Siva Kamal

Drama

4.3  

Siva Kamal

Drama

எல்லாம் புரிந்தவர் யார்

எல்லாம் புரிந்தவர் யார்

6 mins
804


கவிதாவின் இரண்டு அக்காக்களும் பக்கத்து ஊரிலேயே கட்டிக்கொடுத்திருந்தனர்.கவிதா கடவுள் கிட்டயெல்லாம் வேண்டியிருந்தாள், தனக்கு மட்டும் எப்படியாவது வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்து-டில்லி அல்லது கான்பூர்-மாப்பிள்ளை அமைய வேண்டும். வருஷத்தில் ஒருமுறை பெரிய பெரிய சூட்கேஸ்களுடனும் விதவிதமான ஆடைகளுடனும் விமானத்தில் வந்து இறங்குவோம். வீட்டு வாசலில் டாக்ஸியில் வந்து நிற்போம்.எல்லோருக்கும் விதவிதமான பரிசுபொருள்களும், அடைஅணிகலன்கலும் வாங்கி வருவோம். அவளுடைய பிள்ளைகளின் வடநாட்டுப் பழக்க வழக்கங்களைப் பார்த்து ஆச்சியும் அம்மையும் வியந்து வியந்து மாய்வார்கள் என கனவு கண்டிருந்தாள்.


தன் கல்லூரி நாட்களில் எவ்வளவோ கனவு கண்டாள் , தான் படித்த காதல் நவீனங்களில் வந்த கதாபாத்திங்களைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டாள். 'வாழ்வில் ஒரு நாள்' கதையில் வரும் பாஸ்கரைப் போன்ற புனிதமே உருவான ஒரு கணவனின் மடியில் பிரியமான ஒரு நிமிடத்தில் அப்படியே செத்துவிட வேண்டும்.


அல்லது- முதல் இரவில் அவள் கணவர் இப்படிச் சொல்வார் "கவி... என்னைப் பொறுத்தவரைக்கும் உடல் உறவுங்கிறது மன ஒருமித்தலின் அடுத்த மகத்தான கட்டம் நாம இரண்டு பேரும் நம்ம வாழ்க்கையிலேயே இன்னிக்குத்தான் முதன் முதலா சந்திக்கிறோம்.முதல் இரவன்றே வெறி அடங்குவது போல - ஏதோ இதற்காகவே ஆணும் பெண்ணும் இத்தனை வருஷம் ஏங்கிக் காத்துக் கிடந்தது போல உடனே சேர்வது என்பது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நாம முதல்ல ஒருத்தரை ஒருத்தர் மனசார புரிஞ்சு..நேசிச்சு..”


அப்புறம் இப்படியும் கூட ஒரு காட்சி... அவள் கணவனின் மடியில் அவள் தலைவைத்துப் படுத்திருக்கிறாள். அவள் கண்களில் கண்ணீர். அவரை விட்டு எப்படிப் பிரிவேன் என கனக்கிற நெஞ்சு. ஆனால் அவரோ அழ்ந்த நிதானத்துடன் அவளைத் தேற்றுகிறார் “கவி .. இப்படியெல்லாம் சென்ட்டிமென்ஸ் நம்மைப் போட்டு அமுக்கற மாதிரி பலஹீனமா இருக்கக் கூடாதுடா. ரெண்டு வருஷம் தானே. அதுவும் எங்கேயோ இல்லியே. இதோ இருக்கிற சென்னை. வாரந்தோறும் நாம சந்திக்கலாம் எம்.ஏ., முடிச்சிட்டியானா அப்புறம் எம்.பில் கூட உன் ஆசைப்படி ஒரு வருஷம் வீட்டில் இருந்துட்டு அப்புறமா பண்ணலாம். எப்படியானாலும் உன்னுடைய அறிவு வெண்டைக்காய், கத்திரிக்காய் வதக்கியே பாழாவதை என்னால் அனுமதிக்க முடியாது..”


