Uma Makeswari M

Abstract Drama

4.9  

Uma Makeswari M

Abstract Drama

மனிதர் உணர்ந்து கொள்ள...

மனிதர் உணர்ந்து கொள்ள...

2 mins
1.0K


அன்று அவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள். 'எம்மாம் பெரிய வீடு' என்று அசந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, முதலாளி வெளியில் வந்தார். 'புதுசா?' என்று பக்கத்தில் நின்றவரிடம் கேட்டு விட்டு, அவன் தலையை மெதுவாகத் தொட்டார். 'ட்ரைன் பண்ணிடு கந்தா', என்று அவன் அருகில் நின்ற மேற்பார்வையாளரிடம் கூறி விட்டு சென்று விட்டார். முதலாளி செல்வதை பவ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அப்போது தான் தன் தேவதையை முதன் முதலாகப் பார்த்தான். 'அப்பாடி,,என்ன அழகு..ஹ்ம்..பெரிய இடத்துப் புள்ளை இல்ல..' என்று வாய் பிளந்தான். அவள் அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. 'ஹ்ம்' என்று பெருமூச்சு விட்டு விட்டு , தன் வேலைக்கானப் பயிற்சியைகளைக் கவனிக்க ஆரம்பித்தான் . 


அவனைப் போல் இன்னும் நாலைந்து பேர் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்ற நிபந்தனை அவனுக்கு இப்போது பிடித்துப் போனது . அவளை அன்று பார்த்தது தான். 'எப்போது வெளியே வருவாள். எப்போது தரிசனம் தருவாள்' என இவன் தவம் கிடந்தான். அவ்வப்போது அவள் குரல் மட்டும் கேட்டு உயிர் வாழ்ந்தான். 'இது காதலா?', 'ஏன் இருக்க கூடாதா?'. 'அவள் வேற ஜாதி.. பெரிய இடம் வேற...' 'அதனால் என்ன'. 'ஒத்து வருமா?. அவர்கள் வீட்டில் தெரிந்தால்?'.'என்ன செய்து விடுவார்கள்?'. 'எதுவும் செய்வார்கள்'. 'அதையும் பார்த்து விடலாம்'. இப்படி தன் மனசாட்சியுடன் வாக்குவாதம் செய்தாலும், 'முதலில் அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே' என்ற பயம் அவனுக்கு இருக்கத் தான் செய்தது. 'எப்படி மடக்குவது?' என்று தன் நண்பனிடம் ஆலோசனைக் கேட்ட போது தான் தெரிந்தது, தினமும் காலை 5 மணிக்கு அவள் நடைபயிற்சி செல்ல மட்டும் தான் வெளியில் வருவாள் என்று. 'ஆனால் கூடவே முதலாளியும் இருப்பார்.. ஜாக்கிரதை!' என்று எச்சரித்தான் நண்பன்.


மறுநாள் முதல், தான் தவம் செய்யும் இடத்தை வாசல் அருகே மாற்ற முடிவு செய்தான். அதோ நிலவு வெளியில் வருகிறது!. மறுபடியும் அவளைச் சந்தித்தான், இம்முறை மிகவும் அருகில்!. அவனைக் கடக்கும் போது, தன்னைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து புன்னைகைத்தாள் அவள். இவனுக்கு நிற்பு கொள்ளவில்லை. முதன் முதலாகத் தன்னையும் ஒருத்தி பார்த்து விட்டாள். பார்த்து சிரித்தும் விட்டாள். உடனே ஓடிப் போய் நண்பணிடம் சொன்னான். 'ரொம்ப சந்தோஷப்படாதே. அவள் என்னை பார்த்தாலும் தான் சிரிப்பாள்'. என்று நண்பன் கடுப்பேத்தினான் .அத்தோடு 'சிரிக்கிறது முக்கியம் இல்லை. காதலிக்கணும்.. அது தான் முக்கியம்' என்று உசுப்பேத்தினான். 'அவளை என்னைக் காதலிக்க வைத்துக் காட்டுகிறேன்' என்று தன் குல தெய்வத்தின் மேல் சபதம் இட்டான் இவன்.


தினமும் இவன் வாசலருகில் காத்துக் கிடப்பதும், அவள் இவனைப் பார்த்து புன்னைகைப்பதுமாய் நாட்கள் ஓடின. ஒரு நாள் முதலாளி ஊரில் இல்லை. 'இது தான் சரியான சமயம், அவளிடம் எப்படியாவது நம் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கி விட வேண்டும்' என்ற முடிவோடு வீட்டுக்குள்ளே நுழைய முயன்றான் . 'ஹே.....கந்தா!..இங்க பாரு,என்ன இது?.. வீட்டுக்குள்ள எல்லாம் வந்துட்டு, கூட்டிட்டுப் போ. அய்யாவுக்கு தெரிஞ்சுதுன்னா அவ்ளோ தான்' என்று முதலாளி அம்மா கத்த ,கந்தன் அவனை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றார். அவர் தன்னை வெளியே இழுத்துச் செல்லும் போது தான் கவனித்தான், மாடியிலிருந்து அவள் தன்னை பரிதாபமாகப் பார்ப்பதை... அந்த கண்கள்!!! அந்த கண்களில் , அது பரிதாபம் இல்லை. காதல்!!! ஆம் காதலே தான்!!!. 'ஹையா' என்று துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. கந்தனின் கையை உதறி விட்டு அவன் குதிக்க ஆரம்பித்தான். 'ஆஆ ஊஊ' என்று கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடினான் . முதலாளி அம்மா வெளியே வந்து, 'கந்தா ..அந்த நாய்க்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு போல..எங்கேயாச்சும் கொண்டு போய் விட்டுடு. முடிஞ்சா அடிச்சுக் கொன்னுடு' என்றார்.


ஹ்ம்...மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதர் காதல் அல்ல..அதையும் தாண்டி...


Rate this content
Log in

Similar tamil story from Abstract