Uma Makeswari M

Horror

4.7  

Uma Makeswari M

Horror

ஒன்றுக்குள் ஒன்று

ஒன்றுக்குள் ஒன்று

7 mins
719


லலிதாவும் மணியும் அன்று சொல்லவொண்ணா மகிழ்ச்சியில் இருந்தனர். இத்தனை நாட்களாய் இந்த ஒரு நாளுக்காகத் தான் அவர்கள் காத்திருந்தார்கள் . பிள்ளை வரம் வேண்டி எத்தனையோ கோயில்களைச் சுற்றி வந்ததற்கும் , தேடித்தேடிப் போய் வைத்தியம் பார்த்ததற்கும் பலன் கிடைத்து விட்டதாய் அவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாடினர் .திருமணம் ஆகி 18 வருடங்களுக்குப் பிறகு , லலிதா முதன்முறையாய் கர்ப்பம் தரித்திருந்தாள் . அதுவும் இரட்டை குழந்தைகள் என மருத்துவர் சொன்னதில் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.


அவர்கள் இருவருக்குமே பெற்றோர்கள் உயிருடன் இல்லை . சொந்தபந்தம் என சொல்லிக் கொள்ளவும் யாரும் இல்லை . மணிதான் லலிதாவை கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டான் . இரண்டு குழந்தைகளையும் கையில் ஏந்தப் போகும் நாளுக்காக அவர்கள் இருவரும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாளும் வந்தது . இரண்டு குழந்தைகளையும் காண்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. லலிதாவுக்குப் பிறந்தது ஒரே ஒரு குழந்தை மட்டுமே. மருத்துவருக்கும் கூட அது அதிர்ச்சியாகத் தான் இருந்தது . அதுவரை எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாமே இரண்டு குழந்தைகளைத் தான் காண்பித்தன. இன்னொரு குழந்தை என்ன ஆனது என்று அனைவருக்குமே குழப்பம். ஒரு வேளை இது எதோ அமானுஷ்யமாக இருக்குமோ என்று ஒரு செவிலிப் பெண் கூட திகிலூட்டினாள்.


லலிதாவுக்கு மணிக்கும் கூட அது புரியாத புதிராக இருந்தாலும் , ஒரு குழந்தையைப் பார்த்ததில் , அதுவும் அவர்கள் நினைத்தாற்போல் பெண் குழந்தை பிறந்ததில் அவர்கள் இன்னொரு குழந்தையைப் பற்றிய விஷயத்தை மெல்ல மெல்ல மறந்தே போனார்கள். பிறந்த குழந்தையுடன் ஒவ்வொரு நொடியும் அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதாகவே உணர்ந்தார்கள் . அந்த குழந்தைக்கு 'தமிழ்ச் செல்வி ' எனப் பெயரிட்டிருந்தார்கள் . நான்கைந்து மாதங்கள் ஓடிப் போயின. அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டு கொண்டு அந்த குழந்தை சிரிக்கும் போதெல்லாம் லலிதாவும் மணியும் தங்களையே மறந்து போனார்கள். ஆனால் அந்த குழந்தை அவர்கள் இல்லாத போதும் கூட எதையோப் பார்த்து ச் சிரிப்பதை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை .


நாட்கள் கிடு கிடுவென ஓடின. குழந்தைக்கு 3 வயது கடந்து விட்டிருந்த சமயம், ஒரு நாள், அடுப்படியிலிருந்த லலிதா ,


"பாப்பா ..தமிழு ..தமிழு " எனத் தன் குழந்தையை அழைத்தாள் . வழக்கமாக ஒரு தடவை அழைத்ததுமே ஓடி வரும் குழந்தை , அன்று அவள் நான்கைந்து தடவை கூப்பிட்டும் சத்தம் கூட கொடுக்கவில்லை. லலிதா பயந்து வாசலுக்கு ஓடினாள். வெளித்திண்ணையில் சுவரோரமாய் அமர்ந்திருந்த குழந்தையைக் கண்ணால் பார்த்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது .


"ஏய் ..தமிழு ..எத்தனை தடவ அம்மா கூப்பிட்டேன் ..ஒனக்கு கேக்கலையா?"


