

"அச்சோ! அதுக்குள்ள அழுதுட்டியா? தாத்தாவுக்கு திடிர்னு ஒடம்பு சரி இல்லை. ஆஸ்பத்திரியில உக்கார வச்சிட்டு உன்ன கூட்டி போக ஓடியாரன். நீ அதுக்குள்ள அழ ஆரம்பிச்சுட்ட. சரி வா போய் தாத்தாவ கூட்டிட்டு வீட்டுக்கு போய்டலாம்" கண்களை துடைத்து விட்டு அம்மா கூறியபோது, "பயமா இருந்துச்சு மா எல்லாரும் போய்ட்டாங்க தனியா இருந்தேன் மா" என்றாள் கேவிக்கொண்டே.

அம்மா சிரித்துக்கொண்டே "அப்போ அதோ அந்த பிள்ளையார் கிட்ட போய் உக்காந்துக்கோ நா வர நேரம் ஆச்சுன்னா. அவரும் பாவம் தனியா தானே இருக்காரு" என்றாள்.

மதுமிதா பிள்ளையாரையே பார்த்து கொண்டு சென்றாள். அன்றிலிருந்து பிள்ளையார் அவள் நண்பரானார். அம்மா வர தாமதமாகும் நேரத்தில் பிள்ளையாருடன் நேரம் செலவழிப்பது அவளுக்கு பிடித்திருந்தது. அவள் எவ்வளவு பேசினாலும் அவரின் ஆணை முகம் ஏனோ உர்ர்ர் என்றே இருந்தது.

ஆனாலும் மது சளைக்கவில்லை தினமும் என்னென்ன நடக்கிறதோ அதை அவரிடம் சொல்ல அவள் தவறுவதில்லை. அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளி மாறி சென்றாலும் அதிலிருந்து கல்லூரி படிப்பு படிக்கச் சென்றாலும் நாளொன்றில் ஒரு முறையாவது பிள்ளையாரை பாராமல் அவரிடம் பேசாமல் இருந்ததில்லையவள்.

"இந்த பையன பிடிச்சிருக்கா சொல்லு" அம்மாவின் கேள்விக்கு சாயந்திரம் சொல்லறேன் என்று விட்டு பிள்ளையாரை பார்க்க சென்றாள்.

"எனக்கு ஓகேன்னுதான் தோணுது விநாயகா! மத்த மாப்பிள்ளைலாம் வெளிநாடு வெளியூர்னு வராங்க. எதுக்கு அதெல்லாம். இந்த பையன் ரெண்டு ஊரு தள்ளி தான். தினமும் உன்ன பாக்க முடியுமானு தெரியல ஆனா நேரம் கிடக்குறப்பல்லாம் ஓடி வந்துரலாம்".

"காடு தோட்டம் தான் வேலை. கம்ப்யூட்டர் வேலை இல்ல வெளியூர் போக மாட்டான். என்ன சொல்லற"பிள்ளையார் இன்னும் உர்ர்ர் என்று இருப்பது போல தான் இருந்தது. " சரியான சிடு மூஞ்சி" என்றுவிட்டு அம்மாவிடம் சம்மதம் சொன்னாள்.

நிச்சயம் முடிந்து "ஒரு வாரம் தான் இருக்கு கல்யாணத்துக்கு. எல்லாரும் வர போக இருப்பாங்க. எங்கயும் போகாத வீட்டை விட்டு" என்று அம்மா கண்டிப்பாக சொல்லி விட்டாள். மாப்பிள்ளை தினமும் போனில் பேச ஆரம்பித்துவிட்டார். பிள்ளையாரிடம் பேச வைத்திருந்ததை எல்லாம் அவருடன் பேச ஆரம்பித்துவிட்டாள் மது. காலெண்டர் பிள்ளையார் கூட கண் இடுக்கி பார்ப்பது போல இருந்தது.

"அம்மா கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவ போய் பிள்ளையார் பாத்துட்டு வரலாம் மா"

"சரிம்மா நீயும் ஒரு நாள் கூட அங்க போகாம இருக்க மாட்ட. போலாம் சாயந்தரமா" என்ற அம்மாவை கட்டி பிடித்து கொண்டாள்.

"எது பாப்பா தினமும் போற அரசமரத்தடி பிள்ளையாருங்களா? அது களவு போய்ட்டுதுங்களே. ரெண்டு நாள் முன்னாடியே ராவோட ராவா யாரோ எடுத்துட்டு போய்ட்டாங்க" என்றார் தோட்ட வேலை செய்யும் மாரியப்பன்.

மதுவுக்கு அழுகை வந்தது. நான் போறதுக்கு முன்னாடி நீ முந்திக்கிட்டியா? நெனைச்சப்பல்லாம் வந்து பாக்கலாம்னு சொன்னேனே அதுக்கு கூட இனி வழி இல்லையா. கடவுளுக்கும் ஈகோ இருக்கும் போல என்று மனதுக்குள்ளே பிதற்றி கண்ணை கசக்கி கொண்டாள்.

திருமணம் முடிந்து விருந்து மருந்து என்று அலைக்கழிப்பு அடங்கி இருந்தது. தோட்டத்தில் வேலையாக சென்றிருந்த கணவனுக்கு மதிய சாப்பாடு எடுத்து செல்ல வந்த வேலையாளோடு தானும் செல்வதாக சொல்லி கிளம்பினாள் மது.

சாப்பிட்டு முடித்து வெயில் தாள தோட்டம் சுற்றி பார்க்க சென்றார்கள். "இது தான் புதுசா கட்டுன கோயில். சின்னதா பிள்ளையார் மட்டும் வச்சு கட்டிருக்கோம். முன்னாடி ஒரு துளசி மாடம் இருக்கு. போன வாரம் தான் கட்டி முடிச்சோம்" என்ற கணவனின் வார்த்தைகள் காதில் விழ விழ தேய்ந்து போனது. தோட்டக்கார முனியாண்டி "திருட்டு பிள்ளையார் வேணும்னு எடுத்துட்டு வந்ததே அம்மா ஊர்ல இருந்து தானுங்களே" என்றார்.

அந்த சின்ன நான்கு சுவற்றிற்குள் வெட்ட வெளி விட்டு வந்து அமர்ந்திருந்தது அவளின் நண்பர்தான். கண்களில் ஆச்சரியத்தோடு லேசாக கண்ணீர் கசிய கையெடுத்து வணங்கிய போது பிள்ளையாரின் உர்ர் முகம் நேசத்தோடு சிரித்தது போல இருந்தது. பக்கத்து தேவாலயத்தில் இருந்து "நான் உன்னை விட்டு விலகுவதில்லை; நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை" பாடல் ஒலித்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama