Uma Makeswari M

Abstract

3.6  

Uma Makeswari M

Abstract

மீளா மனம்

மீளா மனம்

3 mins
414


"ஏய். எந்தி .ஸ்கூலுக்கு டைம் . ஆச்சுல்லா",அக்கா ஆத்துக்குக் குளிக்கப் போகிற வழியில், ஒரு மிதி மிதித்தாள். போதாக் குறைக்கு நான் படுத்திருந்த பாயையும் இழுத்துச் சுருட்டி வீட்டு மூலையில் வைத்து விட்டுப் போனாள். 'நாங்க யாரு, இதுக்கெல்லாம் பயந்துருவோமா?'. அவள் அப்படிப் போனதும்,தலையணையை எடுத்து கொண்டு வாசல் நடை பக்கம் . சென்று படுத்து விட்டேன். 'ஆஹா!! சாணம் மெழுகிய மண் தரையில் அரச மரக் காற்று வாங்கித் தூங்கும் சுகமே சுகம்!!'. வீட்டில் மின் இணைப்பு இல்லாதது எங்களுக்கு ஒரு பெரிய குறையாகவே தெரியவில்லை.


 "என்ன மக்கா..இன்னைக்கு ஸ்கூலுக்கு போண்டாமா ? " கேட்டுக் கொண்டே தலையில் வைத்திருந்த தயிர் கூடையை இறக்கித் திண்ணையில் உட்கார்ந்தார் நீலாச்சி. "போணும்ச்சி" கூறிக் கொண்டே என் தூக்கத்தைத் தொடர முயற்சி செய்தேன். "சந்திரி..கொஞ்சம் குடிக்கத் தண்ணி குடு மக்கா" என்று நீலாச்சி கேக்கும் முன்னே, "இந்தாங்கம்மா", என்று எங்கள் வீட்டு மண் பானையிலிருந்து ஜில்ஜில் தண்ணீரை மொண்டு கொண்டு வந்து கொடுத்தார்கள் என் அம்மா. அந்த மண் பானைக்கு என் வயசு. எந்த குளிர்சாதனப் பெட்டியும் அதற்கு ஈடாகாது. 


"ஏய்..எந்திலே..ராத்திரி 11 மணி வரைக்கும் முழிச்சிருந்து படிக்க வேண்டியது..காலைல 8 மணி வரைக்கும் தூங்க வேண்டியது" என்ற என் அம்மாவிடம். "அஞ்சு நிமிஷம்மா" என்று கையை ஆசீர்வாதம் செய்வது போல் தூக்கிக் காட்டி விட்டு, என் வேலையைத் தொடர்ந்தேன் நான். தூக்கம் கலைந்தாலும் ,சில நிமிடங்கள் கண்ணை மூடிக் கொண்டு காற்று வாங்கியபடி படுத்திருப்பது எனக்குப் பிடிக்கும். நல்ல வேளை அக்கா குளிக்கப் போய் விட்டாள். இல்லையென்றால் இந்நேரம் என்னை ஒரு செம்புத் தண்ணீரால் குளிப்பாட்டி விட்டிருப்பாள் 


 "ஏன் மக்கா ..இந்த வீட்டுக்காரன் கோவாலு கிட்ட கரண்ட் எடுத்துக் கேக்கக் கூடாதா, புள்ள அடுத்த வருஷம் எட்டாங்கிளாஸ் போரால்லா? சிம்மினி வெளக்கு வெச்சி எப்புடி படிக்க முடியும் ?" என்றார் நீலாச்சி. "இவங்கப்பா கேட்டுகிட்டுத் தான் இருக்காங்கம்மா..ஆனா அதுக்குக் கொஞ்சம் ருவா கொடுக்கணும்..மழை பென்ஞ்சா கூரை வேற ஒழுகுல்லா..அதையும் மாத்திக் கேட்ருக்கோம்..அதுவும் சேத்துப் பண்ணித் தாரேன்னு சொல்லி இருக்காங்க அந்த அண்ணன்" என்று என் அம்மா கூறிக் கொண்டிருக்கும் போது நான் ஒரு வழியாக எழுந்து விட்டேன்.