எந்தக் கனவும் நடக்கவில்லை.திடீரென்று ஒருநாள் கவிதா காலேஜுல இருந்து வந்ததும் “புடவை மாத்திட்டு வாடி இவருதான் உன்ன கட்டிக்க போற மாப்பிள்ள” என்றதும் கவிதாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. சட்டென்று “அவரு எந்த ஊருமா” என்றாள். இதே ஊரில் நாலாவது தெரு தாண்டி என்றதும் அப்படியே உடைந்தாள் கவிதா.


கவிதா அம்மாவிடம் சொல்லத்தான் செய்தாள். எனக்கு இந்த ஆளைப் பிடிக்கவில்லை என்று. ஆச்சி கேட்டாள்.” ஏண்டா பிடிக்கலேங்கற.. கொஞ்சம் நிறம் கம்மலா கருப்பாக இருக்குன்னு வேண்டாங்கிறியா?”


சரியாக அவளால் பதில் விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை. மாப்பிள்ளையின் மூக்கும் முழிக்கிற முழியும் சரியாகப் படவில்லை அவளுக்கு, அவள் காலேஜுக்குப் போகிற வழியில் பஸ் ஸ்டாப்பில் நின்று பீடி அடித்தபடி இவளையும் இவள் தோழிகளையும் தினசரி முறைப்பான் ஒருத்தன் அவனுடைய முகச்சாடை இவர் முகத்திலும் இருப்பதாக கவிதா உணர்ந்தாள்,


அம்மா சண்டைக்கே வந்து விட்டாள். அப்பாவும் அம்மாவுக்கு ஒத்துப் பாடினார். “என்னடி குறை கண்ட? நல்ல உத்தியோகம். நல்ல சம்பளம், எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. தன் தங்கச்சி கலியாணம் முடியிற வரை தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று இத்தனை வருஷம் காத்திருந்த குடும்பப் பொறுப்பு? இதைவிடப் பெரிய மன்மதன் எவன்டி வரப்போறான்னு சொல்லு..நானெல்லாம் உங்கப்பன கட்டிட்டு இத்தன நாளா வாழலியா?”.


"எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை" என்பதையே கவிதாவால் சொல்ல முடிந்தது. ஆனால் அவள் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்க வீட்டில் கல்யாண காரியங்கள் அது பாட்டுக்கு ஆரம்பித்து நடந்தது.பெரியக்கா வந்தாள். சின்னக்கா பிள்ளை குட்டிகளோடு வந்து சேர்ந்தாள். வீடு களை கட்டி நின்றது.


தவிர, கவிதா மேலும் படிக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டாள். அதெல்லாம் போதும் என்று அப்பா தீர்ப்புச் சொன்ன போது தகர்ந்து போனாள். ஒரு வாரம் சாப்பிடாமலும் எழுந்திருக்காமல் கிடந்து அழுதாள். அம்மா கூட "கழுத படிச்சா படிக்கட்டு ரொம்ப ஆசைப்படுதா” என்று மனமிரங்கினார். ஆனால் அப்பா கறாராக இருந்து விட்டார். அண்ணன் கூடச் சொன்னான். “நான் நீ மட்டும் இப்ப வேலை பாத்துக்கிட்டிருந்தேன்னா உன்னை ஆசைப்படற வரைக்கும் படிக்க வச்சிருவேன். அப்பாவாலே என்னதான் செய்ய முடியும்” இதைச் சொன்ன போது அண்ணனுக்கு குரல் குழறி கண் களில் நீர் சுரந்தது. அப்பாவின் இயலாமை மீது இரக்கம் கொண்டு அவள் “ப்ச...சரி..” என்று மேலே படிக்கிற ஆசையை அவித்துக் கொண்டாள்.


சந்தோஷக் கூப்பாடுகளுக்கிடையே மேள தாளக் கொட்டு முழக்கங்களுக்கிடையே அவள் குரல் அமுங்கிப் போனது. தாலி ஏறியது.


