சும்மா தானே இருக்கே!
சும்மா தானே இருக்கே!
ஊரடங்கு உத்தரவு வந்ததில் இருந்து கணேசனுக்கு கையும்,காலும் ஓடவில்லை. மளிகைப்பொருட்கள் முதல் துணிமணிவரை மனைவி விமலா வாங்கி வைத்து பழக்கப்பட்டுவிட்ட அவனுக்கு வீட்டில் அடைபடுவது பிடிக்கவில்லை. சள்,புள்ளென மனைவியிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்தான்.அப்பாவுக்கு கரோனா வந்துடுச்சா அம்மா! என பெண் விசாலி முணுமுணுத்தாள்.
விமலாவோ, நீ வேற! புகை விடலைன்னா அய்யாவுக்கு தூக்கம் வராது! டாஸ்மாக் பக்கம் போய்ட்டு லேசா பான்பராக் போட்டாத்தான் தூக்கமே வரும். எல்லா வேலையும் என் தலையில் சுமத்திடுவாரு! இப்ப வேலைக்கு ஆள்கூட கிடையாது, அய்யாதான் கூட்டி வீட்டைத் துடைச்சு சுத்தம் செய்யறாரு! அதான்...
நொய்....நொய்ங்கறாரு......சும்மாதானே இருக்கே! அதான் சுடச்சுட காயப்போட்ட துணிகளை மடித்து 3 மணிக்கு எடுத்து வைக்கச் சொன்னேன். அதான் கோபம்! டீவில இரண்டு புது படம் போட்டா அடங்கி இருப்பாரு...அதைக் காணோம்!..என அலுத்தபடி கரோனா செய்திகளைப் பார்த்தபடி இருந்தாள் விமலா.