அப்போதும் கூட குழந்தை திரும்பிப் பார்க்கவில்லை . லலிதா குழந்தையின் அருகில் சென்றாள் . சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்த குழந்தை , யாரிடமோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது . லலிதா ஒரு நிமிடம் சற்றுப் பதறிப் போனாள் . அவள் பேய்க் கதைகளில் அதிகம் நம்பிக்கை கொண்டவள் . சட்டெனக் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவனிடம் நடந்த விஷயத்தைக் கூறினாள்.


அதைக் கேட்டுச் சிரித்தான் மணி . "இங்க பாரு லலிதா ..ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பொறந்த கொழந்தைங்கிறதால அவளுக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு நீ ரொம்ப பயப்படுறே ..இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம்மா ..அதுவும் பொம்பள புள்ளைங்க தன்னையே ஒரு அம்மா மாதிரி நெனச்சுக்கிட்டு பொம்மை கூட பேசுறது , தன்னைத் தானே பேசிக்கிறது எல்லாம் சகஜம் தானே ..நீ தேவையில்லாம பயப்படாதே "


லலிதாவால் மணி கூறிய சமாதானத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளது குழந்தை அதே மாதிரி தொடர்ந்து நடந்து கொள்வது அவளுக்கு கொஞ்சம் பயமுறுத்தலாகத் தான் இருந்தது.அவள் மனது கண்டதையும் எண்ணிக் குழம்பியது. அன்றிலிருந்து அவள் தன் குழந்தையை வெளியில் விளையாட விடுவதில்லை . முடிந்த வரை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டாள் .


குழந்தைக்கு 4 வயதான போது பள்ளியில் சேர்த்தார்கள் . தமிழ்ச் செல்வியும் சந்தோஷமாகப் பள்ளிக்கு போவதும் , வீட்டுக்கு வந்து பள்ளியில் கற்றவற்றைத் தாய் தந்தையரிடம் சொல்லிக் காட்டுவதுமாய் சில நாட்கள் மகிழ்ச்சியாகத் தான் சென்றன .


ஒரு நாள் தமிழ் பள்ளிக்குச் சென்ற பின்பு, லலிதாவுக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது . பயந்தவாறே பள்ளிக்கு சென்ற லலிதா , தலைமை ஆசிரியரின் அறையில் இருந்த தமிழ்ச் செல்வியைப் பார்த்ததும் அலறினாள். குழந்தையின் முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே ரத்தக் காயங்கள்!


"ஐயையோ ..டீச்சர் என் புள்ளைக்கு என்னாச்சுது .. இவ்ளோ நாள்ல அவ ஒரு தடவை கூட கீழக் கூட விழுந்ததில்லையே ..பொத்தி பொத்தி வளத்துட்டு வந்தேனே ..இப்புடி அடிபட்ருக்கே ..நான் என்ன பண்ணுவேன் ..எப்புடி இப்படி அடி பட்டுச்சுது ..நீங்க யாராச்சும் அடிச்சீங்களா .." சீறினாள் லலிதா.


"இங்க பாருங்கம்மா .. இங்க யாரும் உங்க புள்ளய அடிக்கல ..அவ கூட படிக்கிற பசங்க கூட எதுவும் பண்ணல .. அவங்க எல்லாரும் அவளேத் தான் இப்புடி பண்ணதா சொல்றாங்க..காயத்துக்கு நாங்க லேசா மருந்து போட்ருக்கோம் ..மொதல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க .. அப்புறம் அவ ஏன் இப்புடி பண்ணினான்னு விசாரிங்க"


லலிதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை..இவர்களிடம் இப்போது வாக்குவாதம் பண்ணுவதை விட , முதலில் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தவளாய் , அழுது கொண்டே குழந்தையை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வெளியே வந்தாள்.


அப்போது அவளை ஒரு பெண் தடுத்து நிறுத்தினாள்.மெதுவாக லலிதாவின் அருகில் வந்து முணுமுணுத்தாள் .


"ஒன்னோட கொழந்தைக்கு ஒன்னும் இல்ல ..இதெல்லாம் ஏதாவது பேயோட வேலையாத் தான் இருக்கும் ..நான் சொல்ற இடத்துக்கு ஒன் கொழந்தையக் கூட்டிட்டுப் போ .. எல்லாம் சரி ஆயிடும் " என்று ஒரு விலாசத்தைக் கூறினாள் .


