Uma Makeswari M

Drama Classics

4.2  

Uma Makeswari M

Drama Classics

மீண்டும் நாம்!

மீண்டும் நாம்!

3 mins
1.1K


சூர்யா - ஒரு ஆண்கள் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி மாணவன். வீட்டிற்கு ஒரே பையன். அவனது தந்தை சென்னையில் ஒரு பிரபல தொழிலதிபர். வெண்ணிலா - பெயருக்கேற்றாற் போல் கண்ணைக் கவரும் அழகு. திருச்சிக்கு அருகே திருவரம்பூர் அவளது சொந்த ஊர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துக் கொண்டிருக்கிறாள். யாரிடமும் அளவாக பேசும் குணம் கொண்டவள். கல்லூரி போக மீதி நேரம் அவளது உலகமே அவளது மடிக் கணிணி தான். கொஞ்ச நாளாக அவளுக்கு ஒரு புது நட்பு கிடைத்திருக்கிறது முகநூல் மூலமாக. 


ஹாய் , ஹலோவில் தொடங்கி, அவர்களது நட்பு கருவில் உள்ள சிசு போல தினமும் வளர்ந்து வந்தது. நேரில் பாத்திராவிட்டாலும் , வெண்ணிலாவுடனான நட்பு பல நூறு வருடங்களுக்கே முன்னே ஏற்பட்டதாக சூர்யாவுக்கு தோன்றியது. சூர்யாவின் கண்ணியமான பேச்சில் வெண்ணிலா கவிழ்ந்தாள். அவனின் அன்பில் தன்னையே மறந்தாள். நிழற்படங்கள், அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டவர்கள்,இதயங்களையும் பரிமாறிக் கொண்டார்கள். சூரியனும் நிலவும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் நாளுக்காக தவம் இருந்தன. அந்த நாளும் வந்தது. சூர்யா, வெண்ணிலாவைப் பற்றி ஏற்கனவே அவனது பெற்றோரிடம் கூறி இருந்தான். அவர்களுக்கும் வெண்ணிலாவை மிகவும் பிடித்திருந்தது. நிலவை வெறுப்பாரும் உண்டோ? சூர்யா வெண்ணிலாவைத் தன் வீட்டிற்கே அழைத்திருந்தான். அன்று 2015ஆம் ஆண்டு வருடப் பிறப்பு. புதிய ஆண்டு தனக்காய் பிறந்ததாய் எண்ணி மகிழ்ச்சி கொண்டாள் வெண்ணிலா.


தோகையில்லா மயிலாய் உடை உடுத்தி களிப்புடன் கிளம்பி சூர்யாவின் வீட்டை அடைந்தாள். அழைப்பு மணியை அழுத்தும் முன், சூர்யாவை நேரில் கண்டவுடன் என்ன பேசுவது, எப்படி சிரிப்பது என்று நூற்றி எட்டாவது முறையாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள் . ஒரு வேளை சூர்யாவே வந்து கதவைத் திறந்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு பாட்டி வந்து கதவு திறந்தார். சூர்யாவின் குடும்ப நிழற்படத்தை ஏற்கனவே வெண்ணிலா பார்த்திருக்கிறாள். அந்த பாட்டி அப்படியே சூர்யாவின் அம்மா போலவே இருந்தார். ஒரு வேளை அம்மாவின் அம்மாவாக இருக்கலாம். பாட்டியின் சுருங்கிய கண்கள் வெண்ணிலாவை வியந்து நோக்கி கொண்டிருந்தன. 'நான் வெண்ணிலா' என்றாள் அவள். 'உள்ளே வாம்மா !! எனக்குத் தெரியும் ஒரு நாள் நீ கண்டிப்பா வருவேன்னு' என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு கூறும் போது அந்த அம்மாவின் கன்னத்து சுருக்கங்களூடே கண்ணீர் வழிந்தோடியது. வெண்ணிலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 'என்னாச்சு பாட்டி..சூர்யா எங்க?' என்றாள் வெண்ணிலா.


எதுவும் சொல்லாமல் உள்ளே சென்ற பாட்டி ஒரு நாட்குறிப்பைக் கொண்டு வந்து வெண்ணிலாவிடம் கொடுத்தார். அந்த நாட்குறிப்பு 1980-ஆம் வருடத்தைக் காட்டியது. அதைத் திறந்தவுடன், ஒரு கடிதம் தென்பட்டது. அந்த பாட்டி அவளிடம் அந்த கடிதத்தைப் படிக்கும் படி கூறினார்.


'அன்புள்ள அம்மா அப்பாவுக்கு,


நானும் வெண்ணிலாவும் எப்படி எல்லாம் காதலித்தோம் என்று உங்களுக்கே தெரியும். அவளை என்னிடம் இருந்து பிரித்ததோடு மட்டும் அல்லாமல், கவுரத்தைக் காப்பதாகக் கூறி, என் நிலாவை கொன்று விட்டார் அவளது தந்தை.


அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் ஏது வாழ்வு. நானும் செல்கிறேன் அவளைத் தேடி. என்னை மன்னித்து விடுங்கள். இந்த வருடத்தின் முதல் நாள், என் வாழ்வின் இறுதி நாளாகப் போகிறது .


மீண்டும் ஒரு ஜன்மம் இருந்தால், நாங்கள் இருவரும் கண்டிப்பாக ஒன்று சேர்வோம். . இந்த ஜென்மத்தில் உங்களை விட்டுச் சென்றாலும், மீண்டும் நானும் வெண்ணிலாவும் உங்களிடம் கண்டிப்பாக வந்து சேர்வோம்.


அன்புடன்

உங்கள் மகன் சூர்யா'


வெண்ணிலாவின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த கடிதத்தின் அடியில் இரண்டு பழைய புகைப்படங்கள் இருந்தன. ஒன்றில் சூர்யா சிரித்துக் கொண்டிருந்தான். அவனது இரு பக்கமும் அவனது அம்மா, அப்பா. இந்த புகைப் படத்தை வெண்ணிலா ஏற்கனவே பார்த்திருக்கிறாள் 'சூர்யாவோட அப்பாவுக்கு, சூர்யான்னா உயிர். அந்த உயிர் பிரிஞ்ச துக்கம் தாங்க முடியாம அவரும் போய் சேர்ந்துட்டார். என்னிக்காவது ஒரு நாள் என்னத் தேடி நீயும் சூரியாவும் வருவீங்கன்னு எனக்குத் தெரியும். இதுக்குத் தான் நான் இத்தனை நாளாக் காத்துட்ருந்தேன்' என்று அந்த பாட்டிக் கூறி கொண்டிருக்கும்போது, வெண்ணிலாவுக்கு வேர்த்துத் கொட்டியது. அடுத்த புகைப் படத்தைப் பார்த்த வெண்ணிலாவின் கண்கள் செருகிக் கொண்டன. அதில் வெண்ணிலா, அருகில் சூர்யாவுடன். 'சூர்யா சொன்னது போலவே நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட வந்து சேர முப்பத்தஞ்சு வருஷம் ஆயிடுச்சு ' என்று பாட்டி கூறியதும், வெண்ணிலா சரிந்து விழுந்தாள் அதைப் பார்த்து 'நிலா' என்று பதறினான் சூர்யா.


Rate this content
Log in

Similar tamil story from Drama