தினசரி முழம் முழமாய் மல்லிகைப்பூவை வாங்கி வந்து பல்லைக் காட்டி இளிக்கிற அன்பு-அபரிமிதமாய் கிடைத்தது. சில சினிமாக்களில் தாசி வீட்டுக்குப் போகும் மைனர்கள் கையில் மல்லிகை பூவைச் சுற்றிக்கொண்டு தள்ளாடிக் கொண்டு கைப்பூவை முகர்ந்து பார்த்து ஹா... என்றபடி செல்லும் காட்சி அவள் புருஷனின் இளிப்பில் தெரியும் அவளுக்கு.


அவனுடைய இளிப்புகள் எப்படியிருந்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ள அவள் தயாராயிருந்தாள்.ஆனால் தனக்கு வரும் கனவன் தன்னை கவி என்று நெருக்கமாய் அழைப்பான் என ஏங்கினாள். இவனோ அவளை “கவிதா கவிதா...” என்று முழுசாக அவளை ஏலம் போட்டே கூப்பிடும் போதெல்லாம் இவளுக்கு எரிச்சலாக இருந்தது.


சரி ஆரம்பத்தில் இப்படி இருப்பான். பிறகு அவனுடைய பதட்டம் தணியும் என மனக் கதவு திறந்தது வைத்துக் காத்திருந்தாள்.


இப்போது கல்யாணமாகி மறுவீடு வந்திருந்தார்கள்.அம்மா சொல்லச் சொல்ல காது கேளாதது போல அசையாமல் வெறிக்கப் பார்த்தபடி நின்றாள் கவிதா.கவிதாவின் புருஷன் பாத்ரூமில் குளிக்கப் போயிருந்தான். வெந்நீர், சோப்பு, டவல் எல்லாம் எடுத்து வைத்து விட்டாள். அதுவும் போதாதென்று கூட நின்று முதுகு தேய்த்துவிடப்போ என்கிறாள் அம்மா. அம்மா அப்பாவுக்கு தேய்த்து விடுவாள். பெரியக்கா பெரிய அத்தானுக்கு தேய்த்து விடுவாள். சின்னக்கா அவள் புருஷனுக்குத் தேய்த்து விடுவாள். இந்த வீட்டில் இது ஒன்றும் புதிதில்லை


ஆனால் கவிதாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இந்தப் பழக்கங்களை மட்டுமில்லை. அவள் புருஷனின் திருட்டு முழியும் எந்நேரமும் அவளை நாடிக் கொண்டேயிருப்பதுவும் கூடப் பிடிக்கவில்லை . அவன் எந்நேரமும் கவிதா கவிதா என்று மாடி அறைக்குக் கூப்பிடுவதும் அதைக் கண்டு அவளுடைய அம்மாவும் ஆச்சியும் மாப்பிள்ளை நல்லா பிரியமாய் இருக்கிறார்' என்று தங்களுக்குள் பார்வையால் திருப்தியைப் பரிமாறிக் கொள்வதும் கவிதாவுக்குக் குமட்டியது.


போன வாரம் கன்னியாகுமரிக்கு ரெண்டு பேரையும் தனியாக அனுப்பியிருந்தார்கள். தேனிலவு- மாலை கடற் கரையில் அமர்ந்திருந்தார்கள். ஆர்ப்பரித்து வந்து காலடியில் உடைந்து சிதறும் சமுத்திரத்தின் பிரமாண்ட தின் முன் ஒரு துகளாய் தன்னை மறந்து கவிதா அமர்ந்திருக்க, அவள் புருஷனோ அவள் உடலையே இலக்காய் பார்த்துக்கொண்டிருந்தான்,வெறுத்தது அவளுக்கு.


