DEENADAYALAN N

Abstract

4.8  

DEENADAYALAN N

Abstract

சொர்க்கமே என்றாலும்!

சொர்க்கமே என்றாலும்!

2 mins
268


என் இளைய மகன் அமெரிக்காவில் இருக்கிறார். நாங்கள் அங்கு சென்றிருந்த சமயம் அவரது பல நண்பர்களை அவ்வப்போது சந்திப்போம். ஏறத்தாழ அவர்கள் அனைவருமே முதலில் கேட்கும் கேள்வி ‘உங்க பேர் என்ன?’ என்பதல்ல!!. (அல்ல! அல்ல! அல்ல!) “உங்களுக்கு சொந்த ஊர் எது?” என்பதுதான்.


வெளியூர் செல்லும் சமயங்களில், புதிதாக யார் அறிமுகமானாலும், அவர்கள் முதன்மையாக தெரிந்து கொள்ள ஆர்வப்படுவது நம் சொந்த ஊரைப் பற்றிதான். அலுவலகம் – விளையாட்டு – போட்டி என சிறிய வட்டாரத்தில் ஒருவர் ஒரு சிறிய சாதனையை செய்து விட்டாலும் கூட, மற்றவர்கள் உடனே கேட்கும் கேள்வி “அவர் எந்த ஊர்க்காரர்?” என்பதுதான்.


ஆம். ஒருவருடைய பேரைக் காட்டிலும் ஒருவரை முதன்மையாக அடையாளப் படுத்துவது அவரது சொந்த ஊர்தான்!


நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, ஓரிரு வருடங்கள் பணி செய்து இருபத்தைந்து வயது வரை வாழ்ந்தது எல்லாமே என் சொந்த ஊரான கோயமுத்தூரில்தான்.


கல்பாக்கத்தில் வேலை கிடைத்து மத்திய அரசு பணியில் சேர்ந்தேன். அதுவரை கூட்டுக் குடும்பத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நான் பல நாள் வரை வீட்டு நினைவால் (home sickness) மிகவும் அவதியுற்றேன். கோவையில் - குடும்பம், நண்பர்கள், நண்பர்களுடன் சுற்றித் திரிந்த தெருக்கள், மருதமலை, சென்ட்ரல், ராயல், ராஜா தியேட்டர்கள், அன்னபூர்னா உணவகம், ராமு, சோமு, குணா போன்றவர்களுடன் அடிக்கடி டீயும் தேங்காய் பன்னும் சாப்பிட்ட வேணி பேக்கரி, மாலை வேளைகளில் (அஞ்சல் வழியில் பயின்று கொண்டிருந்த) நெருங்கிய நண்பர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நினைவுகள் என என்னைப் பாடாய்ப் படுத்திய தருணங்களை என்னால் மறக்கவே முடியவில்லை.


ஒவ்வொரு முறை கோவைக்கு வந்து விட்டு, ஓரிரு நாள் விடுமுறையில் தங்கி விட்டு, (நானும் – குடும்பத்தின் பெண் உறுப்பினர்களும்) அழுது கொண்டே கல்பாக்கம் புறப்பட்டுச் சென்ற ரணங்கள் நிறைந்த தருணங்களை இன்று நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.


‘வேலையைத் தான் விட முடியாது. நமக்கு மட்டும் ஒரு ஹெலிகாப்டர் சொந்தமாக இருந்தால் நாள்தோறும் கோவையிலிருந்து கல்பாக்கம் வந்து விட்டு திரும்பி விடலாமே’

என்று விளையாட்டாய் என் உணர்வுகள் எண்ணும்! சொந்த ஹெலிகாப்டர் வைத்திருக்கும் ஒருவன் சொந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எதற்கு வேலைக்கு செல்ல வேண்டும்?’ என அறிவு என் மண்டையில் ஒரு போடு போடும்!


இடையில் கோயமுத்தூரில் ஒரு தனியார் மில்லில் வேலைக்கு வாய்ப்பு வந்தது! கோவை சென்று அந்த வேலையில் சேர்ந்து விடலாமா என்று யோசித்த போது, ‘மதிப்பு மிகுந்த ஒரு மத்திய அரசுப் பணியை விட்டு விட்டு ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்கு போகலாமா என்று எண்ணுகிறாயே… லூசாடா நீ..’ என்று உறவினர்கள் இடித்துரைத்த பின் தான் என் சுயம் உணர்ந்தேன்.


என்னுடைய திருமணம்தான் (என் மனைவியும் கோயமுத்தூரேதான்) என்னுடைய இந்த மனப்போராட்டத்திலிருந்து எனக்கு விடுதலை வாங்கித் தந்தது!


இப்போது என் சொந்த ஊரான கோவையில்தான் வசிக்கிறேன். என் இரு மகன்களும் மணமாகி மனைவி, குட்டிப் பேரப் பிள்ளைகளுடன் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்போதும் எங்கள் மனம் ஏங்குகிறது. ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, அவர்கள் இருவரும் கோவைக்கே வந்து எங்களுடனேயே settle ஆகி விடமாட்டார்களா! அப்படி எங்கள் குட்டிப் பேரப் பிள்ளைகளோடு இங்கே சொந்த ஊரில் வாழும் சந்தர்ப்பம் அமைந்தால்.. அதற்கு ஈடாக சொர்க்கத்தையே கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்! (ஊம்ம்.. ஆசை தோசை அப்பளம் வடை…. என்று யாரோ முணுமுணுப்பது காதில் விழுகிறது!)


எங்கள் மகன்களிடம் எங்களின் இந்த ஆசையை சொன்னால் அவர்கள் சொல்கிறார்கள்: “நாங்கள் பிறந்த வளர்ந்த படித்த எங்கள் சொந்த ஊர் கல்பாக்கம்!”


ஞாயம்தானே!


Rate this content
Log in

Similar tamil story from Abstract