லலிதாவுக்கு அந்த பெண்ணின் குரல், அவள் காதில் வந்து ஆந்தை கத்துவது போல் ஒலித்தது. அவளது முகம் கோரமாகப் பயமுறுத்தும் முகமாய் தெரிந்தது. திகிலுடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றாள் . வீட்டுக்குப் போகும் வழியில் மகளிடம் மெல்ல பேச்சு குடுத்தாள் லலிதா .


"தமிழு ..உன்னை யாரும்மா அடிச்சாங்க "


"இவன் தான்மா." என்று தன்னைத் தானேக் காட்டினாள் தமிழ்.


லலிதாவுக்கு எதோ திகில் காட்சியைப் பார்த்தாற்போல் வேர்த்துக் கொட்டியது . தமிழிடம் மேற்கொண்டு எதுவுமே பேசாமல் , அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் . மருத்துவர் காயத்திற்கு காரணம் கேட்ட போது ஏதோ சொல்லிச் சமாளித்து விட்டு , காயத்துக்கு மருந்து போட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தன் கணவன் எப்போது வருவான் எனக் காத்திருந்தவள் , அவன் வந்ததுமே ஓவென அழுதாள் . மணி அவளைச் சமாதானப் படுத்துவதற்குள் மறுநாள் பொழுதே விடிந்து விட்டது .


மணிக்கு அமானுஷ்ய செயல்பாடுகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாத போதும் , தன் மனைவிக்காக அவள் கூறிய சாமியாரிடம் இருவரையும் அழைத்துச் சென்றான் . நடந்ததைச் சாமியாரிடம் கூறினாள் லலிதா .


"எனக்கு ரொம்ப பயமா இருக்குது சாமி ..நீங்க தான் என்னன்னு பாத்து சொல்லணும் " என்று கைகூப்பி நின்றாள்.


"கவலைப் படாதீங்கம்மா ..நான் என்னன்னு பாக்குறேன் .. உங்க குழந்தையோட ஜாதகம் கொண்டு வந்துருக்கீங்களா "


சாமியார் லலிதா கொடுத்த ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார் .ஒரு நிமிடம் கண்களை மூடியபடி இருந்தவர் , கண்களைத் திறந்து ,


"உங்க கொழந்தையோட ஜாதகப்படி அவ கூட இன்னொரு கொழந்தை பொறந்திருக்கணுமே .அந்த கொழந்தை எங்க? "


லலிதாவும் , மணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


"அய்யா ..இவை கர்ப்பமா இருக்கும் போது , டாக்டர் கூட ரெட்டைப் புள்ளைன்னு தான் சொன்னாங்க ..ஆனா பொறந்தது ஒன்னு தாங்க " என்றான் மணி.


"இல்ல ..பொறந்தது ஒன்னு இல்ல ..ரெண்டு"


லலிதாவும் மணியும் அதிர்ச்சியில் முழித்தனர்.


"உங்க கொழந்தை உடலால ஒன்னு ..ஆன்மாவால ரெண்டு " என்று சாமியார் கூறியதை அவர்கள் இருவராலும் நம்ப முட்டியவைல்ல.


"அய்யா நீங்க சொல்றது எங்களுக்குப் புரியலை " என்றான் மணி.


"இப்புடி நடக்குறது ரொம்ப அபூர்வம் ..உங்க மனைவி க கர்ப்பத்துல ரெண்டு ஜீவன் உருவாகி இருந்திருக்கு , ஒன்னு பொண்ணு ஒன்னு ஆணு .. ரெண்டு ஆன்மாவும் ஒரே உடம்புல குடி ஏறி இருக்கு.உங்க கொழந்தைகிட்ட பெண் ஆன்மாவோட ஆதிக்கம் அதிகமா இருக்கு , அதனால தான் அவ பெரும்பாலான நேரத்துல சாதாரணமா பெண் கொழந்தைங்க நடந்துக்குற மாதிரி சாந்தமா இருக்கா .. "


சாமியார் சொல்லச் சொல்ல , லலிதாவும் மணியும் பீதியில் உறைந்து போயினர்.