லாட்ஜ் அறையில் அதிகாலையில் அவளை எழுப்பினான். கவிதா... கவிதா...சாப்பிட போலாம் எழுந்திரு... சரி. எழுப்புகிறதுதான் எழுப்பு கிறான் முதுகைத் தட்டியோ கையைப் பிடித்து உலுக்கியோ எழுப்பலாமே. அவனுடைய விகார எண்ணங்களின் வெளிப்பாடுகளால் அவளுக்குள் வெறுப்பு வளர்ந்து கொண்டிருந்தது.


விளக்கை போட்டான்.அவள் கண்ணைத் திறந்து கொண்டுதான் படுத்திருக்கிறாள் என்பதைக் கண்டு துணுக்குற்றான். எழுந்திரு போகலாம் என முனகினான்.


“எனக்குத் தலை வலிக்கிறது நான் வரலை” என்று அவள் சொன்னதும் அச்சச்சோ.... என்று அவன் வாய் சொல்ல-மிகுந்த உற்சாகமடைந்த அவன் சிகிச்சையை துவக்கினான். தீவிரமாக அவள் நெற்றியைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். இடையிடையே அவள் கேசத்தையும் மென்மையாக வருடிவிட்டான். காதலாம். நெற்றியில் முத்தமிட்டு தலைவலியை எடுத்தான்.


மாதங்கள் கழிந்தன. அவள் புருஷன் முழுத்திருப்தியுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். லேசாக தொந்தி போட்டது. உடம்பில் மினு மினுப்பு ஏறியது. வீட்டில் சட்டையில்லாமல் இருக்கும் போது ஈஸிசேரில் சாய்ந்து தொந்தியை செல்லமாக தடவிக் கொண்டிருப்பான். அவன் உத்தியோகத்தைப் போலவே உத்தியோகஸ்தனாகவே நடைமுறையுடனே இருந்தான். அவளுக்கு தினசரி மல்லிகைப்பூ அல்வா வாங்கி வந்தான். ஆறு மாசத்துக்கு ஒரு சேலை வாங்கித் தந்தான்.தமிழ்நாட்டு பெண்களுக்கு இது போதும் என அவனே எண்ணிக்கொண்டான்.


“இப்பேர்ப்பட்ட மாப்பிளை கூட இருந்து வாழ உனக்கு கசக்குதாக்கும். போடி துப்புக்கெட்டவளே” என்று அம்மையும் ஆச்சியும் திட்டினார்கள். நாளுக்கு நாள் அவள் கரைந்து கொண்டு போவது அவர்களுக்குப் புரியவுமில்லை பிடிக்கவுமில்லை. இதுக்குத்தான் கழுதைகளைப் படிக்க போடக்கூடாதுங்கிறது என்றாள் ஆச்சி.


ஒரு ராத்திரியேனும் பிரிந்திருக்க அவள் புருஷன் சம்மதிக்கவில்லை. அதுக்காகவே அன்றைக்கு அம்மா வீட்டுக்கு வந்தவள் வீம்புக்காக "தலைவலி-உடம்பு நோகிறது"என்று படுத்துக் கொண்டு எழுந்துவர மறுத்தாள். அவனும் வந்து வந்து பார்த்துவிட்டுப் போனான், சரியாப் போச்சா நம்மவீட்டுக்குப் போகலாமா என்று.


மறுநாள் ரொம்ப கடிந்து கொண்டாள். அவள் மீது அவன் கொண்டுள்ள ஆசையை அவள் என்றைக்குத்தான் புரிந்து கொள்ளப்போகிறாளோ என்று கண் கலங்கினான் ஆனால், அன்றையிலிருந்து கவிதா தன்னை முற்றிலுமாக அவனுக்கு மூடிக் கொண்டாள். ஆனால் என்ன?அவனுக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லை..


மாற்றி மாற்றி வைத்தியம் பார்க்கவும் அடிக்கடி தனக்கே முடியாமல் போகவும் உதவி செய்யவும் யாருமில்லாமலும் அன்றாடப் பொழுது கழிந்து அவனையும் கவனித்து எல்லாம் முடிந்து இரவு தன்னை மறந்து தூங்குவதற்கான நேரம் எப்போ வரும் என்று ஏங்குகிறதாய் அவள் வாழ்க்கை மாறிப்போனது.


