இசக்கி
இசக்கி


அந்தக் கடை சரக்குந்து வந்து செல்லும் முதன்மை வீதி ஓரத்தில் இருந்தது. அந்த வீதிவழியாகத்தான் உப்பு மூட்டை ஏற்ற வரும் சரக்குந்து ஓட்டுநர்கள் நிறுத்தி இசக்கி கடையில் தோசை சாப்பிட்டுச் செல்வர்.. அதற்கு இசக்கி கொடுக்கும் மூன்று வகையான சட்னி, சாம்பார் என அவ்வளவு ருசியாக இருக்கும். வாழை இலையில் பரிமாறுவாள். சாப்பிட்டு விட்டு வீட்டிற்கும் வாங்கிச் செல்வர்.
கடையில் மாலையுடன் கந்தசாமி சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவனுக்குப் பழைய நினைவுகள் வந்தன. முத்து குளிக்க முயல்தீவு சென்றது நினைவுக்கு வந்தது. நாட்டுப் படகில் கடலில் அலைகளின் நடுவே நண்பனுடன் கருவாடு தின்னுட்டு கடல் தண்ணீரில் கை நனைத்து விளையாடியது நினைவுக்கு வந்தது.
கிடைத்தவேலையை எங்குமே இருவராகச் சேர்ந்து செய்வதும் பார்ப்பவர்கள் ராம் லட்சுமண் என கிண்டல் செய்ததும் கண்ணில் கனவாக ஆடியது. பார்த்து வந்த விவசாயத்தை ஓய்வு நேரங்களில் பார்த்துவிட்டு மீதி நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலுடன் உப்புத் தண்ணீரில் நின்று உற்பத்தியாகும் உப்பைக் குவித்து வைக்கும் வேலையைக் கந்தசாமியும், முனுசாமியும் பார்த்து வந்தனர்.
இசக்கி உப்பளத்தில் குவித்து வைத்த உப்பைக் கூடைகளில் சுமந்து கொட்டகைகளில் கொண்டு சேர்ப்பாள். ஒரு கூடை உப்பே 20 முதல் 25 கிலோ இருக்கும். ஒரு நாளில் 250 கூடை உப்பு சுமப்பாள். கூலியும் குறைவுதான். உப்பளத்தில் வேலை பார்த்ததால் தோல் நோய் வந்து இசக்கி அதற்கான சிகிச்சை எடுத்தாள்.
அவர்களது சேமிப்பில் பாதி செலவாகி விட்டது. கந்தசாமியும் உப்பளத்தில் வேலை பார்த்ததால் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகினான்.
இசக்கிக்கு இரண்டு குழந்தைகள் துாத்துக்குடி வேலன் நகர் பள்ளியில் படித்து வந்தனர். திடீரென்று கந்தசாமிக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமல் போகவே அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதில் அவனது ஒரு சிறுநீரகம் கெட்டுப் போனதைக் கண்டுபிடித்தனர். அதற்கு சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்றும் அதற்கு சென்னைக்குத்தான் செல்ல வேண்டும் என்றதும் இசக்கி குடும்பத்தினர் கலங்கிப் போய் விட்டனர்.
சென்னை அரசு மருத்துவமனையில் அப்பாவைச் சேர்த்து சங்கர் உடனிருந்து கவனித்தான். பதினைந்து நாட்கள் சென்ற நிலையில் திடீரென்று கந்தசாமியின் உடல் உறுப்புகள் செயல் இழக்கத் தொடங்கியது மருத்துவர் சங்கரிடம் உன் அப்பா பிழைப்பது கடினம் என்றார்.
இந்த பதினைந்து நாள் நாங்களும் முடிந்த அளவு சிகிச்சை அளித்து விட்டோம். இனி ஆண்டவன் தான் கருணை வைக்க வேண்டும். சங்கர் அவனது குலதெய்வ சாமியை மனசார வேண்டி ‘அப்பாவைக் காப்பாற்று‘ என்று மனதிற்குள் வேண்டினான். ஆனால், விதி முடியும் போது ஆண்டவன் அழைப்பான் என்பது கணக்கு.
கந்தசாமி கண் மூடிய செய்தி அவன் மகனை நிலை குலைய வைத்துவிட்டது. அவன் அம்மாவிடம் அப்பா தவறிய செய்தியை ஊரிலுள்ள அண்ணாச்சி மளிகைக் கடை தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க அம்மாவும், தங்கையும் ஓவென அழத் தொடங்கி விட்டனர்.
அப்பா உடலை ஊருக்கு எடுத்து வர அம்மா சொல்ல சங்கரோ பணம் இல்லையே என்ன செய்வது என்று கேட்க எப்படியாவது எடுத்து வா! என்று கூறினாள்.