" அந்த ரெண்டு ஆன்மாக்களும் இணக்கமா இருந்தா உங்க கொழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்ல ..ஏதாவது பிணக்கம் ஏற்படும் போது , ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவைத் தாக்க முயற்சிக்கலாம் ..நேத்து அப்புடித் தான் ஏதாவது நடந்திருக்கணும் .."


"சாமி ..இதனால என் புள்ளையோட உயிருக்கு எதுவும் பெரிய பிரச்சினை ஆகாதுல்ல " பதறினாள் லலிதா .


"கண்டிப்பா ஆகும் ..நேத்து நல்ல வேளையா சின்ன காயத்தோட போச்சுது ..ஆனா இதே மாதிரி எப்பவும் இருக்கும்னு சொல்ல முடியாது "


"ஐயையோ ..சாமி அப்டில்லாம் சொல்லாதீங்க ..நீங்க தான் என் புள்ளைய எப்புடியாவது காப்பாத்தணும் "


"பயப்படாதீங்கம்மா ..எந்த ஒரு பிரச்சினைக்கும் கண்டிப்பா ஒரு தீர்வு இருக்கும் ..எனக்கு கொஞ்சம் நேரம் குடுங்க .. நான் இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கன்னு பாக்குறேன் .. அது வரைக்கும் கொஞ்சம் வெளியில உக்காருங்க " என்ற சாமியார் தியானத்தைத் தொடங்கினார் .


சுமார் ஒரு மணி நேரம் கழித்து சாமியார் , மணியை மட்டும் உள்ளே அழைத்தார்.


"நான் தியானத்திலிருந்தப்ப ஜீவசமாதியான என்னோட குரு என்கிட்டப் பேசினாரு .. அவரு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைச் சொல்லியிருக்கார். . நாம அத முயற்சி பண்ணிப் பாப்போம் .நான் சொல்றபடி பண்ணுங்க "


மகிழ்ச்சியில் மணியும் "சொல்லுங்கய்யா , கண்டிப்பா பண்றோம் " என்றான் .


"உங்க பொண்ணு பொறந்த அதே நாள்ல அதே நேரத்துல இறந்து போன ஒரு ஆண் கொழந்தைய நீங்கத் தேடிக் கண்டுப்பிடிக்கணும். அந்த கொழந்தையை அடக்கம் செஞ்ச இடத்துக்கு போய் , அந்த கொழந்தையை உங்க கொழந்தையா பாவிச்சு அந்த கொழந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்யணும் . நீங்க போகும் போது உங்க கூடவே உங்க பொண்ணையும் கூட்டிட்டுப் போங்க . இப்படி செஞ்சா உங்க பொண்ணோட ஆன்மா அவ கூடவே பொறந்த இன்னொரு ஆன்மா இப்ப இல்லேன்னு நம்பும். அதோட ஒங்க கொழந்தைக்கு இருக்கிற எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்துடும்.


வர்ற வெள்ளிக்கிழமை பூர்ண அமாவாசை , அன்னிக்கு காலையில நான் சொன்ன சடங்குகள் எல்லாத்தையும் பண்ணுங்க ..புரிஞ்சுதா..தைரியமா போயிட்டு வாங்க .. நல்லதே நடக்கும்"


மணியும் சாமியார் சொன்னது போலவே ஒரு குழந்தையைக் கண்டுபிடித்து, தமிழையும் அந்த குழந்தையின் சமாதிக்கு தன்னுடன் அழைத்துச் சென்று , எல்லா சடங்குகளையும் செய்து வி ட்டான். அதன் பிறகு தமிழிடம் எந்தச் சலனமும் இல்லை . தங்கள் குழந்தைக்கு இருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதென லலிதாவும் மணியும் நம்பினார்கள் . அவர்கள் வாழ்க்கை நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது.


ஒரு நாள் , அடுப்படியிலிருந்த லலிதா ,

'பாப்பா ..தமிழு ..தமிழு ' எனத் தன் குழந்தையை அழைத்தாள்.


வெளித்திண்ணையில் அமர்ந்திருந்த தமிழ் வெகுதூரத்திலிருந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் . அவள் அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தூரத்திலிருந்த பேய்மலையில் ஒரு வீடு!!


Rate this content
Log in

Similar tamil story from Horror