எங்கே கழுதை எக்குத் தப்பாக எதையாவது செய்து விட்டு வந்து நிற்குமோ என்று ஆரம்பத்தில் பயந்த அம்மையும் ஆச்சியும் அவள் பிள்ளையும் குட்டியும் ஆனதில் பெரும் நிம்மதி அடைந்தார்கள்


மத்தியானம் வேலைகள் ஒழிந்து படுத்திருக்கும்போது கவிதாவுக்கு அவ்வளவு தானா எல்லாம் என்று உடைந்த மனநிலை கவியும். சில நேரம் இன்னும் எதுவுமே ஆரம்பமாகவில்லை எல்லாமே பாக்கி யிருப்பது போல தோன்றும். பிள்ளையை பார்க்கையில் அவ்வளவுதான் இன்னும் என்ன?' என்று இருக்கும் உடல் அலுப்பும் சில நினைவுகளும் கனவுகளும் மட்டுமே மி ஞ்சியது போலிருக்கும்.


அவள் உடம்பு மட்டும் மீண்டும் தேறிவரவே இல்லை அவள் புருஷனும் எத்தனை டானிக்குகள், முட்டைகள் பழங்கள் என்று வாங்கிக் கொடுத்துப் பார்த்து விட்டான். அவள் தேறவே இல்லை . ஆனால் அவனோ தான் ஒரு பெருமிதமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டான்.


அன்று உள்ளே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் கவிதா.வராந்தாவில் பேச்சுச்சத்தம் கேட்டது. எட்டி பார்த்தாள்எதிர்வீட்டுக்கு குடிவந்திருக்கும் புதுசாக் கல்யாணம் ஆன மனுஷன். அதற்குள் அவர்களுக்குள் ஏதோ மனஸ்தாபம்.கவிதா புருஷனும் அவரும் ஒரே ஆபீஸ் என்பதால் ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசிக் கொள்வார்கள் போல.


அந்த வாலிபனைப் பார்த்தால் அசப்பில் கவிதா புருஷனை சின்ன வயசில் பார்த்த மாதிரியே இருக்கும்.முதல் தடவை அவரைப் பார்த்தபோது கவிதா சற்றுத் திகைத்துப்போனாள்.வீட்டில் மனஸ்தாபம் வளர வளர அவர் அடிக்கடி கவிதா புருஷனைப் பார்க்க வந்து விடுவார். இப்பவும் ஏதோ பிரச்னை போல. இத்தனைக்கும் அந்தப் பெண்ணும் கூட வேலைக்குப் போகிறவள் தான்


கவிதா புருஷன் அவரிடம் பக்குவமாக சொல்லிக் கொண்டிருந்தான். பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த கவிதாவுக்கும் அது தெளிவாகக் கேட்டது.


“நான் எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கேன் தம்பி. பொம்பிளைங்க மனசை முதல்ல புரிஞ்சிக்கிடணு மப்பா. சாயங்காலம் வரும்போது ஒரு மல்லிகைப்பூ - ஒரு அல்வா இதெல்லாம் ஏதோ கேக்குறதுக்கு சுத்த கர்நாடகமா தெரியலாம். ஆனா பொண்ணுங்க மனசு இப்படி அதை முதல்ல திருப்திப் படுத்தணும். அப்பப்ப சினிமா-ஒரு ஹோட்டல் அப்படியெல்லாம் போகணும் தம்பி.என்ன பாத்தியா...”


கவிதா உள்ளே இருந்து ‘டமால்’ என்று பாத்திரத்தை போடும் சத்தம் கேட்டது.


பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள்,அவர்கள் ஆசைகள் கனவுகள் என்ன என்பதை முழுமையாக புரிந்தவர்கள் இந்த உலகத்தில் உண்டா?! என்ன?!!..

Rate this content
Log in

Similar tamil story from Drama