அழுது அழுது களைத்துப் போன சங
்கர் சிகிச்சை அளித்த டாக்டரிடம் உதவி கேட்டான். அவர் செஞ்சிலுவைச் சங்கம் அளிக்கும் இலவச அமரர் ஊர்தி சேவையைப் பயன்படுத்த ஆலோசனை கூறி கைச் செலவுக்கு 2000 பணமும் கொடுத்து உதவினார். அவர் கூறியபடி அப்பா உடலை ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தான்.
அப்பா உப்பளத்தில் வேலை பார்த்துத்தான் இந்த நோய் தாக்கி இறந்தார். நீங்கள் அந்த வேலையை விட்டு விடுங்கள்! நான் புத்தகத்தில் படித்ததில் உப்பள வேலை பார்ப்பவர்கள் படும் வேதனைகளை அறிந்தேன்.
குஜராத் மாநிலம் தான் உப்பு உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள உப்பளத் தொழிலாளர்களுக்குத் தேவையான காலுக்குத் தேவையான உறை எனப்படும் செருப்பு, தலைக்கு தலைக்கவசம்,
கண்ணுக்கு வெயில் பாதிக்காதபடி கண், கண்ணாடி போன்ற உபகரணங்களை தந்து அவ்வப்போது உடல் பரிசோதனை செய்துக்கிறாங்க!
வீட்டின் கதவைத் தட்டிய உப்பள முதலாளி மாரியப்பன்
இசக்கி எப்போது வேலைக்கு வருகிறாய்? என்றார்.
இனி வேலைக்கு வரவில்லை ஐயா!
அப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்?
வேறு ஏதாவது வேலை தேட வேண்டும் அல்லது டிஃபன் கடை போடலாம் என நினைக்கிறேன்.
அதற்கும் முதல் வேண்டும் அல்லவா?
அய்யா1 நீங்கள் தான் உதவ வேண்டும்.
சரி! கந்தசாமி என்னிடம் பதினைந்து வருடத்திற்கு மேல் வேலை பார்த்ததற்கு கைம்மாறாக நான் 2 லட்சம் தருகிறேன். நீ அந்தப் பணத்தில் தோசைக்கடைக்குத் தேவையான சாமானை வாங்கி விட்டு மீதிப் பணத்தை வங்கியில் வட்டிக்குப் போட்டு பசங்களைப் படிக்க வை!
நானும் இந்தத் தொழிலில் நஷ்டம் அடைந்து கொண்டேதான் இருக்கிறேன். சங்கரை அனுப்பும்மா! வங்கிலிருந்து பணம் எடுத்துத் தருகிறேன் என அவனை அழைத்துச் சென்று பணம் கொடுத்து அனுப்பினார்.
அப்படி ஆரம்பிச்ச இந்த தோசைக் கடை தான் இன்று சுவையான தரமான கடையாய் இருக்கு.
முனுசாமி அந்த கடையை வேடிக்கை பார்கக ஆரம்பித்தான். தினசரி வந்து சாப்பிட்டாலும் இன்று தான் கடையைrச் சுற்றிப் பார்த்தான். பனை ஓலையால் வேயப்பட்ட அந்தக் குடிசையில் விறகு அடுப்பில் தான் சமையல் ஆகிறது.
கடைக்கு மின்சார இணைப்பு கிடையாது. சூரிய விளக்கு ஒன்று மட்டும் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கான பேனல் கடை கூரை மேல் பொருத்தப்பட்டிருந்தது. கூரையை அண்ணாந்து பார்த்த முனுசாமி காக்கைகளுக்குப் போட்ட தோசை சில துண்டுகள் இறைந்து கிடந்ததைப் பார்த்தான்.
அருகில் இரண்டுபேர் அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்தான். தனக்கும் உருளைக்கிழங்கு மசால்தோசை வேண்டுமென கேட்டு வாங்கினான். ஊர் உலகத்துல இந்தமாதிரி நல்லவங்க இருக்கிறதுனாலதான் மழை பெய்யுது! என அவர்கள் இசக்கியை வாழ்த்தியது முனுசாமிக்கு சந்தோஷத்தை ஊட்டியது.
இத்தனைக்கும் தினமும் பத்துபேருக்கு இலவச தோசை தருவாள்.
விலைப்பட்டியலைப் பார்த்தபோது முனுசாமிக்கு இசக்கி கடையின் வெற்றி ரகசியம் புரிந்தது. தோசையின் விலையைக் குறித்துவிட்டு வீட்டிற்கு எடுத்துச் செல்வதென்றால் அழகாக நெகிழி இல்லாமல் மண் கலயத்தில் சூடு போகாமல் தருவதாக படம் போட்டிருந்தது. கூடவே சிரட்டையின் படமும் பனிக்கூழ் கோப்பையாக அதில் மிளிர்ந்தது.