நீலாச்சிக்குப் பக்கத்தில் நல்லூர். அங்கேயிருந்து இந்த தள்ளாத வயதில் எங்கள் ஊர் வரைக்கும் நடந்து வந்து தயிர், நெய் விற்பார்கள். வரும் போதெல்லாம் எங்க வீட்டில் தினமும் சற்று நேரம் உட்கார்ந்து பேசி விட்டுத் தான் போவார். என் ஆச்சி தாத்தா எல்லாம் நான் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்கள். அதனாலோ என்னவோ,எனக்கு அந்த ஆச்சியை ரொம்ப பிடிக்கும். "ஆச்சி.. இன்னிக்கு எங்க ஸ்கூல்லேந்து படத்துக்குக் கூட்டிட்டுப் போறாங்க தெரிமா?" என்றேன் நான். "அப்பிடியா ..செல்வம் தியேட்டர்லயா! பாத்து பொயிட்டு வான்னா.. சரி மக்கா நான் பொய்ட்டு வாறேன்..நேர்த்தே வீட்டுக்குப் போனும்..இன்னிக்கு ரேஷன் கடையில் மண்ணண்ண கொடுக்கான்.. பொயி வாங்கணும்" என்று தயிர் கூடையைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினார் நீலாச்சி.


 நான் எழுந்து பல் விளக்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது, என் அக்காள் வந்து விட்டாள். "ஆத்துக்கு குளிக்க வந்திருக்கலாமிலா ..உன் ட்ரெஸெயும் நான் தொவச்சிருப்பேன்?" என்றாள். நான் "ஹீஹீ" என்று சிரித்துக் கொண்டு, பள்ளிக்குக் கிளம்பத் தொடங்கினேன். நான் இட்லியைச் சாப்பிடத் துவங்க, அம்மா எனக்கு ரெட்டைச் சடை போட்டு விட்டார்கள். 'ஹே.. இன்னும் ஒரு இட்லி தின்னு' என்று அம்மா கத்த , "நேராச்சும்மா ..9.30 மணி பெல் அடிச்சிட்டா அப்புறம் வெளியதான் நிக்கனும்" என்றேன். "ஆமா..எட்டரைமணி வரைக்கும் நல்லா தூங்கு..அப்பம் நேரம் ஆகாம என்ன செய்யும். இதுல க்ளாஸ் லீடர் வேற!!" என்று என் மண்டையில் ஒரு குட் டு கொட்டி குடத்தைத் தூக்கிக் கொண்டு தண்ணி எடுக்கப் போய் விட்டாள் அக்காள்.


 மண்டையைத் தடவிக் கொண்டிருக்கும் போது "இந்தா பண்டம்.. நீயும் சிந்துவும் த்யேட்டர்ல வச்சி சாப்பிடுங்க . பாலத்துல பாத்து போனும், சரியா ?" என்ற அம்மாவுக்கு "சரிம்மா..பொய்ட்டு வாறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது "ஏய்..ஏந்திச்சு காஃபீ போடுடி..சன்டே ஆனா போதுமே நல்லா 10 மணி வரைக்கும் தூங்குவியே..சன்டேயும் ஒனக்கு ஆஃபீஸ் வைக்க சொல்லணும்" என்றது ஒரு குரல். " என்னது ஆஃபிஸா.. என்ன புது குரல்..அப்பாவும் காலயிலேயே கடைக்குக் கெளம்பிருப்பாங்களே.." என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே. கண் முன் ஒரு கொசுவத்தி சுருள் முன்நோக்கிச் சுழன்றது. 8, 9, 10, 12, கல்லூரி, சென்னையில் வேலை, திருமணம். தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல் அடுக்குமாடி குடியிருப்பு, அங்கே திண்ணை கூட இல்லாமல் ஒரு வீடு, வாசற்கதவு எப்போதும் சாத்தியே இருக்க, பெட்டில் நான் படுத்துக் கொண்டிருந்தேன்.இத்தனை நேரம் சுழன்ற அந்த சுருள் நின்று போக, மெதுவாக எழுந்து காஃபி போட சென்றேன், என் பழைய நினைவுகளில் இருந்து மீளாத மனதுட ன்...


Rate this content
Log in

Similar tamil story from Abstract