சபதம்
சபதம்


ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போது ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வது என் வழக்கம். ஆனால் அவையெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதினைந்து நாட்கள் கடைப்பிடித்தால் அதிகம்.
சென்ற புத்தாண்டில் இப்படித் தான் ஒரு புதிய டைரி எடுத்து தினசரி நிகழ்வுகளை எழுதி வர வேண்டும் என உறுதிமொழி எடுத்து முதல் நாள் அதிகாலை கோவிலுக்குச் சென்றது முதல் இரவு சன் டிவியில் பார்த்த சிறப்புத் திரைப்படம் பற்றி எழுத ஆரம்பித்தேன். ஒரு வாரம் ஒழுங்காக எழுதியிருப்பேன். பின் எப்படி அந்த சோம்பேறித்தனம் என்னிடம் வந்தது என்று தெரியவில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டு பொங்கல் பண்டிகை வரை எழுதி விட்டேன். பொங்கலுக்கு ஊரிலிருந்து வந்த தம்பி மற்றும் அவன் குடும்பத்துடன் நாட்களை கழித்ததில் என் டைரி எழுதும் வழக்கம் காணாமல் போயிருந்தது. என் மனைவி தான் என்னை கேலி செய்வாள். நீங்களும் உங்கள் புத்தாண்டு உறுதிமொழியும் என்பாள்.
அதற்கு முந்தைய புத்தாண்டில் என்னுடைய உறுதிமொழி யாரிடமும் கோபம் கொள்ளக் கூடாது என்பது. அதற்காக யோகா தியானம் வகுப்புகளுக்குச் சென்று வந்தேன். வந்ததும் வீட்டில் பிரச்சனை ஆரம்பிக்கும். தினசரி யோகா வகுப்புக்கு போகிறேன் என்று 3 மணி நேரம் பொழுதைப் போக்கி விட்டு வருகிறீர்கள். இங்கு நான் ஒத்தை மனுஷியா எல்லா வேலையும் பார்க்க வேண்டியிருக்கு. உங்க பசங்களை 8 மணிக்கு எழுப்பினா கூட எந்திரிக்க மாட்டிகிறாங்க என்று சண்டைக்கு ரெடியா இருப்பாள். மனமே கோபம் கொள்ளாதே என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தடலாடியாக மார்க்கட்டிற்கு போய் கீரைக்கட்டு வாங்கி வரச் சொல்லி உத்தரவு வரும். முதலிலேயே சொல்லியிருந்தால் யோகா கிளாஸ் போய் வரும் போது வாங்கி வந்திருப்பேன் என்றதற்கு நீங்க என்ன என்கிட்ட சொல்லிட்டா எங்கயும் போறீங்க? என சொல்லவும் கோபம் என் வாய் வரைக்கும் வந்து வார்த்தைகள் தடித்து அன்று காலை பட்டினியுடன் அலுவலகம் செல்ல நேரிடும். நாம் சும்மா இருந்தாலும் நம் நாக்கு சும்மா இருக்காது. எதிராளியும் நம் வீக்னஸைப் பார்த்து சண்டைக்கு இழுக்க ஆரம்பித்து விடுவான். இப்படியாக என் புத்தாண்டு சபதம் குலைந்து விடும்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். பிறக்கும் 2020ல் எப்பாடு பட்டாவது ஒரு குடிசை வீடாவது வாங்கி சொந்த வீட்டில் குடிபுக நினைத்துள்ளேன். இப்போது குடி வந்திருக்கும் இந்த வாடகை வீட்டின் உரிமையாளர் எப்போது பார்த்தாலும் பிரச்சனை பண்ணிக் கொண்டேயிருப்பார். டூ வீலரை அங்கே நிறுத்தாதே! குப்பை கூடையை வீட்டு வாசலில் வைக்காதே! தண்ணீரை செடிக்கு ஊற்றாதே! இரவு 9 மணிக்கு மேல் கேட்டைப் பூட்டி வை! உங்க பசங்க பாருங்க இப்படி கத்துறாங்க. அவங்களை கத்த விடாதே! இப்படி பல நிபந்தனைகளைப் பார்த்து இந்த வருட சபதம் எப்படியும் ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளேன். எப்போதும் என்னுடன் ஒத்துப் போகாத என் மனைவி இந்த விஷயத்தில் ஒத்து வந்தாள். ஆமாங்க நீங்க சொல்றது தான் சரி நானும் இந்த புத்தாண்டில் உங்களுடன் சேர்ந்து சபதம் எடுத்துக் கொள்கிறேன்.
அடுத்த 2021 ஆம் ஆண்டு தைப் பொங்கலை புது வீட்டில் தான் கொண்டாட வேண்டும் என்றாள். சபதம் எடுத்து விட்டோம் எப்போதும் நாம் கொள்ளும் சபதம் போல் இருக்கக் கூடாது. இந்த சபதத்ததை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பதில் நானும் என் சகபத்தினியும் உறுதியாக இருந்தோம். அதற்கான ஆயத்த வேலையாக டிசம்பர் 30ஆம் தேதி நகர வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்திற்குச் சென்று விபரங்களை கேட்டு வந்தோம். நம் சேமிப்பு எவ்வளவு உள்ளது? எவ்வளவு லோன் வாங்க வேண்டி வரும்? என்பதை கலந்து ஆலோசித்ததில் கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும். வட்டி கட்டி விட்டால் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு என்ன பண்ணுவது? வட்டி கட்டத் தவறினால் அபராத வட்டி வேறு கட்ட வேண்டி வரும் என பல பிரச்சனை வந்து 2020 புத்தாண்டு பிறக்கும் முன்பே சொந்த வீட்டுக் கனவு கனவாகவே போனது. என் சபதம் எப்போது தான் நிறைவேறும்? எனக்கே தெரியவில்லை.