என் செல்ல டோனிக்கு
என் செல்ல டோனிக்கு


அவன் எங்க வீட்டுக்கு முதன் முதலில் வந்தபோது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் பெற்றோர் வேண்டாம் என சொல்லியும் நான் கேட்டுவிட்டேன் என என் சித்தப்பா அவனை கூட்டிக் கொண்டு வந்தார்.
பார்த்ததும் மனதை கொள்ளைக் கொள்ளும் அழகு. அவன் உடல் முழுவதும் பளிச் வெள்ளை கண்கள் அருகிலும் முதுகிலும் மட்டும் கருப்பு பொசு பொசு என க்யூட் ஆக இருந்தான். என்ன ஏமாந்திங்களா?
அவன் தான் என் செல்ல நாய்குட்டி டோனி.
அவன் வந்தபொழுது ரொம்ப குட்டியா இருப்பான் இரண்டு நாள் கத்திக்கிட்டே இருந்தான், பாவமா இருந்துச்சு, அவன் அம்மாகிட்டயே அவன விட்டர்லாம்னு சொன்னேன்.
நாம திருப்பி கொடுத்தாலும் வேற யாராச்சும் தான் வாங்கீட்டு போய் வளர்ப்பாங்க, நம்பகிட்ட பழகிட்டா நல்லா இருந்துப்பான்னு சொன்னாங்க.
அது மாதிரியே அவன் எங்க வீட்டுக்கு மட்டும் இல்ல , பக்கத்துல இருக்க எல்லா வீட்டுக்கும்
செல்லப் பிள்ளையா வலம் வந்தான்.
தெரிஞ்சவங்கள தவற வேற யாரும் எங்க வீட்டுக்கு வர முடியாது கொலக்கிர கொலைல கொல நடுங்கி போய்றுவாங்க.
எங்க போனாலும் பின்னாடியே வருவான் டோனி, ஒருநாள் பின்னாடியே வந்து என் காலேஜ் பஸ்ல ஏறிட்டான். துரத்தி விட்டுட்டு கேலேஜ் போய்டேன் ,ஆனா அவன் பத்திரமா வீட்டுக்குப் போய் இருப்பானானு ஒரே கவலையா இருந்துச்சு.
வீட்டுக்கு வந்ததும் விசில் அடிச்சேன் அவன் ஓடி வந்தான், அப்ப தான் நிம்மதியா இருந்துச்சு. என்னோட விசில் சத்தம் அவனுக்கு நல்லா தெரியும், எங்க இருந்தாலும் ஓடி வந்துருவான்.
டோனிய குளிக்க வைக்க நாளு பேர் வேணும், தண்ணி எடுனு சொன்னாவே ஓட்டம் புடிச்சுருவான். சாப்பாடு அவனோட தட்டுல போட்டா மட்டும் தான் சாப்பிடுவான், முட்டைனா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எங்கயாவது போய்ட்டு நேரம் கழிச்சு வந்தா மேல விழுந்து கொஞ்சிட்டு தான் ஆள விடுவான்.
குடும்பத்துல ஒருத்தர் மாதிரிதான் அவன் இருந்தான். எங்க அப்பா தினமும் அவனுக்கு பால ஊத்தி வைப்பாங்க, அவர் இறந்தப்ப, அவனும் எங்களோட சேர்ந்து வீட்லயே இருந்தான். மூன்று நாளைக்கு மேல சாப்பிடாம இருந்தான் டோனி, இந்த காலத்துல மனுசங்க கூட அப்படி உண்மையான அன்பு வைக்கிறது இல்லை.
மனுசங்க பேர சொல்லி அட்ரஸ் கேக்குறத விட
டோனி வீடுனா எல்லா குட்டீஸ்ம் சொல்லிரும் அவ்வளோ பேமஸ்.
டோனிக்கு டி சர்ட் போட்றது, மருதானிய நெற்றில பொட்டுமாதிரி வைக்கிறது, பொங்கலுக்கு குளிப்பாட்டி பொட்டுவச்சு பொங்கல் ஊட்றதுனு செய்யாத அலப்பறயே இல்ல.
எல்லாத்துக்கும் மேல எங்க அண்ணன் மேரேஜ் போஸ்டர்ல போட்டோ போட்டு டோனினு பேரும் போட்டோம்.
பல வருசம் ஆச்சு அவன் வந்து,வயசாகி கொஞ்சம் உடம்பு மெலிஞ்சு இருந்தான். ஒருநாள் நா ஆபிஸ்ல லஞ்ச் சாப்ட டிபன் பாக்ஸ திறந்து சாப்பாட்ல கைய வச்சேன். என் தம்பி போன்பன்னி டோனி செத்துட்டானு சொன்னான், அப்படியே சாப்பாட வச்சுட்டு எழுந்து வந்து அழுதேன், ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
எங்க வீட்டு கொய்யா மரத்து அடியில அவன புதைச்சோம். கிட்டதட்ட 11 வருசம் எங்க வீட்ல ஒருத்தனா இருந்த டோனிய எப்போதும் மறக்க முடியாது. கல்லறை திருநாள் வரும்போது அவனையும் நினச்சு அவன புதைச்ச இடத்துல மெழுகுவர்த்தி, சாம்பிராணி வைப்போம். டோனி எங்க வீட்ல இருக்க எல்லோருக்கும் நல்ல நண்பன், பாதுகாவலன்.
அவன் இறந்தது தெரியாதவங்க, இன்றைக்கும் டோனி இருக்கா? -னு கேட்டு பயந்துட்டே தான் வீட்டுக்கு வருவாங்க...
மனித இனத்தின் மகத்தான காவலன் நன்றியுள்ள நாய்கள் தான்...
மிஸ் யூ டோனி.